சேர மன்னர் வரலாறு - குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறை
பெருங்குன்றூர் கிழார் தனது பெருங்குன்றூர் அடைந்து சின்னான் இருந்துவிட்டுக் கொங்குநாடு கடந்து சோழ நாட்டுக்குச் சென்றார். அங்கே உறையூரின்கண் சோழன் உருவப்பஃறேர் இளஞ்சேட் சென்னி என்பவன் ஆட்சி செய்துவந்தான். சான்றோர் வரவுகண்ட சென்னியும் மிக்க அன்போடு வரவேற்று உரிய சிறப்புக்களைச் செய்தான். “வறுமை என்பது எத்தகைய அறிஞரது அறிவையும் கெடுத்துவிடும்; விருந்து கண்டு அஞ்சும் திருந்தா வாழ்வும் அதனால் உண்டாவது. யான் வறுமையுற்று வாடுகின்றேன்; அவ் வாட்டத்தை உடனே களைந்தருள வேண்டும்[3]” என்று தனது கருத்தைச் சோழ வேந்தனுக்குப் பெருங்குன்றூர் கிழார் எடுத்துரைத்தார். புலவர்க்குப் புக்கிலாய் விளங்கும் சோழர் பெருமான், அவர் கருத்தை முன்னமே அறிந்து பெரும் பரிசில் நல்கிவிடுத்தான். சான்றோரும் அவனை மனமார வாழ்த்திவிட்டுத் திரும்பி வரலானார்.
திரும்பி வருங்கால், அவர் கீழ்க் கொங்கு நாடு நடந்து வையாவி நாட்டு வழியாகத் தனது பொறை நாட்டுக்கு வரவேண்டியவராயினார். அதற்குக் காரணமும் உண்டு. கையாவி நாட்டில் பொதினி (பழனி) மலைக்கு அடியில் உள்ள ஆவிகுடியில் இருந்து பெரும் பேகன் என்ற ஆவியர் பெருமகன் பெரு வள்ளன்மை கொண்டு விளங்கினான். அவன் முல்லைக்குத் தேர் ஈத்த வேள் பாரி போல, மயிலுக்குப் போர்வை அளித்த வள்ளியோன். அவற்குக் கண்ணகி யென்பாள் கோப்பெருந்தேவியாவாள். அவள் வான்தரு கற்பும் மான மாண்பும் உடைய பெருமக்கள். அந்த வையாவி நாட்டில் நல்லூர் ஒன்றில் பெரு வனப்புடைய பரத்தை யொருத்தி வாழ்ந்தாள். அவன்பால் பெரும் பேகனுக்கு நட்புண்டாயிற்று. அதனால், அவன் கண்ணகியைப் பிரிந்து பரத்தையின் கூட்டத்தையே பன்னாளும் விரும்பி ஒழுகினான். அவனது புறத் தொழுக்கம் ஆவியர் பெருங்குடிக்கு மாசு தருவது கண்ட கண்ணகி, தனித்ததொரு பெருமனையில் இருந்து வருந்துவாளாயினள். இச் செய்தி பெருங்குன்றூர் கிழார்க்குத் தெரிந்தது. அவள் காரணமாகப் பேகனைக் காண்டல் வேண்டுமென்று நினைத்து, வையாவி நாட்டை அடைந்து கண்ணகியின் மனநிலையை உணர்ந்தார், பின்பு பெரும் பேகனைக் கண்டார். சான்றோர் சால்பறிந்து பேணும் தக்கோனாகிய பேகன், அவரை வரவேற்று அவர்க்குப் பெரும் பொருளைப் பரிசில் நல்கினான்.
