சோழர் வரலாறு - கி.மு. முதல் நூற்றாண்டுச் சோழர்
(2) கரிகாலன் பன்றி நாட்டிற்குச் சென்றனன். பன்றி நாடு நாகப்பட்டினத்தைத் தலைநகராகக் கொண்டு பாண்டிய நாட்டிற்கு வடக்கில் இருப்பது. இதில் எயினர் என்ற மரபினர் இருந்தனர். அவருள் நாகர் ஒரு பிரிவினர். அவருள்ளும் ஒளியர் என்னும் உட்பிரிவினரே அரசாளுதற்குரியர் ஆதலின் அந்த ஒளி நாகரைக் கரிகாலன் வெற்றி கொண்டான், பிறகு தென்பாண்டி நாட்டை அடிப்படுத்தி மேற்கே சென்றான்.
(3) கற்கா (பாலக்காடு), வேள் நாடு (திருவாங்கூர்), குட்டம் (கொச்சி), குடம் (தென் மலையாளம்), பூழி (வடமலையாளம்) ஆகிய பகுதிகளைக் கொண்ட சேர நாட்டை அடைந்தான்; அந்நாடுகளை வென்று கரிகாலன் தன் பேரரசிற் சேர்த்துக் கொண்டான்.
(4) இடை நிலங்களில் வாழ்ந்த பொதுவர் என்பாரை (இடை நில அரசரை) வென்றனன்; இருங்கோவேள் முதலிய வேளிரைத் தனக்கு அடங்கியவர் ஆக்கினன்.
(5) இங்ஙனம் தமிழகத்தை அடிப்படுத்திய கரிகாலன் அருவா நாட்டை (தொண்டை நாட்டை)க் கைப்பற்ற எண்ணி வடக்கே சென்றான்; அந்நாட்டில் ஓரிடத்தினின்றிக் கண்டவாறு அலைந்து திரிந்த குறும்பரை அடக்கி, அருவாளரை வென்று,[8] தொண்டை நாட்டு 24 கோட்டங்களிலும் அவர்களை நிலைபெறச் செய்தான்;[9] 24 கோட்டங்களிலும் வேளாளர் பலரைக் குடியேற்றினான்.[10]
(6) பின்னர்க் கரிகாலன் மலையமானாட்டை அடைந்தான். இது பெண்ணையாற்றங்கரையில் உள்ள திருக்கோவலூரைத் தலைநகராகக் கொண்டது. இதனை ஆண்டவன் மலையமான். இவன் சோழன் ஆட்சிக்கு உட்பட்டவன் ஆயினான்.
வடுகநாடு
(7) வேங்கடம் வரை வெற்றிகொண்ட கரிகாலன், வடக்கு நோக்கிப் பெருஞ் சேனையுடன் புறப்பட்டான்; வடுகர் சிற்றரசர் பலரை வென்றான்.
வடநாடு
(8) பின்னர்க் கரிகாலன் நேரே இமயம் வரை சென்று மீண்டான், அப்பொழுது மகதப் பெருநாடு சுங்கர் ஆட்சியிலிருந்து கண்வ மரபினர் ஆட்சிக்கு மாறிவிட்ட காலமாகும். கி.மு. 73-இல் வாசுதேவ கண்வன் மகதநாட்டு அரசன் ஆனான். அவனுக்குப் பின் கண்வர் மூவர் கி.மு. 28 வரை ஆண்டனர்.[11] அதற்குப் பிறகே மகதப் பெருநாடு ஆந்திரர் ஆட்சிக்கு உட்பட்டது. வலியற்ற கண்வர் ஆண்ட காலத்திற்றான் கரிகாலன் வடநாட்டுச் செலவு ஏற்பட்டதாதல் வேண்டும். அக்காலத்தில் கோசாம்பியைக் கோநகராகக் கொண்ட வச்சிரநாடும், உச்சையினியைத் தலைநகராக கொண்ட அவந்தி நாடும் தம்மாட்சி பெற்றிருத்தல் வேண்டும். அதனாற் போலும், கரிகாலனை வரவேற்று மகத நாட்டு மன்னன் பட்டி மண்டபம் கொடுத்தான்; வச்சிரநாட்டு வேந்தன் கொற்றப் பந்தர் அளித்தான்; அவந்தி வேந்தன் தோரணவாயில் வழங்கினான் என்று சிலப்பதிகாரம் செப்புகிறது.[12] பின் இரு வேந்தரும் சந்திரகுப்த மோரியன் காலமுதல் சிற்றரசராகவே அடிமைப்பட்டு ஹர்ஷனுக்குப் பின்னும் இருந்து வந்தனர் என்று வரலாறு கூறுதல் நோக்கத்தக்கது.[13]
ஈழநாடு
இங்ஙனம் இமயம் வரை இறுமாந்து சென்று மீண்ட கரிகாலன் இலங்கை நாட்டின் மீது தன் கருத்தைச் செலுத்தினான்; கப்பற் படை வீரரை அழைத்துக் கொண்டு இலங்கைத் தீவை அடைந்தான்; அதனை வென்று, தன் தண்டத் தலைவன் ஒருவனை ஆளவிட்டு மீண்டான்;[14] மீண்டபோது பன்னிராயிரம் குடிகளைச் சோணாட்டிற்குக் கொணர்ந்தான் என்று கலிங்கத்துப் பரணி கூறுகிறது.
