புதுக் கவிதைகள் - தேசியத் திருவிழா
- அமரர் தத்துவக் கவிஞர் குடியரசு இந்தியாவில் கன்னடர்கள் இலங்கையில் சிங்களர்கள் தமிழன் உயிர் திருகித் தணலில் நடும் நாளில் தைத்திங்கள் - பொங்கல் திருநாள் வந்தது! கண்ணீர் தொங்கலில்ஓர் வண்ணம்! வானவில்!! நோய்ப்பட்ட தென்றல் நொண்டி நடக்கையிலே தேய்ந்த நிலவொளியில் தென்பாங்கு! குயில்பாட்டு! விஷத்துளியில் எதிரொளிக்கும் விடிவெள்ளி பொடிவெளிச்சம்! தூக்குக் கயிற்றில் கிளியாடும் பொன்னூஞ்சல்- புன்னைப்பூ போர்வைக்குள் புதைந்த பிணம்போல தமிழன் கிடக்கையில்- தைப்பொங்கல்! ஆமாம்! இலக்கியத்தைச் சரித்திரத்தை எரிநெருப்பில் போட்டுக் குளிர்காயும் பனிக்காலம்! கரும்புக் கழியில் கட்டிய பாடை! எஞ்சிய தன்மானம் எங்கோ பறக்கையில், இஞ்சி இளித்தென்ன? மஞ்சள் கிழங்கோடு பாளைப் பல்சிரிப்பும் ஆளை மயக்க அருசி வந்தென்ன உருவம் சிதைந்த தமிழ கத்தில்! உமிழ்நீர் சுரக்க உண்டு மகிழும் உணர்வா இருக்கிறது? பொங்கிப் பூரித்துப் புனல்முதுகில் பூசுமந்து வந்த காவிரி வரண்டாள்! அவளை நம்பி இருந்த நிலமெல்லாம் - இன்று, தோல்வெடித்துப் போன தொழுநோய் உடம்பாக- வெடித்துக் கிடக்கையில் விளையாடப் பொங்கல் கைவீசி வந்ததென்றால் காலத்தின் கொடுமைதான். இருப்பினும் பொங்கல் திருவிழா! திருவிழாதான்! இனத்திற்கும் - நிலத்திற்கும் எடுத்த விழா! பொல்லா மதத்திற்குப் பஞ்சாங்கம் கதைத்த விழா அல்ல! பொங்கல் என்பது சங்கத் தமிழனின் தேசியத் திருவிழா வீசிய விதையின் வேரில் முளைத்த விளர்வைப் பூக்களின் இயற்கைத் திருவிழா- கதிரவன் அறுவடை செய்யும் கதிர்விழா- குறிஞ்சி உறிஞ்சிய தேனும் திணையும் பிசைந்த பெருவிழா- முல்லை நிலத்தின் எல்லா வளமும் பசுப்பால் ஊற்றிப் பயிரிடப் பட்டவை! முத்தும் பவளமுமூ வைத்த புள்ளியில் நெய்தல் நிலத்தில் பெய்த கோலம் விண்மீன் கண்களைப் புண்ணாய் ஆக்கின! முத்துக்கள் விட்ட மூச்சுக் குமிழிகள் அலைச்சிரிப் பாகிக் கரையில் வந்து கண்டு களிக்கும் கவிதைத் திருவிழா! புரோகிதத் திருட்டுப் புகமுடி யாத திராவிடத் திருவிழா- சூளை நெருப்பில் வெந்த வெறும்பானை பாலைப் பொங்கி வழிக்கும் வழிவிழா! அம்பு விழியாள் அனுப்பும் செய்தியில் தெம்பு பெற்றவன்- தோளை நிமிர்த்திக் கொம்பு சீவியக் காளையைத் தழுவும் மஞ்சு விரட்டில் கொஞ்சும் திருவிழா! வடமொழிக் கூச்சல் வந்து விழாமல் குடமலை வீசும் கும்மிப் பாட்டில் மயங்கிக் கிடக்கும் மனிதத் திருவிழா! அகிலம் போற்றும் அறுவடைத் திருநாள் முகில்முகம் பார்த்து முகிழ்த்த பசுமையின் தாவரத் திருவிழா! அவதாரம் ஆயிரம் ஆண்டவன் எடுத்தான் தவமும் வரமும் தரைக்கு வந்தன வறுமையும் அதனுடன் வந்து சேர்ந்தது. வறுமைக் கோட்டால் வரைந்த ஓவியம் பாமர மக்கள்- பசியின் வேர்கள் குடலின் கேள்விகள்- விடையாய் இதற்கு உழவன் உதித்தான் சேற்றில் இருந்து நாற்றின் நுனியில் "சோற்றவ தாரம் ஏற்றம் இறைப்பவன் எடுத்த திருவிழா"- நரகத்தின் நடுக்கம் சொர்க்கத்தின் நப்பாசை இரண்டும் இல்லா இனியத் திருவிழா இறந்த பிறகு இன்ப முக்திக்கு ஏற்பாடு செய்யும் பண்டிகை அல்ல- பிறந்தவன் உலகில் சுரண்டப் படாமல் வாழ்விக்க வந்த வயலும் வாழ்வும் பொங்கலில் இருந்தே புறப்படு கின்றது! பொங்கல் விழாவைச் சங்கராந்தி என்ற சாத்திரச் சட்டையிட்டு எங்கிருந் தோவந்த சங்கர மடங்கள் விழாவின் பொலிவைக் கவிழ்த்து விட்டனர். நிலத்தை உழுவதே பாவமென்று - மனித குலத்தை உழுது குருதி குடித்தவர்கள்- உலகை மாயமென உபதேசம் செய்தவர்கள் உமியா தின்றனர்? கலப்பை நாகரிகம் கலாச்சாரம் வந்தபின்தான் உலக்கைக் கொழுந்தெல்லாம் உரலாய் உப்பினார்கள்- உழைப்பைப் பிழைப்பாக்கும் உழவன் ஊர்க்கோடி ஓரத்திற் கோடிவிட்டான்- வேதாந்த பாஷியத்தில் நாலாஞ் சாதியவன்- பட்டுப் பூச்சிக்குப் பாடம் புகட்டிட சிலந்திப் பூச்சிக்குச் சந்தர்ப்பம் கிட்டியதால், பொங்கல் பானைக்குள் சங்கராந்தி புகுந்தது. கிருஷ்ண ஜெயந்தி ராம நவமி பிள்ளையார் சதுர்த்தி விஜய தசமி இந்த விழாக்கள் கந்தலாய் வாழ்வைக் கிழித்துப் போட்டவை இராமன் கிருஷ்ணன் பிள்ளையார் எல்லாம் புராணச் சிரங்கில் புழுத்த புழுக்கள்- பூமியைப் பற்றிப் பூகோளம் தெரியா சாமிக் குப்பைகள்- சாக்கடைக் குழிகள்- கி.மு. கி.பி. கணக்கில் வராத கணவாய்க் கிருமிகள்- விவசாய விஞ்ஞானம் தவறியும் தெரியா அவமானப் பிறவிகள்- சவலைச் சடங்கள்! |
தேடல் தொடர்பான தகவல்கள்:
தேசியத் திருவிழா - புதுக் கவிதைகள் - Poems - கவிதைகள் - திருவிழா, பொங்கல், வந்து