பெருங்குன்றூர் கிழார் முதலிய அந் நாளைச் சான்றோர், வெறும் பொருட்காகப் பாடித் திரியும் வாணிகப் பரிசிலரல்லர். அவர் பேகனை யடைந்தது பரிசில் குறித்தன்று; அதனால், அவர், “வள்ளால், யான் வேண்டும் பரிசில் ஈதன்று” என்றார். தனது புறத் தொழுக்கம் அவர்க்குத் தெரியாது என எண்ணிய பெரும் பேகன் வியப்புற்று நோக்கினான். “ஆவியர் கோவே, காடுமலைகளைக் கடந்து நேற்று இவ்வூர் வந்த யான் ஓரிடத்தே தனித்துறையும் நங்கையார் மாசறக் கழுவிய மணிபோல் விளங்குமாறு தன் குழலை நெய்விட்டு ஒப்பனை செய்து புதுமலர் சூடி மகிழச் செய்தல் வேண்டும். அதனைச் செய்விக்கும் உரிமை யுடையவன் நீயே; நீ அதனைச் செய்வதொன்றே யான் நின்பால் பெற விரும்பும் பரிசில்; வேறு ஒன்றும் இல்லை[4]” என்ற கருத்தமைந்த பாட்டை இசை நலம் விளங்க யாழிலிட்டுச் செவ்வழிப் பண்ணிற் சிறக்கப் பாடினர். வையாவிக் கோவாகிய பெரும் பேகன் முதற்கண் தன் தவற்றுக்கு நாணி அவர்க்கு உரிய பரிசில் நல்கிவிடுத்தான். சான்றோரும் பின்பு தனது பெருங்குன்றூர் வந்து சேர்ந்தார்.
பெருங்குன்றூர் கிழார் சோழநாடு சென்று திரும்பி வருவதற்குள், பொறை நாட்டில் சேரமான் குடக் கோச்சேரல் இரும்பொறை இறந்தான். அவன் தம்பி குட்டுவன் இரும்பொறைக்கு மையூர் கிழான் மகள் வேண்மாள் அந்துவஞ்செள்ளை என்பவன்பால் பிறந்த மகனான குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறை சேரமானாய் அரசுகட்டில் ஏறினான். மூத்தவனான சேரல் இரும்பொறை இறக்கு முன்பே குட்டுவன் இரும்பொறை இறந்துபோனமையின், இளஞ்சேரல் இரும்பொறை அரசுக்குரியவனானான்.
இளஞ்சேரல் இரும்பொறை அரசுகட்டிலேறிய சின்னாட்கெல்லாம், காவிரியில் வடகரையில் உள்ள கொங்கு நாட்டில், அதன் கிழக்கில் இருந்த விச்சி மலைக் குரிய விக்சிக்கோவும் சோழ பாண்டிய அரசிளஞ் செல்வர்களும் இரும்பொறையின் இளமையை இகழ்ந்து குறும்பு செய்தனர். கீழ்க் கொங்கு நாட்டிலிருந்த கொங்கரும் பொறையரும் பெருந் திரளாக இளஞ்சேரல் பக்கல் நின்று கடும் போர் புரிந்ததனால், இரு வேந்தரும் விச்சிக் கோவும் தோற்றோடினர். இரும்பொறையும் வெற்றி வீறு கொண்டு திரும்பினான்.
விச்சிமலையென்பது இப்போது திருச்சிராப்பள்ளி வட்டத்தில் பச்சைமலை என வழங்குவதாகும். இம் மலையில் வாழும் மலையாளிகள் அதனைப் பச்சிமலை என்று கூறுவதும், அம் மலையின் கிழக்கே அதன் அடியில் விச்சியூர் என்று ஓர் ஊர் இருப்பதும், விச்சி நாட்டதெனப் பரணர் கூறும் குறும்பூர்[5]” அப் பகுதியில் இருப்பதும் இம் முடிவு வற்புறுத்துகின்றன.
- ↑ 3. புறம். 266.
- ↑ 4. புறம். 147.
- ↑ 5. குறுந், 828, விச்சியூர், பின்பசிறுவிச்சியூர் ருெவிச்சியூர் என இரண்டாயிற்று; அவற்றுள் பெருவிச்சியூர் மறைந்துபோகச் சிறுவிச்சியூர் இப்போது சிராப்பள்ளி சென்னைப் பெருவழியில் சிறுவாச்சூர் என நிலவுகிறது.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறை - History of Chera - சேர மன்னர் வரலாறு - பெருங்குன்றூர், பெரும், இரும்பொறை, பரிசில், தனது, பேகன், நாட்டில், கிழார், அவர், இளஞ்சேரல், யான், சான்றோர், அவன், திரும்பி, வேண்டும், அதனால், கொங்கு, வையாவி