புதுக் கவிதைகள் - இரும்புத் திரை
- பாலமுருகன் அம்மா! என் ஆதர்ச கனவுகளுக்கு அர்த்தம் தந்தவளே! என் பிஞ்சு நெஞ்சின் பிரபஞ்சமே! எனக்குள் ஆயிரமாயிரம் தேக்குகளின் அர்த்த பலம் விதைத்தவளே! எனக்கு நீ சுவாசமாய் உனக்கு நான் உன் உடலின் உதிரமாய் இருந்த நாட்கள்! என் கையடிபட்டவனின் கன்னச் சிவப்பை கவனிக்காமல் என் கைக் கன்றல் கண்டு கண்ணீர் விட்டவளே! காய்ச்சல் என் உடல் சுட்டதற்காக அம்மன் கோவிலில் உன் உடல் சுட்டுக் கொண்டவளே! நோயால் நான் பட்டினி கிடந்தால் நோன்பில் நீ பட்டினி கிடப்பாயே! என் வெற்றி கேட்டு மத்தாப்பாய் உன் உதடுகளில் அரோகணிக்கும் புன்னகைப் பூக்களால் என்னுள்ளே நீ போட்ட சிம்மாசனங்கள்! இடறி நான் வீழ்ந்த போது தட்டி விட்ட தரைக்கு - நீ இட்ட சாபங்கள்! பத்தாப்பு நான் பாசானதும் உன் சிறுவாட்டு பணத்துல ஊர் முழுக்க நீ வாங்கித் தந்த ஆரஞ்சு மிட்டாய்கள்! காலேஜ் பீசிற்காக நீ அனுப்பிய அந்த வியர்வை மணக்கும் உன் உயிரின் ஊசல் சொல்லும் அந்தப் பணம்! ஆனால் இன்று ... பணக்கார மாமனார் எனக்கு அவர் பெண்ணை தாரை வார்க்க! தூரத்தில் ஒதுங்கி நிற்கும் உன் கண்ணிரண்டும் நீரை வார்க்க! பணத்தால் பங்கப்பட்டுப் போன என் பாசத்திற்கு சப்பைக் கட்டு கட்ட ஊருக்கு மத்தியில் பெருமை பேசி விட்டு சேலைத் தலைப்புக்குள் - நீ தேம்பிய தேம்பல்கள்! அம்மா! என் ஆதர்ச கனவுகளுக்கு அர்த்தம் தந்தவளே! இங்கே ... அய்யர் மந்திரம் சொல்ல என் உதடு எந்திரமாய் அதை திரும்பச் சொல்ல எங்கெங்கிருந்தோ அரைகுறை ஆசீர்வாதங்களுடன் அட்சதைகள்! ஆனால்... அம்மா! என் மனசு நீ போடும் அந்த ரெண்டு பச்சரிசிக்குத் தான் பரிதவிக்கின்றது! இருந்தாலும் என்ன செய்ய? அடிமாட்டு விலைக்கு என்னை நானே விலை கூவி விட்டேனே! அம்மா! அம்மா! எனக்காக இரும்புச் சிலுவை சுமந்தவளே! உனக்கும் எனக்கும் இடையில் ஒரு இரும்புத் திரையாய் என் மாமனாரின் பொல்லாத காசு மிரட்டுகிறதே! ... நான் என்ன செய்ய கல்வி முதல் கலவி வரை - எனக்கு கற்றுத் தந்தவளே! அம்மா! என் ஆதர்ச கனவுகளுக்கு அர்த்தம் தந்தவளே நான் என்ன செய்ய? |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இரும்புத் திரை - புதுக் கவிதைகள் - Poems - கவிதைகள் - நான், அம்மா, தந்தவளே, என்ன, செய்ய, ஆதர்ச, எனக்கு, கனவுகளுக்கு, அர்த்தம்