இந்தோனேசியாவில் தமிழர்கள் - தமிழர் வாழும் நாடுகள்
சாவக அரசர்கள் 'மீனாங்கித சைலேந்திரர்' (மீனினை இலச்சினையாக உடைய மலைகளின் தலைவர்)
என்ற பட்டப் பெயரை சூட்டிக் கொண்டு இருந்தனர் என்பதை அவர்களின் கல்வெட்டுகளால்
அறிகின்றோம். பாண்டியருடைய கொடியில் எப்பொழுதும் இரட்டை கயல் மீன்
பொறிக்கப்பட்டிருந்தமை யாவரும் அறிந்த செய்தியாகும். சைலேந்திரர்களுக்கும் கயல்மீன்
சின்னமாக இருந்தமையால், சைலேந்திரர்கள் தமிழகத்தில் தோன்றியவர்களாக இருக்க
வேண்டும். இவர்கள் திருவிளையாடல் புராணத்தில் குறிப்பிடப்படும் மலையத்துவச பாண்டியன்
வழிவந்தவராக இருக்கலாம் என கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி கூறுகின்றார்.
சோழ மன்னர்கள் கல்வெட்டுகள் சிலவற்றிலும் சாவகம் குறிப்பிடப்பட்டுள்ளது. லெய்டன் சாசனம் என்ற இராசஇராச சோழனின் சாசனத்தில் கடாரத்தின் அரசன் சூளாமணிவர்மனாலும் அவன் மகன் மாற விஜயேத்துங்க வர்மனாலும் தமிழத்திலுள்ள நாகப்பட்டிணத்தில் கட்டப் பெற்ற ஒரு பௌத்த விகாரம் கி.பி. 1006 ஆம் ஆண்டில் கட்டுவதற்குத் தொடங்கப்பட்டது. இதற்கு இராசஇராசன் ஆனைமங்கலம் என்னும் ஊரை நிவந்தமாக அளித்தான் என்ற குறிப்புகள் காணப்படுகின்றன. (The Larger Leiden plates of Rajaraja I,Ep. Ind.Vol.XXII No:34).
இராசேந்திர சோழ அரசனின் மெய்கீர்த்தியைக் கூறும் சாசனம் இந்தோனேசியாவில் ஆட்சி செய்து கொண்டிருந்த ஸ்ரீவிசயப் பேரரசுக்கு எதிராக சோழர்கள் எடுத்த டற்படையெடுப்பைப் பற்றி கூறியிருக்கின்றது. தமிழர்கள் விருப்பம் போல் தென்கிழக்கு ஆசியாவில் வணிகம் செய்யத் தடை ஏற்பட்டதனால் 11ஆம் நூற்றாண்டில் மாபெரும் சோழற்படை தென்கிழக்காசியாவில் பல நாடுகளிலும் புகுந்து வெற்றி வீரர்களாக ஆங்காங்குள்ள மன்னர்களோடு நட்புறவு கொண்டு தமிழர்கள் தங்குதடையின்றி வணிகம் புரியவும் குடியேறி வாழவும் வழிவகை செய்தனர்.
சோழ அரசர்களுக்கும் சுமத்திராவை ஆண்ட அரசர்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்ததைப் பற்றி பல சான்றுகள் கிடைத்திருக்கின்றன. சுமத்திராவில் 11ஆம் நூற்றாண்டில் பொது மக்கள் பயன்படுத்திய பத்திரங்களில் (Public Documents) தமிழ்மொழி பயன்படுத்தப்பட்டது என வுல்ட்ஸ் (Hultz) என்பாரும் சே.ஏ.நீலகண்ட சாஸ்திரியும் கூறுகின்றனர். மேலும் தமிழ் வாணிகக் குடியிருப்புகள் இங்கு இருந்ததாகவும் சான்றுகள் கிடைத்துள்ளன. சுமத்திராவில் உள்ள லோபுதுவா (Loboe Toewa) எனும் இடத்தில் கிடைத்துள்ள தமிழ்க் 1கல்வெட்டில் 1500 பேர் அடங்கிய ஒரு வணிகக் கூட்டமைப்பு இருந்ததாகக் குறிப்புகள் உள்ளன. அயர்லிங்கா (Airlingga கி.பி.1019-1049) எனும் சாவக அரசனின் குறிப்புகளிலும் திராவிட, கலிங்க, சிங்கள, கருநாடக நாட்டவர்கள் சாவகத்தில் வாணிகம் செய்ய வந்தனர் எனக் கூறப்பட்டிருக்கிறது. மேலும் முதலாம் இராசராசன் காலத்திலிருந்து குலோத்துங்கன் காலம் வரையில் உள்ள கல்வெட்டுகளில் சுமத்திர பேரரசு ஸ்ரீவிசயாவைப் (கடாரம்) பற்றி செய்திகள் கிடைக்கின்றன. ஆகையால் பிற்கால சோழர்கள் காலத்தில் இந்தோனேசியாவிற்கும் தமிழ் நாட்டிற்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது எனத் தெரிகிறது.
