இந்தோனேசியாவில் தமிழர்கள் - தமிழர் வாழும் நாடுகள்
இந்தோனேசியாவில் தமிழர்கள்
சாவகம் (ஜாவா), சுமத்திரா, பாலி, காலிமன்தான் (போர்னியோ), குலவேசி (செலிபிஸ்), இரியன் ஜயா (நீயூகினி) போன்ற 13,700 தீவுகள் அடங்கிய பகுதிகளைத்தான் இன்று இந்தோனேசியா என அழைக்கிறார்கள். இத்தீவுக் கூட்டங்கள் மலேயா தீபகற்பத்திலிருந்து நீயூகினி வரை பரவிக் கிடக்கின்றன. இரியன் ஜயாவின் கிழக்குப் பகுதியிலும், வட போர்னியாவின் பகுதிகளாக இருக்கும் சரவாக், சபா எல்லைகளிலும் மட்டும்தான் இந்தோனேசியாவின் நில எல்லை அமைப்புகளைப் பார்க்கலாம். தென்சீனக் கடலும் பசிபிக் பெருங்கடலும் இந்து மாக்கடலும் 74,101 சதுர மைல்கள் அடங்கிய இத்தீவுக் கூட்டங்களைச் சுற்றிலும் அமைந்துள்ளன.
தமிழர் குடியேறிய வரலாறு :
சங்க கால நூல்களில் இந்தோனேசியாவைப் பற்றிய சில செய்திகள் நமக்குக் கிடைக்கின்றன. இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் மொலுக்காஸ் போன்ற தீவுப் பகுதிகள் முந்நீர்ப் பழந்தீவு என இந்நூல்களில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. இத்தீவுகளைப் பன்னிராயிரம் என மணிமேகலைக் காப்பியம் குறிப்பிடுகின்றது. தமிழர்கள் ஜாவாவைச் சாவகம், சாவகத் தீபம், யவத் தீபம் என்றும், சுமத்திராவை, சிரிவிசயம், சொர்ணதீபம் என்றும் அழைத்து வந்தனர். பழந்தமிழ் இலக்கியச் சான்றுகளிலிருந்து, தமிழ் வணிகர்களும், தமிழ்ப் பெருமக்களும் சங்க காலத்திற்கு முந்திய காலத்திலிருந்தே சாவகத்துடன் தொடர்பு வைத்திருந்ததை அறிய வருகிறோம். பொதுவாக அந்தமான், நிக்கோபார் தீவுகள் வழியாக இந்தோனேசியாத் தீவுகளுக்குப் பண்டைய தமிழர்கள் சென்றார்கள்.
சாவகம் (ஜாவா) பற்றிய செய்திகள் ஐம்பெரும் தமிழ்க் காப்பியங்களுள் ஒன்றான மணிமேகலையில் இடம் பெற்றிருக்கின்றன. மணிமேகலையில் சாவக நாட்டிலுள்ள நாகபுரம் என்னும் பட்டணம் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் பூமி சந்திரன், புண்ணியராசன் போன்ற அந்நாட்டு அரசர்கள் பெயர்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. தமிழகத்திற்கும் சாவகத்திற்கும் நீர்வழிப் போக்குவரத்துகள் நிகழ்ந்துள்ளதையும் மணிமேகலை (14:73-85) கூறுகிறது. மேலும், மணிமேகலை சாவக நாட்டிற்குச் சென்று, அங்கு சிறப்புற்று விளங்கிய 'தருமசாவகன்' என்ற பௌத்தத் துறவியை வணங்கியதாகவும், சாவகத்தில் ஆட்சி நடத்திய ஆபுத்திரனோடு மணிபல்லவம் வந்து, அங்கே தீவதிலகையின் மூலம் காவிரி பூம்பட்டினம் கடல் கொள்ளப்பட்டதையும் மாதவியும் சுதமதியும் அறவன அடிகளோடு வஞ்சி நகர் சென்றதையும் அறிந்து அங்கிருந்து விண்வழியாக வஞ்சி நகர் விரைந்ததாகவும் மணி மேகலையில் கூறப்பட்டுள்ளது.
கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் தென்னிந்தியாவிலுள்ள பாண்டிய நாட்டினின்று கப்பல்கள் சாவகம், சுமத்திரா முதலிய நாடுகளுக்கு யாழ்ப்பாணத்திலுள்ள துறைமுகத்தின் வழியாகச் சென்றன. இதற்குச் சான்று மணிமேகலையில் கிடைக்கின்றது என்று அறிஞர் சி.இராசநாயகம் பண்டைய யாழ்ப்பாணம் என்னும் நூலில் குறிப்பிடுகின்றார். சாவகத்தின் முதல் மன்னனுக்குச் சீர்மாறன் என்று பெயர். இந்தப் பெயர் சாவகத்தின் அரசப்பரம்பரையானது தமிழர்களோடு நெருங்கிய சம்பந்தம் உடையதென்பதை நன்கு விளக்குவதாக இருக்கின்றது. சாவகத்தில் இப்போதுள்ள பழங்குடி மக்களிடத்து, திராவிட பழங்குடி மக்கள் கூட்டத்தினரான தமிழகப் படகர்களுக்குரிய (Badagas) பெயர்கள் வழங்கி வருகின்றன. ஜாவா, சுமத்திரா நாடுகளில் இந்தியக் குடியேற்றங்களை அமைத்தவர்கள் திராவிடர்களின் வழி வந்தவர்களாக இருக்க வேண்டுமென்பதை ஜெ.குரோம் (J.Krom-1938) என்ற வெளிநாட்டறிஞர் காரணங்கள் காட்டி நிறுவியுள்ளார்.
