இந்தோனேசியாவில் தமிழர்கள் - தமிழர் வாழும் நாடுகள்
சுமத்திராவிலுள்ள மேடான் நகரில் மட்டும் ஏறக்குறைய 15,000 தமிழ் மக்கள் வாழ்கின்றனர்.
அவர்கள் 250 ஆண்டுகளுக்கு முன்பு அங்குக் குடியேறிய தமிழ் மக்களின் சந்ததியினராவர்.
உணவாலும் உடையாலும் இந்தோனேசியர்களாக அவர்கள் மாறிவிட்டனர். மக்களுக்கு இடப்படும்
பெயர்கள் பெரிதும் தமிழ்ப் பெயர்களாகவே உள்ளன. கேசவன், தருமராசன், முனிசாமி,
சுந்தரம், நித்தியானந்தம், முருகன், இராமன் எனும் ஆண்களின் பெயர்கள் பெருவழக்காக
உள்ளன. பெண்களுக்கு ராஜலட்சுமி, லட்சுமி, சரஸ்வதி, மீனா, பாக்கியவதி, ரத்னாவதி,
பத்மாவதி, சுசீலா, திரௌபதி போன்ற பெயர்களும் வழங்குகின்றன. இந்தோனேசியாவிற்குரிய
தேசிய மக்களுக்கும் இராமன், கிருஷ்ணன், இந்திரன், இலக்குமணன்,
இராவணன், துரியோதனன், தரும(வா)ன், அருச்சுனன் எனும் பெயர்கள் வழங்கப்பட்டு
வருகின்றன.
மேடானில் இந்து சமயத் தெய்வங்களின் கோயில்கள் பல உள்ளன. அவற்றுள் தண்டாயுதபாணிக் கோயில், மாரியம்மன் கோயில், பிள்ளையார் கோயில் ஆகியவை சிறப்பு மிக்கன. ஆண்டு தோறும் தண்டாயுதபாணி கோயிலில் தைப்பூசத் திருவிழா மிகச் சிறப்பாக மூன்று நாட்கள் நடைபெறுகிறது. நூற்றுக்கணக்கான காவடிகள் அவ்விழாவின் பொழுது முருகனுக்குச் செலுத்தப்படுகின்றன. அவற்றுள் பால் காவடியும் சர்க்கரைக் காவடியும் அதிகம். ஆடி மாதத்தில் மாரியம்மன் திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. தீமிதித்தல், தீச்சட்டி ஏந்துதல், கரக ஆட்டம், அலகு குத்தல் போன்ற பண்டைத் தமிழகப் பழக்க வழக்கங்கள் அங்குப் பின்பற்றப்படுகின்றன. விழாக்களின் பொழுது அந்நாட்டு அரசு தமிழர்களுக்கு மட்டும் விடுப்பு அளிக்கிறது. விழாவிற்கு வரும் இந்தோனேசியாவின் பல்வேறு பகுதி மக்களுக்கும் இலவச உணவு அளிக்கப்படுகிறது.
மேடான மைதானம் என தமிழர் சூட்டிய பெயரே திரிந்து மேடான் என நகரின் பெயராய் அமைந்தது. தமிழர்கள் தாங்கள் குடியேறிய நாடுகளில் தங்கள் ஊர்ப் பெயர்களையே தெருப் பெயர்களாகச் சூட்டியுள்ளனர். மேடானில் காவிரிப்பூம்பட்டினத்துத் தெரு, மதுரைத் தெரு, மதராஸ் தெரு முதலியவற்றைக் காணலாம்.
நவராத்திரி, தீபாவளி, பொங்கல் ஆகிய பண்டிகைகளின் போது புதிய புதிய தமிழ் நாட்டிய நாடகங்களும் மேடை நாடகங்களும் அரங்கேற்றம் செய்யப்படுகின்றன. அங்குள்ள தமிழ் இளைஞர் நாடகம் படைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுள் நித்தியானந்தம், தமிழ்நேசன் என்போர் முக்கியமானவர்கள் ஆவர். தமிழ்த் திரைப்படங்களுக்கு இந்தோனேசியா முழுவதும் பேராதரவு தரப்படுகிறது. மேடானின் தலைவர் (சிற்றரசர்) சுல்தான் எனப்படுபவராவார். அவருடைய மூதாதையர்கள் தமிழ்நாட்டிலிருந்து வந்தவர்கள் என்று அவர் கூறுகிறார்.