இத்தொடர்பு தொடர்ந்து நீடித்து வந்தது. இந்தோனேசிய அரசரான இராசசனாகர மன்னனின் அவைப் புலவரான பிரபன்சா (Prapantja) எழுதிய நகர கர்த்தகாமாவில் (Nagarakertagama கி.பி.1365) காஞ்சிபுரத்தில் வாழ்ந்த புத்தாதித்தியர் சாவக மன்னனைப் பற்றி எழுதிய பாடல்களைப் பாராட்டி சொல்லப்பட்டிருக்கின்றது. ஜெயனகர மன்னன் (1309-28) அவனுடைய முடிசூட்டு விழாவின் போது சுந்தரபாண்டியன் எனும் பட்டப்பெயர் சூட்டிக் கொண்டான். பாண்டிய இலச்சினையான மீனைத் தனது இலச்சினையாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டான். காஞ்சிபுரத்திலிருந்து வந்த புத்த பிக்குகள் 14 ஆம் நூற்றாண்டில் சாவகத்தை ஆட்சி செய்த ஹயாம் வுருக் எனும் அரசரைப் புகழ்ந்துரைக்கின்றனர். பதினேழாம் நூற்றாண்டில் இந்தோனேசியாவை ஆண்ட டச்சுக்காரர்கள் தமிழ், தெலுங்கு முதலிய மொழிகளின் ஆவணங்களையும் பதிவேடுகளையும் வைத்திருந்தார்கள் என ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன. பத்தொன்பதாவது நூற்றாண்டு வரை மலாக்கா கடற்கரையோரப் பகுதிகளில் விவரமான அறிக்கைகள், கணக்கு(Account) தமிழிலும் வைக்கப்பட்டன எனச் சான்றுகள் கிடைத்துள்ளன. இச்சமயத்தில் தமிழர்களைக் கெலின்ங் (Keling) என அழைத்தனர்.
அண்மைக் காலத்தில் பாலியில் நடைபெற்ற தொல்பொருள் ஆராய்ச்சியில் கிடைத்துள்ள பழம்பொருள் சின்னங்கள் பாலி ஓர் இந்துக் குடியேற்ற நாடு என்பதை மெய்பித்துள்ளன. பாலியிலுள்ள பழைய கல்வெட்டுகளில் எழுத்துக்கள் சமஸ்கிருதத்தில் உள்ளன. இவற்றால் பாலித் தீவில் தனித்ததோர் இந்துக்குடி அமைக்கப்பட்டு இந்தியப் பண்பாடும் நாகரிகமும் போற்றி வளர்க்கப்பட்டதை அறிகிறோம். பாலியின் கிழக்குக் கரையோரத்தில் சங்கு-பெட்ராக்கு எனுமிடத்தில் ஒரு தமிழ்க் கல்வெட்டு கிடைத்திருக்கிறது. அங்கு எழுப்பப்பட்ட சிவன் கோயிலையும், அதில் இடம் பெற்றுள்ள முகலிங்கத்தையும் அது குறிப்பிடுகிறது. பழங்காலத்திலேயே பாலிக்குத் தமிழ்நாட்டிலிருந்து குடியேறிய தமிழர்கள் மூன்று நான்கு தலைமுறைக்கு மேலாக அங்கு வாழ்ந்து வருகின்றனர். பாலித் தீவில் வாழும் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த மூத்த தலைமுறையினர் அன்றாடம் தமிழ்ப் பாடல்களான தாயுமானவர் பாடல்களைப் பாராயணம் செய்யும் பழக்க முடையவர்களாக உள்ளதால், இவர்களும் பழங்காலத்திலேயே தமிழ்நாட்டிலிருந்து பாலிக்குக் குடியேறி வாழ்பவர்களாக உள்ளதை அறிய வருகிறோம்.