சோழப் பெருநாடு
கூடுரும் அதைச் சுற்றியுள்ள பகுதியும் ‘காகந்திநாடு’ என்று கல்வெட்டுகளிற் கூறப்படுகின்றன. ‘காகந்தி நாடு’ பற்றிய குறிப்பு பழங்காலத்ததாகக் கி.பி. 2ஆம் நூற்றாண்டிற் செய்யப்பட்ட மணிமேகலையிற் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்பகுதிகளைப் பிற்காலத்தில் ஆண்ட ரேனான்டு, பொத்தப்பிச் சோழர்கள் தங்களைக் ‘கரிகாலன் மரபினர்’ எனக் கல்வெட்டுகளிற் குறித்துள்ளனர். ‘காஞ்சி நகரத்தைக் கரிகாலன் புதுப்பித்தான்; தொண்டை மண்டலத்தைக் காடுகெடுத்து நாடாக்கினான்’ என்றெல்லாம் கலிங்கத்துப்பரணி, பெரிய புராணம் முதலிய அருந்தமிழ் நூல்கள் அறைகின்றன. இவை அனைத்தையும் ஒரு சேர நோக்கி, நடுநிலைமையினின்று ஆராயின், கரிகாலன் காலத்துச் சோழப் பெருநாடு வட பெண்ணையாறு முதல் கன்னிமுனைவரையும் பரவி இருந்தது, என்னில் முற்றிலும் பொருத்தமாகும்.
- ↑ 8. அகம், 141.
- ↑ 9. பட்டினப்பாலை, வரி 275.
- ↑ 10. செங்கற்பட்டு மாவட்டத்தில் உள்ள கோவூர், சூணாம்பேடு முதலிய இடங்களில் உள்ள இக்கால முதலிமார்கள் தம்மைக் கரிகால் வளவனால் குடியேற்றப்பெற்ற வேளாளர் மரபினர் எனக் கூறுகின்றனர்.- Vide. L. Ulaganatha Pillai’s ‘Karikala Chola’ p. 34 foot-note.
- ↑ 11. V.A. Smith's ‘Early History of India’ pp. 215-216.
- ↑ 12. இந்திரவிழவூரெடுத்த காதை, வரி; 99-110
- ↑ 13. Ibid. No. I.p. 369.
- ↑ 14. ‘இலங்கை கி.மு. 44 முதல் கி.மு. 17 வரைக்குட்பட்ட 15 ஆண்டுகள் தமிழர் வசமிருந்தது’ என்னும், மஹா வம்சக் கூற்று இதனை உறுதிப்படுத்தல் காண்க- Vide ‘A Short History of Ceylon’ pp. 722-725 by Dr.W. Geiger, in ‘Buddhistic Studies’ ed. by R.C. Law.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கி.மு. முதல் நூற்றாண்டுச் சோழர் - History of Chola - சோழர் வரலாறு - கரிகாலன், பெருநாடு, நாட்டை, ஆட்சிக்கு, தொண்டை, அடைந்தான், கொண்ட, வென்று