சோழர் வரலாறு - கி.மு. முதல் நூற்றாண்டுச் சோழர்
சமயம்: கரிகாலன் காலத்தில் சோழ நாட்டில் பல சமயங்கள் இருந்தன. கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் அசோகன் வேண்டுகோட்படி தமிழரசர் பெளத்த சமயப் பிரசாரத்திற்கு நாட்டில் இடம் தந்தனர். அன்று முதல் சேர சோழ பாண்டிய நாடுகளில் பெளத்தப் பள்ளிகளும் விகாரங்களும் பெருகின. கரிகாலன் காலத்தில் காவிரிப்பூம்பட்டினத்தில் இந்திரவிகாரம் இருந்திருத்தல் வேண்டும்; இங்ஙனமே சமணப் பள்ளிகளும் இருந்திருத்தல் வேண்டும்;[25] வேதியர் வடநூல் முறைப்படி வேள்விகள் செய்து வந்தனர். இவரன்றி வாணிகத்தின் பொருட்டுச் சோணாடு புக்க பல நாட்டு மக்கள் கொண்டிருந்த சமயங்கள் பலவாகும். இங்ஙணம் பற்பல சமயத்தவர் சோணாட்டில் இருந்தாலும், அவரனைவரும் ஒருதாயீன்ற மக்களைப் போலக் கரிகாலன் ஆட்சியில் கலந்து உறைந்தனர். அரசனும் எல்லாச் சமயத்தவரையும் மதித்து நடந்து வந்தான். கரிகாலன் தனக்கெனக் கொண்டிருந்த சமயம் சைவம் ஆகும். இவன் காஞ்சி நகரில் உள்ள பண்டைக் கோவிலாகிய ஏகம்பவாணர் திருக்கோவில் திருப்பணி செய்து வழிபட்டான். இவனது திருத்தொண்டினைச் சைவ சமயக் குரவரும் கி.பி. 7-ஆம் நூற்றாண்டினருமாகிய திருஞான சம்பந்தர் தமது தேவாரப் பதிகத்துச் சிறப்பித்துப் பாடியுள்ளார்.
“விண்ணுளார் மறைகள் வேதம் விரித்தோதுவார் கண்ணுளார் கழலின் செல்வார் கரிகாலனை நண்ணுவார் எழில்கொள கச்சிநகர் ஏகம்பத்(து) அண்ணலார் ஆடுகின்ற அலங்காரமே.”[26] |
இவனது உருவச் சிலை ‘ஏகாம்பரநாதர்’ கோவிலில் இருக்கிறது. இவன் வைதிக வேள்விகளையும் செய்தவன் ஆவன்.[27]
இவனது அணிமிக்க கோநகரான காவிரிப் பூம்பட்டினத்தில்,
“நுதல்விழி நாட்டத்து இறையோன் முதலாப் பதிவாழ் சதுக்கத்துத் தெய்வம் ஈறா” கப் |
பல கோவில்கள் இருந்தன என்பது அறியக் கிடக்கிறது.
பிற அரசர்கள்: அக்காலத்துப் பாண்டியன் வெள்ளியம் பலத்துத் துஞ்சிய பெருவழுதியாவன்; சேர அரசன் சேரமான் குடக்கோச் சேரல் இரும்பொறை என்பவன்; சிற்றரசர் - ஏனாதி திருக்கிள்ளி, ஈர்ந்துர்க் கிழான் தோயன் மாறன், சோழியஏனாதி திருக்குட்டுவன், கரிகாலனிடம் தோற்ற இருங்கோவேள் முதலியோர் ஆவர்.[28]
அரச குடும்பம்: கரிகால் வளவன் தந்தை இளஞ்சேட் சென்னி, தாய் அழுந்துர் வேள் மகள் என்பது முன்பே கூறப்பட்டது. இவன் நாங்கூர் (சீகாழித் தாலூகா) வேள் மகளை மணந்து கொண்டான்.[29] இவளன்றி வேறு மனைவியர் சிலரும் இருந்தனர்.[30] ஆதிமந்தியார் என்ற மகளும் இருந்தனள்[31] என்பர். இக்கூற்று ஆராய்ச்சிக்கு உரியது.
இறுதி : கிறிஸ்துவுக்கு முற்பட்ட நூற்றாண்டில் சோழப் பேரரசை ஏற்படுத்தி ஒரு குடைக் கீழ் வைத்தாண்ட கரிகாற் பெருவளத்தான் இறுதியில் குராப்பள்ளி என்ற இடத்தில் உலக வாழ்வை நீத்தான் என்பது தெரிகிறது. ‘குராப்பள்ளி’ என்பது குராமரத்தைத் தலமரமாகக் கொண்ட திருவிடைச் சிவத்தலமாகும் என்பது கருதப்படுகிறது.[32]
- ↑ 25. Asoka’t Rock Edicts 2 and 13.
- ↑ 26. திருக்கச்சி ஏகம்பம்: ‘மறையானை’ என்னும் பதிகம்; 7-ஆம் பாடல்.
- ↑ 27. புறம் 224.
- ↑ 28. K.N.S. Pillai's Chronology of the Early Tamils.
- ↑ 29. Thol. Porul S. 30 and its commentary.
- ↑ 30. பட்டினப்பாலை, வரி, 295, 299.
- ↑ 31. Sentamil, Vol.2, p. 114.
- ↑ 32. L. Ulaganatha Pillai’s ‘Karikala Chola’, p.66.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கி.மு. முதல் நூற்றாண்டுச் சோழர் - History of Chola - சோழர் வரலாறு - என்பது, கரிகாலன், இவன், இவனது