காலிமன்தானில் (போர்னியா) ஏழு சமஸ்கிருத மொழிக் கல்வெட்டுகள் கிடைத்திருக்கின்றன. பண்டைக் காலத்து மகாகன் ஆற்றுக்கு அருகில் மௌராகமன் என்ற துறைமுகம் சிறப்புற்று விளங்கியது. அத்துறைமுகம் இருந்த இன்றைய குடேய் (Kutei) மாவட்டத்தில்தான் இவ்வேழு கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. குண்டுங்கன் (Kundunga) என்ற அரசனின் மரபைச் சேர்ந்தவர்கள் கிறித்துவ சகாப்தத்தின் முதல் மூன்றாம் நான்காம் நூற்றாண்டுகள் தொடக்கத்தில் போர்னியோவை ஆண்டதாக அக்கல்வெட்டுகள் அறிவிக்கின்றன. குண்டுங்கன் தமிழ்நாட்டிலிருந்து குடியேறிய ஓர் இளவரசனாகவும், கவுண்டினியன் என்ற புராண மரபில் வரும் அரசனாகவும் கருதப்படுகிறான். 'குண்டுங்கன்' என்ற சொல் தமிழ்ச் சொல்லாக இருக்கலாம் என்றும், பல்லவர் செப்பேடு ஒன்றில் 'குண்டுகூரன்' என்ற பெயர் ஒன்று காணப்படுவதாக வரலாற்று ஆசிரியர் கூறுகின்றனர். குண்டுங்களின் மகன் அசுவவர்மன் என்பதும், அசுவவர்மனுடைய மகன் மூலவர்மன் என்பதும் அக்கல்வெட்டுகளால் தெரிய வருகின்றன. மூலவர்மன் காலத்து 'குடை' கல்வெட்டுகள் சமஸ்கிருத மொழியில் பொறிக்கப்பட்டுள்ளன. இதனால், நெடுந்தொலைவிலுள்ள போர்னியா தீவில் இந்திய நாட்டு மொழி, சமயம், அரசியல், சமூக நிறுவனங்கள் பெற்றிருந்த செல்வாக்கை அறிய முடிகிறது. தமிழ் மாதங்களின் பெயர்களும், தமிழ் நீட்டல் அளவைப் பெயர்களும் அந்நாட்டில் எவ்வாறு சிறப்புற்று விளங்கின என்பதை அவை எடுத்துரைக்கின்றன. மேற்கு போர்னியோவில் ஓவிய வேலைபாடுள்ள ஸ்தூபம் கண்டுபிடிக்கப் பட்டது. அதன் பக்கச் சுவர்களில் எட்டு கல்வெட்டுகள் செதுக்கப்பட்டிருக்கின்றன. இக்கல்வெட்டுகளில் பிற்காலப் பல்லவ கையெழுத்து முறைகளைப் பார்க்கலாம்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இந்தோனேசியாவில் தமிழர்கள் - Tamils in Indonesia - தமிழர் வாழும் நாடுகள் - Tamil Persons Living Countries - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - தமிழர்கள், இந்தோனேசியாவில், தமிழ், வாழும், கல்வெட்டுகள், தமிழர், பற்றி, நூற்றாண்டில், நாடுகள், எனும், கிடைத்துள்ளன, தமிழ்நாட்டிலிருந்து, அரசனின், தீவில், சான்றுகள், என்பதை, கிடைத்திருக்கின்றன, மகன், தமிழ்நாட்டுத், தகவல்கள், சாவக, தமிழ்க், காலத்தில், கல்வெட்டுகளில், பெயர்களும், என்பதும், உள்ள, | , மூலவர்மன், கிடைத்துள்ள, எழுதிய, குண்டுங்கன், பாடல்களைப், சமஸ்கிருத, பழங்காலத்திலேயே, போர்னியா, குடியேறிய, அங்கு, காலத்து, அறிய, கொண்டான், பாலித், சிறப்புற்று, ஆண்ட, information, tamilnadu, சூட்டிக், கொண்டு, இருக்கலாம், countries, living, tamils, indonesia, tamil, persons, நீலகண்ட, சாசனம், நெருங்கிய, அரசர்களுக்கும், தொடர்பு, சுமத்திராவில், கூறுகின்றனர், குடியேறி, 11ஆம், குறிப்புகள், ஆட்சி, சோழர்கள், வணிகம், மேலும்