இந்தோனேசியாவில் தமிழர்கள் - தமிழர் வாழும் நாடுகள்
இந்தோனேசியர்கள் இந்துக் கோயில்களைச் சாண்டி (Candi) என்பர். சாண்டி என்றால்
பழங்கால கல் நினைவுச் சின்னங்கள் என்று பொருள். குறிப்பாக, இச்சின்னங்களைச் சாவகம்,
சுமத்திரா, பாலி முதலிய இடங்களில் பார்க்கலாம். இங்கு பிரம்மா, சிவன், விஷ்ணு,
அகத்தியர், துர்க்கா, விநாயகர் போன்ற தெய்வங்களின் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.
உதாரணமாக, மத்திய சாவகத்திலுள்ள சோக் சக்கர்த்தாவில் சாண்டி பிரம்மா, சாண்டி விஷ்ணு
கோயில்களைப் பார்க்கலாம். கி.பி.900 இல் கட்டி முடிக்கப்பட்ட பிரம்மானன் என்ற
இந்துக் கோயில் சாவகத்திலிருக்கின்றது. கிழக்குச் சாவகத்தில் உள்ள பாரா எனுமிடத்தில் இருக்கும் கணபதி உருவம் திராவிட சிற்ப மரபில் அரிய கலைநயத்துடன் உருவாக்கப்பட்டதாகும். மண்டியிட்டுக் கொண்டிருக்கும் பெரிய பூதங்கள் அசுரர்களின் நுழைவாயிலைப் (Portico) பார்த்துக் கொண்டிருப்பதைச் சாவக கோயில்கள் புகுவழிகளில் பார்க்கலாம். இச்சிற்பங்கள் தென்னிந்திய கோயில்களில் உள்ள பேரழகு வாய்ந்த பூதவாகனங்களைப் போன்று இருக்கின்றன. எட்டாவது நூற்றாண்டில் போரோபுதூரில் தோன்றிய பௌத்த சமய சைத்தியங்கள் கூட பல்லவர்கள் சோழர்கள் கட்டடப்பாணியை ஒட்டியே காணப்படுகிறது என வரலாற்று அறிஞரான வின்சென்ட் ஸ்மித் கூறியுள்ளார்.
சாவகத்தில் நடைபெறும் பாவைக் கூத்துகள் இந்திய மூலத்தை உடையனவாகும். ஏனெனில் இக்கூத்துகளில் இராமாயண மகாபாரத நிகழ்வுகளே ஆடப்பெறுகின்றன. எனவே இந்தியர்கள் இந்தியாவிலிருந்து பௌத்தம், சைவம் ஆகிய சமயங்களோடு இசையையும், இராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களையும், இதை விளக்கும் சிற்பக் கலையையும், பொம்மலாட்டம் என்ற புதுக்கலையையும் சாவகத்திற்கு கொண்டு போனார்கள். தமிழர் கண்ட நாட்டியத்தின் மாறிய வடிவம் சாவகத்தில் காணக் கிடைக்கிறது.
பாலியில் சித்திரை 2 ஆம் நாள் கலைமகள் விழா கொண்டாடுகிறார்கள். நவராத்திரி விழா நடத்துகின்றனர். சிவராத்திரி அன்று பெருவிழா படைத்து நடனமாடுகின்றனர். பாலித் தீவு மக்கள் தொகையில் 93.37 சதவீதத்தினர் இந்துக்கள் ஆவர். இவர்கள் பெரும்பான்மையோர் சிவனை வழிபடுகின்றனர். இந்தியா, நேபாளம் நீங்கலாக இந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கும் இடம் பாலித்தீவாகும். சிவவழிபாடு பிறந்த இடம் திராவிட நாடாகும். எனவே பின்பற்றும் சமயத்தில் தமிழ்ச் சமயத்தின் தாக்கம் இருக்கிறது என்று அறுதியிட்டு கூறலாம். பண்டைத் தமிழர்கள் சூரியன், நிலம், நீர், தீ, காற்று, மலை இவற்றை தெய்வங்களாகக் கருதி வணங்கினர். இதே மாதிரியான நம்பிக்கை பாலி மக்களிடம் இன்றுக் கூட நிலவுகிறது.
வட சுமத்திராவில் முப்பத்திரண்டு தமிழ் இந்துக் கோயில்களும் மேடானில் தென்னிந்திய மசூதி ஒன்றும் தமிழர்களால் எழுப்பப்பட்டன. மேடானில் 1884 இல் கட்டப்பட்ட மாரியம்மன் கோவில் இன்றும் புகழ் பெற்று விளங்குகிறது. அங்குள்ள மற்றொரு கோயிலான சுங்கு சுப்பு மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தில் ஐந்து நாட்கள் தீமிதித் திருவிழா நடைபெற்று வருகிறது. மற்றும் மேடானில் உள்ள காளிக் கோவிலும், தண்டாயுதபாணி கோயிலும் தமிழர்களிடையே சிறப்பு பெற்றதாகும். இந்தோனேசியத் தலைநகர் ஜகாத்தாவில் தமிழர்கள் கட்டியுள்ள சிவன் கோவிலில் சித்திரை முதல் நாள் மலாயில் எழுதிய 'அரே ராமா அரே கிருஷ்ணா' தேவார திருவாசகத்தைப் பாடி கும்பிடுவார்கள். இந்தோனேசியாவில் விலை மகளிருக்குத் தனிப்பட்ட 'சொர்க்க பூமிகள்' ஒதுக்கப்பட்டுள்ளன. எனினும் பொது நிலையில் சீதையின் மாட்சியைப் போற்றும் நாடானமையால் அங்கு கற்பு நெறி கண்டிப்பாக வலியுறுத்தப்படுகிறது.
