சேர மன்னர் வரலாறு - சேரமான் பாலைபாடிய பெருங்கடுங்கோ
மராமலர் கொண்டு மனைமுழுதும் கோலஞ் செய்து முருகவேளை வழிபடும் செல்வர் மனை யொன்றின் உருவம் மனக் கண்ணில் தோன்றுகிறது. உடனே, பெருங்கடுங்கோ தமது தமிழ் கமழும் மனங் கனிந்து “மராஅ மலரோடு விராய் அய்ப் பராஅம், அணங்குடை நகரின் மணந்த பூவின் நன்றே கானம் - நயவரும் அம்ம[23]” என்று பாடுகின்றார். மரங்களின் இடையே யிருந்து குயில்கள் கூவுகின்றன. அவற்றின் இன்னிசைக் குரல் அவரது செவியகம் நிறைந்து இன்பம் செய்கிறது. அதன் ஓசை அவர்க்கு ஒரு புதுப்பொருள் தருகிறது. பிரிவு கருதிய காதலர்க்குப் பிரியாதிருக்குமாறு பேசும் பெண்மகள் ஒருத்திக்கு இக் காட்சி எழுப்பும் உணர்வை எண்ணுகிறார். அந் நங்கை, “குரா மரங்கள் அரும்பு தொடுக்கின்றன; ஆகவே இது முன்பனிக் காலம் ; பின்னர் வருவது பின்பனிக் காலம்; அது பிரிந்தார்க்குத் துன்பம் தருவது; ஆதலால், கூடியுறையும் காதலர்களே, நீவிர் பிரியாதிருந்து கூடுமின்” என்று கூறுவதாக நினைக்கின்றார். “பின்பனி - அமையம் வருமென முன்பனிக் கொழுந்து முந்துறீஇக் குரவு அரும்பினவே, புணர்ந்தீர் புணர்மினோ என இணர்மிசைச் செங்கண் இருங்குயில் எதிர்குரல் பயிற்றும், இன்ப வேனிலும் வந்தன்று[24]” என்று அக் குயில் கூறுவதாகப் பாடுகின்றார்.
பாலைத்திணை பாடுவதில் வல்லவராகிய நம் புலவர் பெருந்தகை, இக் காட்சி யின்பங்களை நுகர்தற் கெனத் தலைமைக் குணங்களே நிறைந்து இளமை நலம் கனிந்து விளங்கும் தலைமகன் ஒருவனையும் தலைமகள் ஒருத்தியையும் கொணர்ந்து நிறுத்தி, அவர்ளிடையே நிகழும் பேச்சுகளை எடுத்தோதுகின்றார். தலை மகளோடு கூடியுறையும் தலைமகன் கடமை காரணமாகப் பிரியக் கருதுகின்றான்; தன் பிரிவை மெல்லத் தன் காதலிக்கு உணர்த்தலுற்று, “அன்பே, நின்னுடைய மனையகத்தே நின்னைத் தனிப்ப நிறுத்தி யான் பிரிந்திருப்பது என்பது இயலாது; அவ்வாறு ஒன்று இயலுமாயின், அதனால் என் மனைக்கு இரவலர் வாராத நாள்கள் பல உண்டாகுக[25]” என்று இயம்பு கின்றான். பிறிதொருகால் அவன் பிரியவேண்டுவது இன்றியமையாதாகிறது; பிரியக் கருதுகிறான்; பிரிவுக் குறிப்பைத் தோழி அறிகிறாள்; அவள், “தலைவரே, இளமைச் செவ்வியும் காதல் வாழ்வும் ஒருங்கு பெற்றவர்க்கு அவற்றினும் செல்வம் சிறந்ததாகத் தோன்றுமோ?’ செல்வம் இல்லாமையால் ஒருவரது ஆடையை மற்றவர் கூறு செய்து உடுக்கும் அத்துணைக் கொடிய வறுமை உண்டாயினும் ஒன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை[26]” என்று சொல்லுகிறாள். மடங்கா உள்ளமுடைய தலைமகன் பிரிவையே நினைவானாயினன். அவனை நோக்கி, “ஐயா, நீவிர் சென்று வருக; சென்றிருக்குங்கால் இங்கிருந்து வருவோரைக் காண்பீர். கண்டால் எம்மைப்பற்றி அவரைக் கேட்கலாகாது” என்றாள். அவன் குறுநகை செய்து, “என்?” என்றான்; “கேட்டால், நீ மேற்கொண்ட வினை தடைப்படும்; எடுத்த வினை முடியாமை கண்டு மக்கள் நின்னை இகழ்வர்; நினது தலைமை அதனால் சிதையும்” என்பது தோன்ற,
“செல்; இனி, சென்று நீ செய்யும் வினைமுற்றி, ‘அன்பற மாறி யாம் உள்ளத் துறந்தவள் பண்பும் அறிதிரோ?’ என்று வருவாரை எம்திறம் யாதும் வினவல்; வினவின், பகலின் விளங்கும் நின் செம்மல் சிதையத் தவலரும் செய்வினை முற்றாமல், ஆண்டு, ஓர் அவலம் படுதலும் உண்டு” |
என்று கூறுகின்றாள்[27]. காளை யுள்ளத்தில் கவலையும் கலக்கமும் கஞலுகின்றன; கையறவு படுகின்றான்.
சின்னாட்குப்பின், தன் காதலிபால் தனது பிரிவுக் குறிப்பைத் தெரிவிக்கின்றான். அவள் தன் மகனைக் கையில் ஏந்திக் கொண்டு நிற்கிறாள். மகனுடைய தலை எண்ணையிட்டு நீவிப் பூச்சூடி வனப்புடன் விளங்கு கிறது. “பிரிவது அறத்தாறு அன்று'’ எனச் சொல்லித் தன் காதலனைச் செலவு விலக்க நினைத்தாள். துயர் மீதூர்ந்து நா எழாவாறு தடுத்தொழிந்தது. ஆயினும், அவள், தனது கருத்தைக் கண்ணாலும் முகத்தாலும் காட்டினாள். அவளது அப்போதைய நிலை அவனுடைய மனக் கிழியில் நன்கு பதிந்து விட்டது. அவள், தன் மகன் தலையில் சூடிய பூவை மோந்து உயிர்த்தாள். அதன் வெப்ப மிகுதியால் பூவும் நிறம் மாறி வதங்கிவிட்டது. அதனை நினைந்து தான் செல்வது தவிர்ந்ததாக அவன் கூறியதனைப் பெருங் கடுங்கோ அப் பாட்டொன்றில் சொல்லோவியம் செய்கின்றார், காண்மின்;
“பரல் முரம்பாகிய பயமில் கானம் இறப்ப எண்ணுதிராயின் அறத்தாறு அன்று என மொழிந்த தொன்றுபடு கிளவி அன்ன வாக என்னுநள் போல முன்னம் காட்டி முகத்தின் உரையா ஒவச் செய்தியின் ஒன்று நினைந்து ஒற்றிப் பாவை மாய்த்த பனிநீர் நோக்கமொடு ஆகத்து ஒடுக்கிய புதல்வன் புன்தலைத் தூநீர் பயந்த துணையமை பிணையல் மோயினன் உயிர்த்த காலை மாமலர் மணியுரு இழந்த அணியழி தோற்றம் கண்டே கடிந்தனம் செலவே[28] |
என்று வருவது அப் பாட்டு.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சேரமான் பாலைபாடிய பெருங்கடுங்கோ - History of Chera - சேர மன்னர் வரலாறு - அவள், அவன், தலைமகன், செய்து