புதுக் கவிதைகள் - காதலாய் கசிந்துருகி...
ஆதாம் ஏவாளில் ஆரம்பித்து அம்பிகாபதி அமராவதி வழியாய் வந்து உனக்குள்ளும் எனக்குள்ளும் விழுந்து விட்ட அந்த சின்னஞ்சிறு காதல் விதை எத்தனை விரைவில் விருட்சமாகி விட்டது தெரியுமா? கண்ணும் கண்ணும் கொள்ளையடித்து வந்தததில்லையடி நம் காதல்..... விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவு தோழி நம் காதல்...... உன் கண்ணிசைவிற்காய் காலம் காலமாய் நான் காத்துக் கிடந்த இரகசியம் தெரியுமா உனக்கு? ஒரு புன்னகையால் பொழுது புலர்ந்தது முதல் என்னை பரிதவிக்க விட்டவளே! உன் நகம் பார்த்த ஞாபகம் கூட எனக்குள் நம்பிக்கை விதைத்திருக்கிறதடி...... கவிதை கூட காயப்படுத்துமா? ஆனால் கவிதையாய் வந்த உன் வார்த்தைகள் என்னை வதைத்திருக்கிறது தெரியுமா? உனக்காக என் கண்கள் பிரசவித்த கண்ணீரையும் இதயம் பிரசவித்த கவிதைகளையும் பற்றி என் தலையணையைக் கேள்......! கதை கதையாய் சொல்லும்........ காதல் கடிதம் எழுதிக் கொள்பவர்களையும்........ எச்சில் இனிப்புகளை ருசி பார்ப்பவர்களையும்....... பரிசுப் பொருட்களை பரிமாறிக் கொள்பவர்களையும்....... மணிக்கணக்காய் அர்த்தமின்றி கிசுகிசுத்து கொண்டிருப்பவர்களையும்......... நான் காதலர்களாய் அங்கீகரித்ததில்லை. ஆனால்..... காதலிக்கத் தொடங்கிய பின்பு செடியில் பூத்த மல்லிகையை பறிக்காமல் பார்த்து கொண்டிருந்து சாயங்காலத்தில் அது வாடிப் போகையில் வருத்தப்பட கற்றுக் கொண்டேன்...... நடுநிசி உறக்கத்தில் என்னைக் கடித்த எறும்பை நசுக்காமல் எடுத்து தரையில் நகர விட கற்றுக் கொண்டேன்.... நந்தவனத்து பூ ரசிக்கையில் எனை அறியாது என் கைபட்டு சிதைந்து போன பட்டாம்பூச்சியின் சிறகுகளுக்காய் துக்கம் அனுசரிக்க கற்றுக் கொண்டேன்..... புல்தரை புற்களுக்கு வலிக்குமே என்று பூட்ஸ் கழற்றி நடக்கக் கற்றுக் கொண்டேன்..... அறுந்து விழுந்த பல்லி வாலை பத்திரமாய் அடக்கம் செய்ய கற்றுக் கொண்டேன்.... இத்தனையும் நான் கற்றுக் கொள்ள எனக்குள் தூண்டுதலாய் இருந்தவள் நீ....நீ...நீ..... எனக்குள் கனவுகள் விதைத்தவளே! கவிதைகள் வளர்த்தவளே! உனக்காக என்னுள் நான் ஒரு தோட்டம் வளர்க்கிறேன்....... அந்த தோட்டம் மிக மிக மிக அழகானது .... பச்சை செடிகளும் பசுங்கொடிகளும் சிரிக்கும் சின்னஞ்சிறு சித்திர பூஞ்சோலை அந்த தோட்டம்..... அந்த தோட்டத்தில் நான் யாரையும் அனுமதிப்பதில்லை, அதனால் இந்த ஊர் முழுமைக்கும் என் மேல் தீராத கோபம். அந்த தோட்டத்தில் என்னவெல்லாம் இருக்கிறது தெரியுமா? கொஞ்சம் காதை கொடேன்.... உனக்கு மட்டும் ரகசியமாய் சொல்கிறேன். உன் உதட்டை உருகவைக்கும் ரோசாப்பூ..... உன் கண்களை ஞாபகப் படுத்தும் சூரியகாந்திப் பூ....... உன் சிரிப்பை நினைவுறுத்தும் பாரிஜாதப் பூ..... உன் நடையை நினைவூட்டும் அசையும் கொடிகள்.... உன் இமையை நினைவூட்டும் பட்டாம் பூச்சிகள்.... சித்திரமே....! செந்தமிழே..! செவ்வான சீரழகே......! அந்த தோட்டம் முழுமையும் செடிகளாய் கொடிகளாய்..... மலர்களாய் ..... நீ தான்..... இருக்கிறாய். அந்த தோட்டத்திற்கு நான் என் உதிரத்தால் நீர் பாய்ச்சி... வியர்வையால் உரம் போடுகிறேன்.... உன் தாவணியை வாரிக்கொண்டு போன அந்த தென்றலோடு கூட நான் போர் தொடுத்திருக்கிறேன்.... உன்னை தொட்ட தாவணியை தொட அதற்கு உரிமையில்லை என்பதற்காக.... அப்படி இருக்கையில் முழுமையாய் நீ மட்டுமே நிறைந்திருக்கும் அந்த தோட்டத்தில் மற்றவர்களை எப்படி என்னால் அனுமதிக்க முடியும்....? இது ஏன் இந்த ஊருக்கு புரிய மாட்டேன் என்கிறது......? எனக்காக நீயும்.... உனக்காக நானும் வாழ்ந்த அந்த நாட்கள் இன்னமும் சரித்திரமாய் என் நெஞ்சச்சுவடுகள் நிற்கிறது தோழி....! உன் பாவாடை சரசரப்பை கூட துல்லியமாய் புரிந்து கொள்ள முடிந்த எனக்கு அந்த நாள் சம்பவம் மட்டும் புரியவே இல்லை.... கம்மக்காட்டோரம்... கருவேல மரத்தடியில் என்னை காத்திருக்க சொல்லிவிட்டு ... அந்த கம்மானூர் காரன் கட்டின தாலியோட காணாம போயிட்டியே ... என்னை கண்டுக்காம போயிட்டியே...! அது மட்டும் ஏனென்று இன்று வரைக்கும் எனக்கு புரியவே இல்லையடி .....! இப்ப ஊர்ல எல்லாரும் சொல்றாங்க நான் என் தோட்டத்தை திறந்து விடணும்னு ... அது எப்படி முடியும்...? உனக்குள் நானும் .... எனக்குள் நீயும் ... புதைந்து போன நாட்களின் நினைவாய் ஒரு கல்லறை கட்டி வைத்திருக்கிறேன்.... அந்தக் கல்லறையில் தான் ... உன் காதலும் ... என் காதலும் ... நம் காதலாய் ... நிம்மதியாய் தூங்கிக் கொண்டிருக்கின்றன. அந்த சுகமான நித்திரையை கலைக்க என்னால் முடியாது.... இன்றைக்கு மட்டுமல்ல ... என்றைக்குமே அந்த தோட்டம் ..... எனக்கு.... எனக்கு மட்டும்தான் சொந்தம். |
தேடல் தொடர்பான தகவல்கள்:
காதலாய் கசிந்துருகி... - புதுக் கவிதைகள் - Poems - கவிதைகள் - அந்த, நான், கற்றுக், கொண்டேன், தோட்டம், எனக்கு, எனக்குள், காதல், தெரியுமா, என்னை, மட்டும், உனக்காக, தோட்டத்தில்