சேர மன்னர் வரலாறு - குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறை
பாண்டி நாட்டுத் தென்காசிப் பகுதியில் கல்லாக நாடு என்பது ஒரு பகுதி[11]. அப் பகுதி அரிய காவற்காடு அமைந்து சீர்த்த பாதுகாப்புடைய இடமாகும். அப் பகுதியில் அவர்கள் ஐந்து இடங்களில் வலிய எயில்களை அமைத்துக் கொண்டு சேர நாட்டவரைப் போர்க் கிழுத்தனர். இளஞ்சேரல் இரும்பொறை, பொறையரும் குட்டுவரும் பூழியரும் கலந்து பெருகிய பெரும் படையுடன் வந்து கங்கைப் பகுதியில் பாசறை யிட்டான்.
கோப்பெருஞ்சோழன் மக்களும் பழையன் மாறனும் கல்லக நாட்டில் அமைத்திருந்த எயில்களைச் செவ்வையாகக் காத்து நின்றனர். போர்க்குரிய செவ்வி எய்தியதும் போர் தொடங்கிற்று. சேரமான் ஒவ்வொரு எயிலாக முற்றி நின்று பொரத் தலைப்பட்டான். அதனால் அவனுடைய பாசறை இருக்கைக் காலம் நீட்டிப்பதாயிற்று. அவனது பிரிவு மிக நீண்டது கண்ட இரும்பொறையின் கோப்பெருந்தேவிக்கு ஆற்றாமை பெரிதாயிற்று. அதனைக் குறிப்பால் உணர்ந்த பெருங் குன்றூர் கிழார் இரும்பொறை பாசறையிட்டிருக்கும் இடத்துக்கு வந்தார். அப்போது பகைவர் எயிலொன்று முற்றப்பட்டிருந்தது.
பாசறைக்கண் களிற்றியானைகள் மதம் மிக்கு மறலின; போர் எதிராது எயில் காத்தல் ஒன்றே செய்தனர். யானை மறவர், மதம்பட்ட களிறுகளைப் பிடியானைகளைக் கொண்டு சேர்த்து மதம் தெளி வித்தனர். அவ்வாறு செய்தும், பல களிறுகள் மதம் குன்றாமல் மைந்துற்றன. குதிரைகள் போர்க் கோலம் செய்யப் பெற்றுப் பகைவர் போர் தொடுக்காமையால் கனைத்துக் கொண்டிருந்தன. கொடியுயர்த்திய தேர்கள் நிரல்பட நின்று நிகழ்ந்தன. கிடுகு தாங்கும் வாள் வீரரும் வேல் வீரரும் போர் நிகழாமை கண்டு, தாம் ஏந்திய படை விளங்க வேந்தனது ஆணையை எதிர்நோக்கி ஆரவாரித்து நின்றனர். இவ் வண்ணமே நாள்கள் பல கழிந்தன.
பாசறை யிருக்கைக்குப் பெருங்குன்றூர் கிழார் வந்தது வேந்தனுக்குப் பெரு வியப்பை உண்டு பண்ணிற்று. வினைமுற்றி வெற்றி பெறுங்காலையில், பரணர் முதலியோர் போந்து வேந்தனைப் புகழ்ந்து பாடி இன்புறுத்துவது முறை. அம் முறையன்றி, வினை நிகழ்ச்சிக் கண் வருவது வேந்தற்கு வியப்பாயிற்று. அதனை உணர்ந்த சான்றோரான கிழார், “வேந்தே, போர் நிகழாமையால் நின் படை முழுதும் போர் வெறி மிகுந்து மைந்துற்றிருக்கிறது; பகைவர் தாமும் போர் எதிர்கின்றிலர்; நாள்கள் பல கழிகின்றன; ஆதலாற்றான், யான் நின்னைக் காணப் பாடி வந்தேன்[12]” என்றார். வேந்தன் தன் மகிழ்ச்சியைத் தன் இனிய முறுவலாற் புலப்படுத்தினான். சான்றோர் அவனோடே தங்கினர்.
புலமைமிக்க சான்றோர் உடனிருப்பது சூழ்ச்சித் துணையாதலை நன்கு அறிந்தவன் சேரமான்; அதனால் அவன் அவரைத் தன்னோடே இருத்திக் கொண்டான். இரண்டொரு நாட்குப்பின் ஒருபால் போர் தொடங்கிற்று. சேரன் படைமிக்க பெருமிதத்துடன் சென்றது. அவனே அதனை முன்னின்று நடத்தினான். அவனுடைய போருடையும் பெருமித நடையும் பெருங்குன்றூர் கிழார்க்குப் பெருமகிழ்ச்சியைத் தந்தன. பாசறை யிடத்திருந்த பார்வல் இருக்கைக்கண் இருந்து அவர் போர்வினையைப் பார்த்துக் கொண்டிருந்தார். பின்னர், வேந்தன் வெற்றி விளங்கத் திரும்பி வந்தான். கண்ட புலவர் பெருந்தகை , “யானைத் தொகுதியும் கொடி அசையச் செல்லும் தேர்நிரையும், குதிரைப் பத்தியும் ஏனை மறவர் திரளும் ஆகிய நின் தானை அணிகொண்டு செல்லும் செலவு காண்போர்க்கு மிக்க இன்பத்தையே தருகிறது. ஆனால், ஒன்று, இனிது சென்று நன்கு போர் உடற்றியவழி மிக்க அருங்கலங்களை நல்குவது போர்வினை; ஆயினும், நின்னை நேர்பட்டுப் பொருது வீழ்கின்ற பகைவர் கண்கட்கு அச்சத்தையும் அவலத்தையும் அன்றோ அது தருகிறது [13]” என்று இனிய இசையோடு பாடினார். “போர்ச் செலவுக்கு அவ்வியல்பு இல்லையாயின், அது நன்மையும் தீமையுமாகிய பயன்களை விளைக்காதன்றோ?” என வேந்தன் கூறினன். சான்றோரும் “ஆமாம்” எனத் தலையசைத் தனர். “இதுபற்றியே. அறிவுடையோர் போர்வினையைத் தவிர்த்தற்கு எப்போதும் முயன்று கொண்டிருக்கின்றனர்” எனச் சேரமான் கூறி முடித்தான்.
மறுபடியும், ஒருபால் போர் தொடங்கிற்று; சேரமான் படை மறவர்களுள், பூழியர் யானைகளைத் தொழில் பயிற்றுவதில் கை தேர்ந்தவர், அவர்களுடைய யானைகள் மழைமுகிலின் முழக்கங் கேட்டாலுமே அதனைப் போர் முரசின் வெம் முழக்கம் எனக் கருதி வெனில் கட்டை அறுத்துக் கொண்டு வெளிவரும் வீறுடையவை. அவைகள் ஒருபால் அணி வகுத்துச் சென்றன. குதிரைப்படை, கடலலை போல் வரிசை வரிசையாய் வந்தன. வேல் வாள் வில் முதலிய படை ஏந்தும் மறவர் போர் தொடங்கினர். சிறிது போதிற் கெல்லாம் பகைவர் படை உடைந்து ஓடலுற்றது.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறை - History of Chera - சேர மன்னர் வரலாறு - போர், பகைவர், சேரமான், பாசறை, மறவர், வேந்தன், ஒருபால், மதம், கொண்டு, தொடங்கிற்று, பகுதியில், கிழார்