புதுக் கவிதைகள் - மீண்டும் கரிசல்காட்டுக் கதை

- இ. சூசை ஆரோக்கியம் வைகை ஆத்துத் தண்ணியே! வழியோரத் தென்னம்புள்ளே! பட்டாம்பூச்சி போல பளிச்சுன்னு சுத்திவந்தா பாதகத்தி படக்குன்னு பருவத்துக்கு வந்த தென்ன! முறைமாமன் கண்ணுபடுமின்னு முந்தானை போட்டாளோ! தட்டான் பிடிக்க நான் தடமறியாம போக படக்குன்னு கத்தியவ பறக்கவச்ச சுகமிருக்கு... ஆத்துல குளிக்கையில அவுத்துவச்ச துணிமணியை அள்ளிக் கொண்டு ஒளிச்சுவச்ச நினைவிருக்கு... எச்சிவச்சு நான் கடிச்ச எள்ளுருண்டை வாங்கித்தின்னா குருவி பிடிக்க போகையில குறிச்சுவச்ச எளவுமுள்ளு குத்திநானும் துடிதுடிக்க முள்ளுத்தச்ச இடத்தில் எருக்கம் பாலுவச்சு இதமாத் தடவிவிட்டா... ஆத்துல மீன்பிடிக்க அள்ளிச் சொருகிய பாவாடை ஓரத்தில் அழகு கொஞ்சம் தெரிந்துவிட மீனுபிடிக்க வந்த நானும் மிதந்து போனேன் கற்பனையில் திருவிழாக் கூட்டத்தில் திருட்டுத்தனமா போட்டோ எடுத்தோம் களையெடுப்பு காட்டுக்குள்ள களவானித் தனமாக கஞ்சிக் கலையத்துல திருடித் தின்னோம் தீசல் போல திரிஞ்சோம் கருவேலம் காட்டுக்குள்ளே குச்சி பெறக்கப் போகையில குறிச்சுவச்ச எளவுமுள்ளு பாதகத்தி மவ பாவாடையை படக்குன்னு கிழிச்சுவிட என் துணியை எடுத்து நானும் உடுத்தி விட்டேன். ஓடித்திறிஞ்ச அவ ஒய்யாரமா நின்னுபோனா இறகொடிஞ்ச பறவை போல இளவு மகளால ஆனேனே! இனி அவள பாக்க முடியாது பட்டு முகத்தைக் காண ஆகாது. சாதி தடுத்துவிடும் சாத்திரங்கள் முந்திவிடும் குணமெல்லாம் பின்னேபோக குலம்போயி முந்திநிக்கும் கல்யாணம் முடிஞ்சு போகும் காத்தாடி போல் திக்கத்துப் போனேனே! சாதி தீயே! இப்ப எங்க பச்சை வயல்வெளிகளிலும் பத்தி எரிவதென்ன! |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மீண்டும் கரிசல்காட்டுக் கதை - புதுக் கவிதைகள் - Poems - கவிதைகள் - படக்குன்னு