சோழர் வரலாறு - கி.மு. முதல் நூற்றாண்டுச் சோழர்
செந்தமிழ் வளர்ச்சி: இச்செங்கோல் வேந்தர் ஆட்சியில் தமிழ் செம்மையுறவே வளர்ச்சிபெற்று வந்ததென்பது கூற வேண்டுமோ? இவனது தாய் மாமனான இரும்பிடர்த் தலையாரே பெருந்தமிழ்ப் புலவர்; அவராற் பாதுகாப்புப் பெற்ற இவனும் சிறந்த தமிழ் அறிவு வாய்க்கப் பெற்றிருந்தான் என்பதில் வியப்பில்லை. இவனைப் பாராட்டிய புலவர் பலராவர். அவருள் இவனை பட்டினப்பாலையாற் புகழ்ந்து பாராட்டிய பெரும் புலவர் உருத்திரன் கண்ணனார் என்பவர். இவன் அவர்க்கு 16 லக்ஷம் பொன் பரிசளித்தான் என்பர். பட்டினப்பாலை படித்து இன்புறத்தக்க அழகிய நூலாகும். இவன் மீது பாடப்பெற்ற மற்றொரு பெரிய பாட்டு பொருநர் ஆற்றுப்படை என்பது. அதனைப் பாடியவர் முடத்தாமக் கண்ணியார் என்பவர். அப்பாவில் இவனுடைய போர்ச் செயல்கள், குணாதிசயங்கள் இன்னபிறவும் செவ்வனே விளக்கப் பெற்றுள்ளன. இவன் வரலாற்றை அறிய அது பெருந்துணை செய்வதாகும். இவனைப்பாடிய பிற புலவருள் காவிரிப்பூம்பட்டினத்துக்காரிக்கண்ணனார் என்பவர் ஒருவர். இவர், கரிகாலன் தன் நண்பனான பாண்டியன் வெள்ளி அம்பலத்துத் துஞ்சிய பெருவழுதியுடன் இருந்த மகிழ்ச்சி மிக்க நேரத்திற் சந்தித்து, இருவரையும் பலபடப் பாராட்டிப் பாடியுள்ளார்.[20] கரிகாலனைப் பாடிய மற்றொரு புலவர் மருத்துவன் தாமோதரனார் என்பவர். இவர் கரிகாலனது அரசியற் பொறுப்பை நன்கு உணர்ந்து, கடற்கரை இடத்துக் கழியின் நீரால் விளைந்த உப்பை முகந்து கொண்டு மலைநாட்டை நோக்கிச் செல்லும் வலியையுடைய பாரம் பொறுக்கும் பகட்டை ஒப்பாய் நீ’ என விளக்கியிருத்தல் பாராட்டத்தக்கது. இவர் பின்னும் ‘வெற்றியாக முழங்கும் முரசினையும் தப்பாத வாளினையும் உடைய நினது வெண்கொற்றக் குடை உவாமதி போன்றது என்று நினைந்து நின்பால் பரிசில் பெற யான் வந்தேன்”[21] எனக் கூறுதல், கரிகாலனது செங்கோற் சிறப்பை உணர்த்தி நிற்கின்றதன்றோ?
இக்கரிகாலனைப் பாடிய மற்றொரு புலவர் கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார் என்பவர். இவர் சென்றவுடன் கரிகாலன் பரிசில் தரவில்லை: எக்காரணம் பற்றியோ காலம் தாழ்த்தான். அப்பொழுது புலவர் வருந்தி ஒரு பாட்டைப் பாடினார்; அதன் அகத்துக் கரிகாலன் சிறப்பைப் பொது முறையிலே வைத்துக் கூறியிருத்தல் கவனித்தற்குரியது.