வாழ்க்கைத் தரம்/தொழில் :
வட சுமத்திராவில் வாழும் பதினைந்தாயிரம் தமிழர்களில் பொருளாதார முன்னேற்றம் கண்டிருப்பவர்கள் மிகக் குறைவாகக் காணப்படுகின்றனர். சுமார் முப்பது தமிழ்க் குடும்பங்களே பொருளாதார முன்னேற்றம் பெற்றுள்ள குடும்பங்கள் ஆகும். பெரும்பாலான தமிழர்கள் ஏதாவது சொந்த வியாபாரத்தில் ஈடுபடுகின்றனர். மற்றும் சிலர் சாவகர்களிடமும், சீனர்களிடம், தமிழர்களிடமும் வேலை செய்கின்றனர். இவ்வாறு வேலை செய்வோரின் மாத வருவாய் ஐம்பது சிங்கப்பூர் வெள்ளியிலிருந்து நூறு சிங்கப்பூர் வெள்ளிக்குள் இருக்கிறது. ஒரு சில தமிழர்கள் அரசாங்கத்திலும் பணியாற்றுகின்றனர். கல்வித் துறையில் தமிழர்கள் அதிகம் நாட்டம் காட்டவில்லை. பலர் உயர்நிலைப் பள்ளிப்படிப்போடு முடித்துக் கொண்டு ஏதாவது தொழிலில் ஈடுபடுகின்றனர்.
ஒரு காலத்தில் நூற்று இருபது வட்டிக் கடைகள் வைத்திருந்த செட்டியார்களுக்கு இன்று நான்கு கடைகளே உள்ளன. இவையும் கொடுத்த கடனை மீண்டும் பெறுவதற்காகவே இயங்குகின்றன. வட சுமத்திராவில் செட்டியார்கள் சியந்தார், ஆச்சை, மேடான் ஆகிய மூன்று இடங்களிலேயே தனி வணிகத் தொழில் செய்து வந்தார்கள். 1920க்குப் பின்னரே அவர்கள் வந்தனர். ஒரு சிலர் நேரடி ஏற்றுமதி-இறக்குமதி வியாபாரத்தில் ஈடுபட்டாலும் பலர் தனவணிகத் தொழிலில் ஈடுபட்டிருந்தனர். மு.அ.எ.எப் என்ற நகரத்தார் நிறுவனம் துணி, புழுங்கல் அரிசி முதலியவற்றைச் சென்னையிலிருந்து கொண்டு வந்து மேடானில் விற்றதாகத் தெரிகிறது. முதலில் டெல்லி சுல்தானின் தலைநகரான லாபுவான் எனுமிடத்தில் தங்கியிருந்தனர். டெல்லி சுல்தான் தனது தலைநகரை மேடானுக்கு மாற்றவே அவர்களும் பின் தொடர்ந்தனர். தற்சமயம் நான்கு நகரத்தார்களே மேடானில் வாழ்கின்றனர். ஜாகாத்தாவிலிருந்து சில தமிழர்கள் கைத்தறி லுங்கிகளைத் தமிழகத்திலிருந்து வரவழைத்து இந்தோனேசியா முழுவதும் வியாபாரம் செய்து வந்தார்கள். மேலும் சிலர் மேற்படி துணிகளை உருவாக்கும் தொழிலில் ஈடுபட்டிருந்தார்கள். நாட்டுக்கோட்டை நகரத்துச் செட்டிமார்கள் சிலர். ஜாகார்த்தாவில் வட்டிக்கடைகளை நடத்தி வருகின்றனர்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இந்தோனேசியாவில் தமிழர்கள் - Tamils in Indonesia - தமிழர் வாழும் நாடுகள் - Tamil Persons Living Countries - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - தமிழர்கள், வாழும், தமிழர், மேடானில், இந்தோனேசியாவில், சிலர், சாண்டி, நாடுகள், பார்க்கலாம், சாவகத்தில், உள்ள, இந்துக், கொண்டு, தொழிலில், சுமத்திராவில், தகவல்கள், தமிழ்நாட்டுத், பொருளாதார, மாரியம்மன், இருக்கிறது, தொழில், டெல்லி, | , முன்னேற்றம், கோவிலில், ஈடுபடுகின்றனர், பலர், நான்கு, செய்து, சிங்கப்பூர், வேலை, வியாபாரத்தில், வந்தார்கள், இடம், ஏதாவது, தென்னிந்திய, countries, tamilnadu, information, இந்தியா, living, persons, tamils, indonesia, tamil, பாலி, பிரம்மா, ஆகிய, சித்திரை, நாள், விழா, திராவிட, இருக்கும், சிவன், விஷ்ணு, எனுமிடத்தில், இந்துக்கள்