சேர மன்னர் வரலாறு - சேரமான் பாலைபாடிய பெருங்கடுங்கோ
வெயில் தெறுதலால் வெம்மை மிகுந்து வெம்பிய அருஞ்சுரத்தைக் கூறக் கருதும் பெருங்கடுங்கோ, கோல் கோடிய வேந்தன் கொலையஞ்சா வினையாளரைக் கொண்டு அறநெறியைக் கை விட்டுக் குடிகள் வயிறு அலைத்துக் கூக்குரலிட்டு அழ அழப் பொருள் கவர்ந்து கொள்வானாயின், அவனது நாடு எவ்வாறு பொலி வழிந்து கெடுமோ, அவ்வாறே உயரிய மரங்கள் உலறிப் பொலிவின்றி யிருக்கின்றன[7] என்று கூறுகின்றார். காதலனைப் பிரிந்துறையும் கற்புடைய மகளொருத்தி யின் வருத்தத்தை, “ஆள்பவர் கலக்குற அலைவுற்ற நாடு போல், பாழ்பட்ட முகத்தோடு பைதல் கொண்டு அமைவாளோ[8]” என்றும், அந் நிலையில் இளவேனில் காலம் வர அதனைக் காணும் தோழி அவ் வேனிலை வெறுத்து, பேதையை அமைச்சனாகவுடைய பீடிலா மன்னன் ஒருவனுடைய நாட்டில் பகையரசர் எளிதில் வந்து புகுவதுபோல இளவேனில் வந்தது[9] என்றும் கூறுவன அவரது அரசியலுணர்வை வெளியிடுகின்றன.
உள்ள பொருள் செலவாகித் தொலைந்தமையால் இரப்பவரும், அறவே ஒன்றும் இல்லாது வறுமையால் இரப்பவரும், வேண்டுமளவு பொருளில்லாமையால் இரப்பவரும் என இரப்போருள் பல் வேறு வகையினர் உண்டு. இப் பெற்றியோர்க்குச் சிறிதளவேனும் ஈத்தொழிவது சிறப்பு; ஒன்றும் ஈயாமை இழிவு[10] என்பது இக் கடுங்கோ கூறும் அறிவுரை. நிலைபேறில்லாத செல்வப் பொருளை உயிர்க்கு உறுதுணையாகும் நிலையுடைய பொருள் என உணர்வது மயக்கவுணர்வு. பொருளில்லார்க்குக் காதலர் யாது செய்வர் என்று ஏதிலார் கூறுவர்; அவர் சொல் கொள்ளத் தகுவதன்று. செம்மை நெறியிலன்றிப் பொருள் செய்பவர்க்கு அஃது இருமையும் பகை செய்யும்[11]. வளமை எக் காலத்தும் செய்து கொள்ளப்படும் எளிமையுடையது; இளமையோ கழிந்தபின் பெறல் அரிது[12]; இன்னோர் என்னாது பொருள்தான் பழவினை மருங்கிற் பெயர்பு பெயர்பு மறையும்[13]; ஒருவர்பால் கடன் கேட்குங்கால் கடன் வாங்குவோர் முகம் இருக்கும் இயல்பு வேறு; அக் கடனைத் திரும்பத் தருங்கால் அவர் முகம் இருக்கும் இயல்பு வேறு; இவ்வாறு முகம் வேறுபடுவது முற்காலத்தும் இவ்வுலகில் இயற்கை; இப்போது அது புதுவதாக இல்லை[14]. கண்ணிற் கண்ட போது சிறப்புச் செய்து புகழ்பல கூறி, நீங்கியவழி அச் சிறப்புச் செய்யப்பட்டோருடைய பழியை எடுத்துத் தூற்றுவதும், செல்வமுடையாரைச் சேர்ந்திருந்து, அவரது செல்வத்தைக் கூடியிருந்து உண்டு அது குறைந்தபோது அவர்கள் உதவாதொழிவதும், நட்புக் காலத்தில் ஒருவருடைய மறை (இரகிசயம்) எல்லாம் அறிந்து கொண்டு, பிரிந்த காலத்தில் அவற்றை எடுத்துப் பிறரெல்லாம் அறிய வுரைப்பதும் தீச்செயல்களாகும்[15]; முன்பு தமக்கு ஓர் உதவியைதச் செய்து தம்மை உயர்த்த முயன்ற ஒருவர் தாழ்வெய்துவராயின், இயன்ற அளவு முயன்று கூடிய தொன்றைச் செய்வரே பீடுடையோ ராவர்[16]; ஆடவர்க்கு உழைப்பே உயிர்; மனையுறையும் மகளிர்க்கு அவ்வாடவர் உயிர்[17]; தம்பால் உள்ள பொருளைச் சிதைப்பவர் உயிரோடிருப்பவர் எனப் படார் : இல்லாதாருடைய வாழ்க்கை இரத்தலினும் இளிவந்தது[18]; ஒருவர்க்கு