சேர மன்னர் வரலாறு - சேரமான் பாலைபாடிய பெருங்கடுங்கோ
மலையாள மாவட்டத்து, இப்போது வயனாடு எனப்படும் பகுதிக்குப் பண்டைக்காலத்திலும் இடைக் காலத்திலும் பாயல் நாடு என்று பெயர் வழங்கினமை சங்க நூல்களும்[1] கல்வெட்டுகளும்[2] குறிக்கின்றன. அப் பகுதியிலுள்ள குடமலைத் தொடர்க்குப் பாயல் மலை என்பது பெயர். மலையாளத்துக் குறும்பர் நாடு வட்டத்தின் ஒரு பகுதிக்கும் பாயல் நாடு என்றே இன்றும் பெயர் வழங்குகிறது.
இப் பாயல் நாட்டின் வேறொரு பகுதிக்குக் கடுங்கோ நாடு என்பது பெயர். வள்ளுவ நாடு மாவட்டத்ததில் இன்றும் கடுங்கோவூர், கடுங்கோபுரம் எனப் பெயர் தாங்கிய ஊர்கள் இருக்கின்றன. அந்நாட்டிலிருந்து அரசு புரிந்தவர் கடுங்கோ எனப்படுவர். அந்நாடு செல்வக் கடுங்கோ வாழியாதன் காலத்திலோ அவற்கு முன்னோ இப்பெயரை எழுதியிருக்கலாம். இந்நிலையில் தென்பாண்டி நாட்டில், கொற்கை, ஆற்றூர் முதலிய ஊர்கள் இருக்கும் பகுதிக்குக் குடநாடு என்றும் கடுங்கோ மண்டலம்[3] என்றும் பெயர் உண்டு; குடநாட்டுப் பிரமதேயம் கடுங்கோ மங்கலமான உலகுய்ய வந்த பாண்டியச் சதுர்வேதிமங்கலம் எனவரும் ஆற்றூர்க் கல்வெட்டொன்றும்[4] ஈண்டு நினைவு கூரத்தக்கது. வேள்விக்குடிச் செப்பேட்டில்[5]காணப்படும் பாண்டி வேந்தர் நிரலில் முன்னோனாக வரும் கடுங்கோவின் பெயரால் இத்தென்பாண்டி நாட்டுப் பகுதி இவ்வாறு கடுங்கோ மண்டலம் எனப்படுவ தாயிற்று. ஈங்கு நாம் காணும் கடுங்கோ, பொறை நாட்டுச் சேர வேந்தராவர். தென்பாண்டி நாட்டில் காணப்படும் கடுங்கோ பாண்டியனாவன். தென்பாண்டி நாட்டுப் பகுதிக்குக் கடுங்கோ மண்டலம் என்பதோடு குடநாடு என்ற பெயரும் இருப்பது நோக்கின், பாண்டியனான கடுங்கோ, இப்பொறை நாட்டுக் கடுங்கோ வழியினனாக லாம் என்றும், அவனுடைய முன்னோர் தமது நாட்டை நினைவு கூர்தற் பொருட்டு இத் தென் பாண்டி நாட்டுப் பகுதியைக் குடநாடு என்று வழங்கியிருக்கலாம் என்றும், கடுங்கோவுக்குப் பின் குடநாடு கடுங்கோ மண்டலமாகி யிருக்கலாம் என்றும், எனவே, பொறை நாட்டுக் கடுங் கோக்களுக்கும் தென்பாண்டி நாட்டுக் குடநாட்டுப் பகுதியை யாண்ட கடுங்கோவுக்கும் தொடர்பு இருந் திருக்கலாம் என்றும் நினைத்தற்குப் போதிய இடம் உண்டாகிறது. இவ்வாறே நாவரசர் காலத்தில் தென்குமரிப் பகுதி கொங்கு நாடு[6] எனப் பெயர் எய்திய தற்கும் காரணம் இல்லாது போதற்கு இடனில்லை என அறியலாம்.
இது நிற்க, பெருங்கடுங்கோ, இளங்கடுங்கோ என்பன இக் கடுங்கோ நாட்டு வேந்தர் பெயராதலை அறிய வேண்டும். பாலை பாடிய பெருங்கடுங்கோ நன்னனது ஏழில் மலை நாட்டைப் பாராட்டிப் பாடுகின்றார். கொண்கான நாடு பொன்வளமுடையது என்றும், அந் நாடு நன்னனுக்கு உரியது என்றும், அந் நாட்டில் ஏழில்மலை சிறந்ததொரு மலை என்றும், பெறுதற்கரிய பேறுகளுள் அவ் வெழில் மலை சிறந்தது என்றும் கூறுகின்றார். இதனால், இவர் நன்னன் வாழ்ந்த காலத்தவர் என்பது பெறப்படும். ஆயினும் இந்த நன்னன் வேறு. களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரல் காலத்தில் வாழ்ந்த நன்னன் வேறு.
பெருங்கடுங்கோவின் பாட்டுகளில் வரும் அரிய உவமங்களும் கருப்பொருள்களும் கருத்துகளும் இவரது பரந்த பெரும் புலமையை விளக்குவனவாகும். இவரது நுண்மாண் நுழைபுலப்பெருமையை ஒருவன் இனிதெடுத்துக் கூற விரும்பின், அஃது ஒன்றே ஒரு தனித்த பெரு நூலாகும் பெருமையுடையது, கருத்து களின் பொருட்கவினும், அவற்றை வெளிப்படுத்தும் சொல்வழக்கும், இயற்கைக் காட்சிகளைப் படிப்போர் மனக்கிழியிற் பொறிக்கும் சொல்வளமும், உலகிய லறிவும், உயரிய நோக்கங்கலும் படிக்குந்தோறும் வற்றாத இன்பம் சுரப்பவையாம். அரசரிற் பிறந்து அரசரில் வளர்ந்து அரசு முறைக்குரிய கலை பலவும் கற்றுத் துறைபோகிய இப் பெருங்கடுங் கோவின் பெருமை நம் தமிழ்மொழிக்கே சிறப்பாக விளங்குகிறது. “கற்றறிந்தார் ஏத்தும் கலி” எனப்படும் கலித்தொகையைக் கோத்த நல்லந்துவனார், பிற ஆசிரியர் எவரும் வைக்காதொழிந்த பாலைத் திணைப்பாட்டை முதற்கண் வைத்து முறை செய்து கோத்ததற்குக் காரணம் அப் பாட்டை இப் பெருங்கடுங்கோ பாடியது பற்றியே எனின் ஒரு சிறிதும் அது மிகையாகாது.
- ↑ 1. புறம் 398.
- ↑ 2. Coorg. Ins. Vol. 1. Introduction P.3.
- ↑ 3. A.R. No. 391 of 1930.
- ↑ 4. A.R. No. 468 of 1930.
- ↑ 5. Epi. Indi. Vol. xvii. No. 16
- ↑ 6. திருநாவுக். 213: 2.
1 | 2 | 3 | 4 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சேரமான் பாலைபாடிய பெருங்கடுங்கோ - History of Chera - சேர மன்னர் வரலாறு - கடுங்கோ, என்றும், நாடு, பெயர், பாயல், தென்பாண்டி, குடநாடு, நாட்டுக், நாட்டுப், நன்னன், பெருங்கடுங்கோ, நாட்டில், என்பது, பகுதிக்குக், மண்டலம்