சேர மன்னர் வரலாறு - குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறை
தான் சென்ற இடங்களிலெல்லாம் சீரிய வெற்றி பெற்றது குறித்துத் தன் முன்னோரைப் போலவே இரும்பொறையும் அயிரை மலைக்குச் சென்று கொற்றவையைப் பரவினான். குடவரும் குட்டுவரும் பொறையரும் பூழியரும் கொங்கரும் மரத்தையோரும் பிறரும் வந்திருந்தனர். பெருங்குன்றூர் கிழார், விறலி யொருத்தியை நோக்கி, “பொறையன், சந்தனமும் அகிலும் சுமந்து செல்லும் யாற்றில் ஓடும் வேழப் புணையினும் மிக்க அளியன்; அவன்பாற் செல்க; சென்றால் நல்ல அணிகலன்களைப் பெறுவாய்[21]” என்ற ஆற்றுப் படைப் பாட்டைப் பாடி இன்புறுத்தினார்.
சின்னாட்குப்பின், நம் குடக்கோ, அறவேள்வி யொன்று செய்தான். பல நாடுகளிலிருந்தும் சான்றோர் பலர் வந்திருந்தனர். அவ் வேள்வியை அவனுடைய அமைச்சருள் ஒருவனான மையூர் கிழான் என்பான் முன்னின்று நடத்தினான். இந்த மையூர் இப்போது தேவிகுளம் என்று பகுதியில் உளது. இங்கே பழங்காலக் கற்குகைகளும் வேறு சின்னங்களும் உண்டு. வேள்வி ஆசானாகிய புரோகிதன் முறையோடு சடங்குகளைச் செய்து வருகையில் தவறொன்றைச் செய்து விட்டான் மையூர்கிழான் அதனை எடுத்துக் காட்டினான். அது குறித்துச் சொற்போரும் ஆராய்ச்சியும் நடந்தன. மையூர் கிழான் கூறுவதே சிறந்ததாக முடிவாயினமையின் அவனையே வேள்வியாசனாய் இருந்து வேள்வியை முடிக்குமாறு வேந்தன் ஆணையிட்டான்.
அந் நிலையில் பெருங்குன்றூர் கிழாரும் வந்து சேர்ந்தார். அவர் வருகையை வேந்தன் வியப்போடு நோக்கினான். அவன் நோக்கத்தைப் பெருங்குன்றூர் கிழார் அறிந்து கொண்டு, “மாந்தரன் மருகனே, இனிய நீர் போலும் தண்மையும், அளப்பரும் பெருமையும், குறையாச் செல்வமும் கொண்டு, விண்மீன்களின் இடைவிளங்கும் திங்கள் போலச் சுற்றம் சூழ இருக்கின் றாய், நீயோ உரவோர் தலைவன்; கொங்கர்கோ; குட்டுவர் ஏறு, பூழியர்க்கு மெய்ம்மறை; மரந்தையோர் பொருநன்; பாசறை இருக்கும் வயவர்க்கு வேந்து; காஞ்சி மறவரான சான்றோர் பெருமகன்; ஓங்குபுகழ் கொண்ட உயர்ந்தோன். எல்லாவற்றிற்கும் மேலாக, நீ காவிரி நாடு போன்ற வண்மையும், கற்புறு பொற்பும், கலங்காத நல்லிசையுமுடைய நல்லாளுக்குக் கணவன்; நின்வாழ் நாள் வெள்ள வரம்பினவாக என உள்ளிக் காண வந்தேன்[22]” என்றார். அப் பாட்டின் நலம் கண்டு சான்றோர் பலரும் அவரது புலமையை வியந்த பாராட்டினர். வேந்தனும் அவர்க்கு மிக்க சிறப்புகளைச் செய்தான்.
பின்பு, அங்கு நடைபெற்ற வேள்வியில் புரோகிதன் தவறு செய்ததும் மையூர் கிழான் எடுத்துக் காட்டியதும் வேந்தன் முடிவு கூறியதும் சான்றோர்களால் பெருங் குன்றூர் கிழார் அறிந்தார். அவர், வேந்தனை நோக்கி, “பொறை வேந்தே, வேள்விச் சடங்குகட்குரிய விதிவிலக்குரைகளின் பொருள் காண்பதில் பண்டை ஆசிரியர்களின் வகுத்தறிவது நம்மனோர்க்கு அரிது; உண்மை காணவேண்டின் சதுக்கத் தேவரைக் கேட்பது தக்கது;
‘தவமறைந் தொழுகும் தன்மை யிலாளர் அவமறைந் தொழுகும் அல்லவற் பெண்டிர் அறைபோ கமைச்சர் பிறர்மனை நயப்போர் பொய்க் கரியாளர் புறங்கூற் றாளர்என் கைக்கொள் பாசத்துக் கைப்படுவோர் எனக் காத நான்கும் கடுங்குரல் எடுப்பிப் பூதம் புடைத்துணும் பூதசதுக்கத்தின்[23]’ |
இயல்பு இது; இத் தெய்வம் காவிரிப்பூம்பட்டினத்தில் இருப்பது; பார்ப்பனி மருதியென்பாள் தன் குற்றத்தைத் தானே யறியாது யான் செய்த குற்றத்தை அறிகில்லேன்[24]’ என்று சதுக்கப் பூதரைக் கேட்டு உண்மை தெரிந்த வரலாறு நாடறிந்த தொன்று” என எடுத்துரைத்தார்.
அங்கிருந்த சான்றோரும் வேந்தரும் வஞ்சிநகர்க் கண் பூத சதுக்கம் அமைக்க வேண்டுமென வேந்தனை வேண்டிக் கொண்டனர். சின்னாட்களில் பூத சதுக்கம் அமைத்துச் சாந்தி விழாவும் செய்யப்பட்டது. விழாவின் இறுதியில் வந்திருந்த சான்றோர் பலரும் குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறையை வாழ்த்தினர். பெருங்குன்றூர் கிழார், “மழை தப்பாது பொழிக, கானம் தழைக்க; மாவும் புள்ளும் வண்டினமும் பிறவும் இனம் பெருகப் புல்லும் இரையும் தேனும் இனிதுண்டு இன்புறுக; இவ்வாறு நன்பல வூழிகள் செல்க; கோல் செம்மையாலும், நாட்டவர் நாடோறும் தொழுதேத்தலாலும், உயர்ந்தோர் பரவுதலாலும் அரசுமுறை பிழையாது செருவிற் சிறந்து கற்புடைக் காதலியுடன் நோயின்றிப் பல்லாண்டு வேந்தன் வாழ்க[25]” என்று வாழ்த்தினர்.
இளஞ்சேரல் இரும்பொறை, “மருளில்லார்க்கு மருளக் கொடுக்க என்று உவகையின் முப்பத்தீராயிரம் காணம் கொடுத்து அவர் அறியாமை, ஊரும் மனையும் வளமிகப் படைத்து, ஏரும் இன்பமும் இயல்வரப் பரப்பி,” “பெருங்குன்றூர் கிழார்க்கு எண்ணற்காகா அருங்கல வெறுக்கையொடு பன்னூயிரம் பாற்பட வகுத்துக் காவற்புறம் விட்டான்” என்று பதிற்றுப்பத்தின் பதிகம் கூறுகிறது.
குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறை பதினாறாண்டு அரசு வீற்றிருந்தான்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறை - History of Chera - சேர மன்னர் வரலாறு - பெருங்குன்றூர், வேந்தன், சான்றோர், மையூர், கிழார், இளஞ்சேரல், அவர், குடக்கோ, கிழான்