அறத்தின் நீங்காத வாழ்க்கையும், பிறன்மனை முன் சென்று உதவி நாடி நில்லாத செல்வமும் உண்டாவது பொருளால்தான் ஆகும்[19]; நீர்சூழ்ந்த நிலவுலக முற்றும் அதன்கண் வாழ்வோடு அனைவர்க்கும் பொது என்பதன்றி தனக்கே சிறப்புரிமை யென்ன அமைந்தபோதும், ஒருவன்பால் செல்வம் கனவுபோல் நீங்கி மறையும்[20]; தன்னை விரும்பி ஈட்டிக் கொண்டவரைத் தான் பிரியுங்கால், கொண்ட காலத்துக்கு மாறாகப் பிறர் கண்டு எள்ளி நகையாடுமாறு நீங்குவது செல்வத்தின் இயல்பு; நிலையில்லாத அதனை ஒருவர் விரும்ப லாகாது, ஒரு பயனும் நோக்காது தன்னையுடைய அரசன் ஆக்கம் பெற வேண்டும் என முயலும் சான்றோன் ஒருவனை, அவ்வரசன் கண்ணோட்டம் இன்றிக் கொல்வானாயின், அவனது அரசு நிலை பெறாது ஒழிவது போலச் செல்வமும் நில்லாது நீங்கும்; அதனை ஒருவர் விரும்பலாகாது என்பன போல்வன பெருங்கடுங்கோவின் அரசியலறிவும் உலகியலறிவும் இப் பெற்றியவை என நாம் நன்கறிதற்குச் சான்றா கின்றன.
இவரது உள்ளமுற்றும் அறவுணர்வுகளே நிரம்பிக் கிடத்தலால், சொல்லும் சொற்றோறும் அறமே கூறு கின்றார். அவரது செயல்வகைப்பட்ட கட்பார்வையும் அவ்வாறே அறம் கனிந்திருப்பது நாம் அறியற்பாலது. வெவ்விய சுரத்தின்கண் செல்பவர்க்கு நீர்வேட்கை உண்டாவது இயல்பு. சுரத்தின்கண் நீர்நிலைகள் இரா. சுரங்களில் கள்ளி காரை முதலிய செடிகளும், நெல்லி, பாலை முதலிய மரங்களும் இருக்கும். நிலமும் சிறுசிறு கற்கள் பரந்த முரம்பாகும். வேனிற்காலத்தில் நெல்லி மரங்கள் காய்ப்பது இயற்கை. சுரத்துவழிச் செல்வோர் வேனில் வெப்பத்தால் விடாய்கொண்டபோது நெல்லிக் காயைத் தின்பர். அஃது இனிய நீரூறி வேட்கை தணிவிக்கும். அதனாலே, சுரத்தில் அமைந்த பெரு வழிகள், இருமருங்கும் வரிசையாக அம் மரங்களைக் கொண்டிருக்கின்றன. நெடுஞ்சுரத்தின் வழிச்செல் வோர்க்கு இனிய காயைத் தந்து வேனில் வேட்கை தணிவிக்கும் சிறப்புக் கண்ட நம் கடுங்கோ , “அறம் தலைப்பட்ட நெல்லியம் பசுங்காய்[21]” என்பாராயின், அவரை நடமாடும் அறக்கோயில் என்பதன்றி வேறு யாது கூறலாம்?[22]
இயற்கையழகில் அவரது உள்ளம் தோய்வது காண்மின்: வேனிலில் ஒரு பால் முருக்க மரத்தின் செம்முகைகள் வீழ்ந்து சிதறிக் கிடக்கின்றன; கோங்கு, அதிரல், பாதிரி முதலியன மலர்ந்து கிளைகளில் மலர்களைத் தாங்கி நிற்கின்றன; எங்கும் வண்டினம் தேனுண்டு முரலுகின்றன. இவற்றைக் காணும் கடுங்கோவின் உள்ளம் அக் காட்சியில் ஈடுபடுகிறது.
- ↑ 7. கலி. 10.
- ↑ 8. கலி. 5.
- ↑ 9. கலி. 27.
- ↑ 10. கலி. 1.
- ↑ 11. கலி. 14.
- ↑ 12. கலி. 14
- ↑ 13. கலி. 21
- ↑ 14. கலி. 22
- ↑ 15. கலி. 25
- ↑ 16. கலி. 34
- ↑ 17. குறுந். 15.
- ↑ 18. குறுந். 283.
- ↑ 19. அகம். 155.
- ↑ 20. அகம். 379.
- ↑ 21. கலி. 8.
- ↑ 22. அகம். 379.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சேரமான் பாலைபாடிய பெருங்கடுங்கோ - History of Chera - சேர மன்னர் வரலாறு - இயல்பு, அவரது, வேறு, பொருள், ஒருவர், இருக்கும், முகம், கொண்டு, செய்து, இரப்பவரும்