“கரிகாலன் காற்று இயங்கினாற்போலும் தாவுதலை உடையதாகிய கதியையுடைய குதிரையுடன் கொடி நுடங்கும் உச்சியைக் கொண்ட தேர் உடையவன்; கடலைக் கண்டாற் போலும் ஒளி பொருந்திய படைக் கலங்களைக் கொண்ட சேனை வீரரை உடையவன்; மலையோடு மாறுபட்டுப் பொரும் களிறுகளை உடையவன் இடி முழங்கினாற் போலும் அஞ்சத்தக்க முரசம் உடையவன்; போரில் மேம்படும் வெற்றியை உடையவன்.”[22]
இக்கரிகாலனைப் பிற்காலத்திற் பாடிய புலவர் பலராவர். அவர்கள் பரணர், நக்கீரர், இளங்கோவடிகள் சயங்கொண்டார், சேக்கிழார் முதலியோர் ஆவர். இவன் காலத்தில் தமிழ்மொழி சிறந்த நிலையில் இருந்தது என்பது சங்க நூல்களைக் கொண்டு நன்கறியக் கிடக்கிறது. இவன், புலவர்தம் கல்வித் திறத்தைச் சீர்தூக்கிப் பட்டி மண்டபத்தையும் நல்லாசிரியர் ஒருங்கிருந்து ஆராய்ச்சி செய்யத்தக்க கலைக் கழகங்களையும்[23] அமைத்த அறிஞன் ஆவான். இப்பெருந் தகையாளன் புலவர்களை நன்கு வரவேற்று வேண்டிய நல்கித் தனக்கு அவர் மாட்டுள்ள ஆர்வமிகுதியால், அவர் பின் ஏழடி நடந்து சென்று மீளும் கடப்பாடு உடையவனாக இருந்தான்.[24] வடபெண்ணையாறு முதல் குமரிமுனை வரைப்பட்ட பெருநாட்டைத் தன் ஒரு குடைக் கீழ் வைத்தாண்ட கரிகாற் சோழன், புலவர் பின் ஏழடி நடந்து சென்று மீளும் பழக்கம் உடையவனாக இருந்தான் எனின், இப்பெருமகனது பெருந்தன்மை யையும் தமிழ்ப்புலவர் மாட்டு இவன் வைத்திருந்த பெருமதிப்பையும், சிறப்பாகத் தன் தாய்மொழி வளர்ச்சியில் இவனுக்கிருந்த தனிப்பற்றையும் என்னெனப் புகழ்வது! இத்தகைய தமிழ்ப் பேரரசர் அரும்பாடு பட்டு வளர்த்த சங்கத் தமிழாற்றான் - நாம் இன்று ‘தமிழர்’ எனத் தருக்குடன் நிற்கின்றோம் என்னல் மிகையாமோ?
கலைகள் : கரிகாலன் காலம் செழித்த காலமாதலின் பல கலைகளும் ஓங்கி வளர்ச்சியுற்றன என்பதில் ஐயமில்லை. இசை, நாடகம் முதலியன வளர்ந்தோங்கின என்பது பொதுவாகச் சங்க நூல்களைக் காணும்போது நன்கறியலாம். கி.பி. 2ஆம் நூற்றாண்டில் மாதவி நடித்தபோது இருந்த பல்வகை ஆசிரியர், கருவிகள், நடிப்பு முறைகள் இன்னபிறவும் கரிகாலன் காலத்தில் நன்னிலையில் இருந்தன என்பதில் ஐயமுண்டோ? இதன் விரிவெல்லாம் அடுத்த பகுதியிற் காண்க.
- ↑ 20. புறம் 58.
- ↑ 21. புறம் 60.
- ↑ 22. அகம் 197.
- ↑ 23. பட்டினப்பாலை; வரி. 169-171.
- ↑ 24. பொருநர் ஆற்றுப் படை வரி. 76-129; 151;173.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கி.மு. முதல் நூற்றாண்டுச் சோழர் - History of Chola - சோழர் வரலாறு - புலவர், இவன், என்பவர், உடையவன், கரிகாலன், இவர், பாடிய, மற்றொரு, என்பதில், என்பது