சோழர் வரலாறு - கி.மு. முதல் நூற்றாண்டுச் சோழர்

இரண்டாம் கரிகாலன்
முன்னுரை
இவன் திருமாவளவன், கரிகாற் பெருவளத்தான் முதலிய பல பெயர்களைப் பெற்றான். இவனது வரலாற்றை விரிவாக அறிவதற்குச் சிலப்பதிகாரம், பொருநர் ஆற்றுப்படை, பட்டினப்பாலை, எட்டுத் தொகையுள் உள்ள சில பாடல்கள், கலிங்கத்துப்பரணி, பெரிய புராணம் ஆகிய அனைத்தும் துணை செய்கின்றன - ரேனாண்டு சோழர் முதல் கி.பி.14-ஆம் நூற்றாண்டு வரை பொத்தப்பி, நெல்லூர், சித்துார் முதலியவற்றை ஆண்டு வந்த தெலுங்கச் சோழரும் தம்மைக் கரிகாலன் மரபினர் எனக் கல்வெட்டுகளிற் கூறிக் கொண்டு மகிழ்ந்தனர். எனின், இவனது பெருமையை என்னென்பது! கன்னட நாட்டிலும் சிற்றரசர் பலர் தம்மைக் கரிகாலன் மரபினர் எனக் கூறிக் கொண்டனர் என்பது கல்வெட்டுகளால் அறியக் கிடக்கும் அருஞ்செய்தியாகும். பிற்காலச் சோழராகிய விசயாலயன் மரபினரும் தம் செப்புப் பட்டயங்களிலும் கல்வெட்டுகளிலும் இவனைக் குறித்து மகிழ்ந்தனர். எனின், இவன் வீரச் செயல்களும் சோழப் பேரரசை நிலை நாட்டிய இவனது பெருந் திறமையும் தமிழகத்தில் மறவாது போற்றப்பட்டமையும் அவ்வக் காலப்புலவர் தத்தம் நூல்களில் அவற்றைக் குறித்து வந்தமையுமே காரணமாகும். இனி, இப்பெருமகன் வரலாற்றை முறைப்படி காண்போம்.
இளமையும் அரசும்
இவன் இளஞ் சேட்சென்னி, என்பவன் மகன். ‘இளஞ்சேட் சென்னி’ என்ற பெயரானே, இவன் தந்தை முடி புனைந்து அரசாண்டவன் அல்லன், அரசனுக்கு இளையவன்; அரசு பெறாதே காலங் கழித்தவன்[குறிப்பு 1] என்பது பெறப்படுகிறது. இவன் அழுத்தூர் வேள் மகளை மனந்தவன். அப்பெருமாட்டி நல்லோரையில் கரிகாலனைப் பெற்றாள். [1]கரிகாலன் வளர்பிறை போல வளர்ந்து பல கலைகளும் பயின்று ஒப்பற்ற இளஞ்சிங்க மாக விளங்கினான். அப்பொழுது உறையூரை ஆண்ட இவன் பெரிய தந்தை இறந்தனன்; தந்தையும் இறந்தனன். இறந்த அரசன் மைந்தன் பட்டம் பெற முனைந்தனனே, அன்றி யாது நடந்ததோ தெரியவில்லை; நாட்டிற் குழப்பம் உண்டாயிற்று. கரிகாலன் உறையூரினின்றும் வெளிப்பட்டுப் பல இடங்களில் அலைந்து திரிவானாயினன். நாட்டில் இருந்த நல்லறிஞர் பண்டைக்கால வழக்கம் போலக் கழுமலத்து[3] இருந்த யானையைக் கட்டவிழ்த்துவிட்டு அரசுக்கு உரியவனைக் கொண்டு வருமாறு ஏவினான். அந்த யானை பல இடங்களில் அலைந்து திரிந்து, கருவூரில் இருந்த கரிகாலனைத் தன்மீது எடுத்துக் கொண்டு உறையூரை அடைந்தது. அது கண்ட பெருமக்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தவராய்க் கரிகாலனைச் சோழ அரசன் ஆக்கினர்.
