சேர மன்னர் வரலாறு - சேரர்கள்
சேர நாட்டில் வாழ்ந்த மக்கள் சேர நாட்டுச் செந்தமிழ் மக்களாவர். பாண்டி நாட்டிலும் சோழ நாட்டிலும் வாழ்ந்த மக்களைத் தமிழர் என்பது மரபாதலின், அம் மரபின்படியே சேர நாட்டவர் செந்தமிழ் மக்களாகின்றனர், பாண்டி நாட்டுத் தமிழர்க்குப் பாண்டியரும், சோழ நாட்டுத் தமிழர்க்குச் சோழரும் வேந்தராயினது போலச் சேரநாட்டுத் தமிழ்மக்கட்குச் சேரர் வேந்தராவர். இந்நாட்டுக்குக் கிழக்கெல்லையாகச் சுவர்போல் தொடர்ந்து நிற்கும் மலை மேலைமலைத்தொடர். இது தெற்கே பொதியமலை முதல் வடக்கே தபதியாற்றங்கரை வரையில் நிற்கிறது. இந்நெடுமலைத்தொடர் வடவர்களால் சஃயாத்திரி யென்று பெயர் கூறப்படுகிறது; சஃயம் - தொடர்பு; அத்திரி - மலை. இத் தொடரைக் குடவரையெனவும், சேர நாட்டவரைக் குடவர் எனவும் பொதுவாகக் கூறுவது தமிழ்நாட்டார் வழக்கம். முதல் இராசராசனுடைய கல்வெட்டுகள் சேர நாட்டைக் குடமலை நாடு[1] எனக் கூறுவது காணலாம், சேக்கிழாரடிகள், “மாவீற்றிருந்த பெருஞ் சிறப்பின் மன்னும் தொன்மை மலை நாடு” என்று, சேர மன்னர்களைப் “பாவீற்றிருந்த பல்புகழார்[2]” என்றும் பாராட்டிக் கூறுவர்.
இச் சேர மன்னர் மலைநாட்டில் வாழ்ந்தமையின் மலைகளிலும் மலைச்சரிவுகளிலும் மண்டியிருந்த பெருங் காடுகளில் வேட்டம் புரிவதையே தொடக் கத்தில் மேற்கொண்டிருந்தனர்; அதனால் இவர் களுடைய கொடியில் வில்லே பொறிக்கப்பட்டிருந்தது. கடற்கரைப் பகுதியில் பனை மரங்கள் காடுபோல் செறிந்திருந்தன; அதனால், அவர்கள் தமக்கு அடை யாள மாலையாகப் பனந்தோட்டால் மாலை தொடுத்து அணிந்து கொண்டனர். இன்றும் சேர நாட்டு வடபகுதிக் கடற்கரையில் பனைகள் மல்கியிருப்பது கண்கூடு. தொல்காப்பியனாரும் இச் சேரரது பனந்தோட்டு மாலையை அவர்கட்குச் சிறப்பாக எடுத்தோதுவர்.[3]
இச் சேர நாடு மேலைக் கடலைச் சார்ந்து கிடத்தலின்’ சேரர்கள் கடலிற் கலஞ் செலுத்துதலிலும் சிறந்திருந்தனர். கிறித்து பிறப்பதற்கு மூவாயிரம் ஆண்டுகட்கு முன்பே மேலையுலகத்து சால்டியா நாட்டுக்கு இந்நாட்டுத் தேக்கு மரங்கள் மரக்கலங்களில் கொண்டு போகப்பட்டன. பெட்ரோலியசு என்னும் மேனாட்டறிஞர் இந்நாட்டினின்றும் சென்ற ஆடை வகைகளை மிகவும் பாராட்டிப் பேசியிருக்கின்றார்; இந்நாட்டிலிருந்து மேலை நாடுகட்கு ஆண்டுதோறும் 4,86,679 பவுன் மதிப்புள்ள பொருள்கள் ஏற்றுமதியாயின என்று எழுதியுள்ளார். அந் நாளில் கடலகத்தே செல்லும் வணிகரின் கலங்களைத் தாக்கிக் கொள்ளை கொள்வதும், கடற்கரையில் வாழ்ந்த மக்கட்கு இன்னல் புரிவதும் தொழிலாகக் கொண்டு திரிந்த யாதர் (yats) கடம்பர் முதலாயினாரைக் கடலகத்தே எதிர்த்தழித்து மிக்க வென்றி எய்திய வகையால், இச் சேர மன்னர்கள் கடல் வாணிகம் செய்வார்க்கு நல்ல அரண் செய்து வாழ்ந்தனர். அதனால், அந் நாளில் சேர நாட்டுக் கலங்களைக் கண்டாலே பிறநாட்டுக் கலங்கள் கடலில் உரிமையுடன் இயங்குதற்கு அஞ்சின. “சினமிகு தானை வானவன் குடகடல், பொலந்தரு நாவாய் ஓட்டிய அவ்வழிப் பிறர் கலம் செல்கலாது[4]” எனச் சான்றோர் உரைப்பது ஈண்டு நினைவு கூரத் தகுவது.
இச் சேரமன்னர்கட்குச் சங்க நூல்கள் மிகப் பல சிறப்புப் பெயர்களை வழங்குகின்றன. ஒருகால் அவை குடிப்பெயரோ எனவும் பிறிதொருகால் இயற் பெயரோ எனவும் ஆராய்ச்சியாளர்க்குப் பெருமயக்கம் எய்தியதுண்டு. ஏனைச் சோழ பாண்டியர்களின் வரலாறு போல இவரது வரலாறு எளிதிற் காணவியலாமல் இருப்பதற்கு இந்நிலையும் ஓர் ஏதுவாகும். அப்பெயர்களுள், வான வரம்பன், வானவன், குட்டுவன், குடக்கோ , பொறையன், இரும்பொறை, கடுங்கோ, கோதை என்பன சிறப்புடையனவாம். சேரலர், சேரல், சேரமான் என்பன பொதுப்பெயர்.
“வென்றி நல்வேல் வான வரம்பன் [5] ”
“வான வரம்பனை நீயோ பெரும்[6]”
“தேனிமிர் நறுந்தார் வானவன்[7]”
“பெரும்படைக் குதிரை நற்போர் வானவன் [8]”
“வெல்போர் வானவன் கொல்லிக் குடவரைகள் [9]”
“வசையில் வெம்போர் வானவன் [10]”
“சினமிகு தானை வானவன் [11]”
“மாண்வினை நெடுந்தேர் வானவன் [12]”
“வில்கெழு தடக்கை வெல்போர் வானவன் [13]“
என வருவன வானவன், வானவரம்பன் என்ற பெயர்கள் பண்டை நாளைச் சான்றோர்களால் பெரிதும் விதந்து கூறப்படுவதை எடுத்துக் காட்டுகின்றன.
- ↑ 1. பிற்காலச் சோழர்** பக், 103,
- ↑ 2. திருத்தொண் கழறிற் 1. *
- ↑ 3. தொல். பொ. 60*
- ↑ 4. புறம் 126.
- ↑ 5. ஷை 126
- ↑ 6. அகம். 45.
- ↑ 7. புறம். 2.
- ↑ 8. அகம். 381.
- ↑ 9. அகம். 309.
- ↑ 10. அகம். 213.
- ↑ 11. அகம். 77.
- ↑ 12. புறம். 126.
- ↑ 13. அகம். 159.
1 | 2 | 3 | 4 | 5 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சேரர்கள் - History of Chera - சேர மன்னர் வரலாறு - வானவன், அதனால், எனவும், வாழ்ந்த