(3) பாலியில் தமிழர் நிலை :
பாலித் தீவில் ஈராயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்களுள் பெரும்பாலோர் தமிழ்நாட்டு முஸ்லீம் பெருமக்களாவர். இராமநாதபுரம் மாவட்டத்திலிருந்தும் மதுரை, திருநெல்வேலி மாவட்டங்களிலிருந்தும் ஏறக்குறைய முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னர் அங்குக் குடியேறிய தமிழ் மக்களின் வழிவந்தோர் வாழ்ந்து வருகின்றனர். தமிழையே வீட்டு மொழியாகப் பயன்படுத்துகின்றனர். தமிழ்ப் பத்திரிகைகளும், வார மாத இதழ்களும் அவர்களுடைய தமிழறிவை வளர்த்து வருகின்றன. பத்து ஆண்டிற்கு ஒரு முறையாகிலும் தமிழகம் சென்று வருகின்றனர். இன்றைய பாலித் தீவைக் காண்பவர்கள் ஐந்நூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்திய தமிழகத்தைக் காண்பதைப் போன்ற உணர்வினைப் பெறலாம். உலக மக்களைக் கவரும் சுற்றுலாத் தலமாக திகழும் பாலியில் தமிழர்கள் வணிகத்தில் சிறந்து விளங்குகின்றனர்.
சமயம்-பண்பாடு :
இந்தோனேசிய இந்து கோயில் கட்டட அமைப்பிலும் சிற்பங்களிலும் பல்லவ காலத்து கலாச்சார பண்பாட்டின் தாக்கத்தைப் பார்க்க முடிகின்றது. எகிப்திய கூர்ங்கோபுரம் (Pyramid) போன்ற பல தள அடுக்குகளுடன் மேற்கட்டுமானப் பகுதி உள்ள இக்கோவில்கள் தமிழ்நாட்டு மகாபலிபுரத்தில் உள்ள ஏழாம் நூற்றாண்டு கோயில்கள் போல இருக்கின்றன. இதற்குத் சிறப்பான உதாரணம் டியங்பிளேட்டியு (Dieng plateau) நினைவுச்சின்னங்களாகும். இந்து சிவன் கோவில்கள் டியங்கில் (கி.பி.675) கட்டப்பட்டன.
சாவகத்திலுள்ள சிவன் கோயில்கள் பெரும்பாலும் 6,500 அடி உயரமுள்ள டியெங் பீடபூமியிலேயே உள்ளன. இங்கு மாமல்லபுரத்திலுள்ள கோயில்களைப் போல் ஐந்து கோயில்கள் உள்ளன. இக்கோயில்கள் சிவவழிபாடுடைய திருக்கோயில்களாகும். இங்குள்ள சிவன் தாடியுடையவனாகவும், தொப்பி அணிந்தவனாகவும் காணப்படுகிறான். குடமுனிவன் என்றும், சிவகுரு என்றும் அழைக்கப்பட்ட தமிழ் வளர்த்த அகத்தியனின் குள்ள உருவமுள்ள சிலைகளும் இங்கு கண்டெடுக்கப்பட்டுள்ளன.
ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதி வரை தமிழ்நாட்டைப் போலவே சாவகத்தில் சுடுமண்ணால் கோயில் கட்டப் பெற்றும், சுண்ணத்தினால் மேற்பூச்சுப் பூசப்பட்டும் வந்தது. பிறகு கல்லால் கட்டப் பெற்றபோது, தமிழகத்திலிருந்து கல்தச்சர்களும் ஸ்தபதிகளும் பார்ப்பனர்களும் குடியேற்றப்பட்டனர். அவர்களில் பலர் அந்நாட்டிலேயே தங்கி நிலைத்த குடிமக்களால் வாழ்ந்து வந்தனர். தமிழ் நாட்டிலுள்ள தாராசுரம், சிதம்பரம், நாகப்பட்டிணம், பட்டீஸ்வரம் முதலிய இடங்களிலுள்ள சிற்ப அமைப்புகளைச் சாவகத்தில் காணலாம். சாவகத்தில் பௌத்தமும் சைவமும் தலைச்சிறந்த சமயமாய் விளங்கின. சிவனுக்கும் விஷ்ணுவிற்கும் வேறுபாடு காட்டப் படவில்லை. ஆனாலும் சாவக மக்கள் தங்கள் மன்னர்களை விஷ்ணுவைப் போல் காட்டாமல் சிவனைப் போலவும் புத்தரைப் போலவுமே காட்டியுள்ளார்கள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இந்தோனேசியாவில் தமிழர்கள் - Tamils in Indonesia - தமிழர் வாழும் நாடுகள் - Tamil Persons Living Countries - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - தமிழ், தமிழர்கள், தமிழர், கோயில், கோயில்கள், வருகின்றனர், நாடுகள், இந்தோனேசியாவில், வாழும், பெயர்கள், வாழ்ந்து, ஆண்டுகளுக்கு, குடியேறிய, தெரு, தகவல்கள், சாவகத்தில், இந்து, தமிழ்நாட்டுத், சிவன், பொழுது, தங்கள், காணலாம், பகுதி, காவடியும், நாடகங்களும், பாலித், போல், என்றும், கட்டப், | , இங்கு, உள்ள, பாலியில், திருவிழா, தமிழ்நாட்டு, அவர்களுள், மக்களுக்கும், tamilnadu, information, மேடான், மட்டும், countries, living, tamils, indonesia, tamil, persons, ஏறக்குறைய, மக்கள், எனும், வருகின்றன, மேடானில், அவற்றுள், இராமன், நித்தியானந்தம், அங்குக், மக்களின், தமிழ்ப், மாரியம்மன்