பின்னர் யாது நடந்ததென்பது விளங்கவில்லை. தாயத்தார் இவன் மீது அழுக்காறுற்று இவனைப் பிடித்து சிறைக் கூடத்தில் அடைத்தனர்;[4] அதற்குள்ளேயே இவனைக் கொன்றுவிடத் துணிந்த அவர் சிறைக் கூடத்திற்கு எரியூட்டினர். பெருவீரனாகிய கரிகாலன் எவ்வாறோ தப்பி வெளிப்போந்தான். தன் தாய் மாமனான இரும்பிடர்த் தலையார் என்ற நல்லிசைப் புலவர் துணைப்பெற்று, மதிற்புறத்தைக் காவல் செய்து வந்த வாட்படைஞரைப் புறங்கண்டு, தாயத்தாரை ஒழித்து, அரசுரிமையைக் கைக் கொண்டு அரியணை அமர்ந்தான்.[5]
இவன் எரிந்து கொண்டிருந்த சிறைக்கூடத்திலிருந்து வெளிப்பட்ட போது இவன் கால் கரிந்து விட்டதால் ‘கரிகாலன்’ எனப் பெயர் பெற்றான் என்று சில பழம் பாடல்கள் பகர்கின்றன. இங்ஙனமாயின், ‘முதற் கரிகாலன்’ என்பான் கொண்ட பெயருக்கு என்ன காரணம் கூறுவது?[6]
போர்ச் செயல்கள்
இவனுடைய போர்ச் செயல்கள் பொருநர் ஆற்றுப் படையிலும் சிலப்பதிகாரத்திலும் நன்கு விளக்கப்பட்டுள்ளன:
(1) இவன் தமிழ் நாட்டைத் தன் அரசாட்சியிற் கொணர அவாவிச் சேர பாண்டியருடன் போரிட்டான். போர் ‘வெண்ணி’யில் நடைபெற்றது. ‘முருகன் சீற்றத்து உருகெழுகுரிசி’லான கரிகாலன் அவ்விரு வேந்தரையும் வெண்ணிப் போரில் அவியச் செய்தான். இதனைப் பொருநர் ஆற்றுப் படை பாடிய முடத்தாமக் கண்ணியார்,
“இரும்பனம் போந்தைத் தோடும் கருஞ்சினை அரவாய் வேம்பின் அங்குழைத் தெரியலும் ஓங்கிருஞ் சென்னி மேம்பட மிலைந்த இருபெரு வேந்தரும் ஒருகளத்(து) அவிய வெண்ணித் தாக்கிய வெருவரு நோன்றாள் கண்ணார் கண்ணிக் கரிகால் வளவன்.”[7] |
என்று சிறப்பித்துள்ளார்.
- ↑ 1. இங்ஙனம் அரசு பெறாது காலம் கழித்தவன் பல்லவ மரபினருள் இளங்கோ - விஷ்ணு கோப வர்மன் என்பது இங்கு நினைவு கூர்தற்குரியது. ஆயின், ‘அவன் மகன் முதலியோர் பல்லவ அரசராக விளங்கினர் என்பதும் இங்கு நோக்கத் தக்கது.
- ↑ 2. Tolkappiyam, Amgam. S. 30. Commentary.
- ↑ 3. கழுமலம் - சீகாழி. அங்கு யானை கட்டப்பட்டிருந்த இடம் இன்றும் இருக்கிறது.
- ↑ 4. இப்பழக்கம், மூர்த்தி நாயனார் புராணத்தால் பாண்டியநாட்டிலும் இருந்ததென்பதை உணரலாம்.
- ↑ 5. சந்திரகுப்த மோரியன் நந்தரால் சிறையில் இடப்பெற்றமை இங்குக் கருதத்தகும்.
- ↑ 6. Vide K.N.S. Pillai’s ‘The Chronology of the Early Tamils’, p. 129 and its foot-note.
- ↑ 7. பட்டினப்பாலை வரி 274-282.
1 | 2 | 3 | 4 | 5 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கி.மு. முதல் நூற்றாண்டுச் சோழர் - History of Chola - சோழர் வரலாறு - இவன், கரிகாலன், குறிப்பு, கொண்டு, இருந்த, பொருநர், இவனது