மேற்கு ஜாவாவில் கிடைத்த கி.பி. ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு பல்லவர் காலத்திய கிரந்த எழுத்துக்களில் பொறிக்கப்பட்டுள்ளது. அக்கல்வெட்டு ஜாவாவின் தலை நகரமான ஜகார்த்தாவின் அருகிலுள்ள தரும நகரத்தை ஆண்ட பூரண வர்மன் என்ற இந்து அரசனைப் பற்றிக் குறிப்பிடுகின்றது. ஜாவாவில் சங்கல் (Changal) என்னும் இடத்தில் கிடைத்துள்ள கல்வெட்டு பல்லவ கிரந்த எழுத்தின் பிற்கால வடிவில் எழுதப்பட்டுள்ளது. அக்கல்வெட்டு தென்னிந்தியாவில் குஞ்சர குஞ்சம் என்னும் இடத்திலிருந்து வந்து, குடியேறிய அரசனின் மரபிலே வந்த ஓர் அரசன் ஜாவாவின் நடுப்பகுதியில் சிவலிங்கம் ஒன்றை நிறுவிய செய்தியைச் சொல்கிறது. சீன நாட்டில் குவாங்-வா-டி (Kwang-wa-ti) என்னும் மன்னன் ஆட்சி செலுத்திய காலத்தில் (ஏறத்தாழ கி.பி.75) சாவகத் தீவில் இந்துக்கள் குடியேற ஆரம்பித்தார்கள் என்று வில்லியம் ஸ்மித் என்னும் வரலாற்றாசிரியர் குறிப்பிடுகின்றார்.
வடக்குச் சுமத்திராவில் சோழர், பாண்டியர், பல்லவர், சேரர் என்னும் பெயர்களை உடைய பழங்குடி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுடைய மூதாதையர் சோழ, பாண்டிய, பல்லவ நாடுகளில் இருந்து வந்தவராகக் கருதப்படுகின்றனர். பல்லவர் காலத்தில் (கி.பி. 550-750) கடல் மார்க்கம் வழியாக இந்தோனேசியாவிற்குப் பல தமிழ் பெருமக்கள் சென்றார்கள் என்பதற்குச் சான்றுகள் இருக்கின்றன. இது சம்பந்தமாக இந்தோனேசியாவில் கல்வெட்டுகள் கூட கிடைத்திருக்கின்றன. இராசசிம்மன் எனும் பல்லவ அரசன் காஞ்சியில் கைலாசநாதர் கோயிலை எழுப்பியனாவான். அக்கோயிலின் வெளிப்புற மதிலுக்கு அடுத்துத் தெற்குப் பக்கத்தில் பல சிறு கோயில்கள் உள்ளன. அவற்றுள் மூன்றாவதா உள்ள கோயிலை இராசசிம்மனுடைய மனைவியருள் ரங்கபதாகை என்னும் அரசி தம் சொந்த செலவில் கட்டியுள்ளார். இதை அக்கோயிலில் உள்ள கல்வெட்டு தெரிவிக்கின்றது. அதில் ரங்கபதாகையின் தந்தைபெயர் சைல அதிராஜா என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பெயர் இந்தோனேசிய சைலேந்திர அரசனையே சுட்டுகிறது என்று தி.நா.சுப்ரமணியம் அவர் எழுதிய The pallavas of kanchi in Southeast Asia (பக் 43) எனும் நூலில் தெளிவாக்குகிறார். சைலேந்திரருடைய ஆட்சியின் தொடக்க காலகட்டமே பல்லவரின் ஆட்சி காலமாகும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
இந்தோனேசியாவில் தமிழர்கள் - Tamils in Indonesia - தமிழர் வாழும் நாடுகள் - Tamil Persons Living Countries - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - என்னும், தமிழர்கள், இந்தோனேசியாவில், தமிழர், சாவகம், நாடுகள், வாழும், சுமத்திரா, ஜாவா, கல்வெட்டு, பெயர், மணிமேகலையில், ஆட்சி, பழங்குடி, பல்லவர், தகவல்கள், தமிழ்நாட்டுத், பல்லவ, கடல், வஞ்சி, நகர், பாண்டிய, எனும், கோயிலை, சாவகத்தில், | , உள்ள, நூலில், வந்து, காலத்தில், ஜாவாவில், மணிமேகலை, கிரந்த, அக்கல்வெட்டு, நாடுகளில், மக்கள், சாவகத்தின், ஜாவாவின், இந்தப், அரசன், குறிப்பிடுகின்றார், பண்டைய, இரியன், information, நீயூகினி, தீவுகள், இந்தோனேசியா, அடங்கிய, tamilnadu, countries, indonesia, tamils, tamil, persons, living, இத்தீவுக், இந்து, தமிழ், என்றும், வழியாக, சென்றார்கள், குறிப்பிடப்பட்டுள்ளது, சாவக, தீபம், சாவகத், சங்க, குடியேறிய, பற்றிய, செய்திகள், குறிப்பிடுகின்றது, மேலும்