சேர மன்னர் வரலாறு - சேரர்கள்
இந்த வானவன் என்ற பெயர் பொருளாக ஆராய்ச்சி செய்த அறிஞர்கள், “இதுவரை வானவர் என்ற பெயரால் பண்டை இவ்வமிசம் தெய்வ சம்பந்தம் பெற்ற தென்பது மட்டில் தெளிவாகும்[14]” என்பர். வானவரென்ற பெயர் சீன நாட்டவர்க்கு இன்றும் வழங்கி வருவதால், சேரர், ஆதியில் சீன தேசத்திலிருந்து வந்தவர் எனத் திரு. கனகசபைப் பிள்ளையவர்கள் கூறுகின்றார். வானவரம்பன் என்பது வானவர் அன்பன் என்ற இரு சொற்களாலாகிய ஒரு தொடரென்றும், அது திரிந்து வானவரம்பன் என வழங்குவதாயிற்றென்றும், இது, “தேவானாம் பிரியா” என அசோக மன்னனுக்கு வழங்கும் சிறப்புப் போல்வதென்றும் சிலர் கருது கின்றனர். வானம் என்பது கடலுக்கொரு பெயரென்றும், அதனால் வானவரம்பன் என்றது கடலை எல்லையாக உடையவன் என்று பொருள்படும் என்றும் வேறு சிலர் கூறுவர். மற்றும் சிலர் வானமும் நிலமும் தொடும் இடத்தை எல்லையாக வுடையவன் வானவரம்பன் என்பர். பிற்கால மலையாள நாட்டு அறிஞர்கள் வானவரம்பன் என்பதைப் பாணவன்மன் எனத் திரித்துக் கொள்வர். இங்கே கூறிய பொருள்களுள் “தேவானாம் பிரியா” என்ற தொடர் “தடித்த முட்டாள்” என்னும் பொருள் படத் துறவிகளை வைதுரைக்கும் வைதிக மொழியுமாகலின்[15], வசை மொழியைச் சேரர் தமக்குச் சிறப்புப் பெயராகக் கொண்டனர் என்பது பொருந்தாது என்பர் கே.ஜி. சேஷையர் அவர்கள். ஏனையவற்றின் பொருந்தாமையை ஈண்டு விரிக்க வேண்டுவதில்லை. இனி, வானவன் என்பது வான மலையை யுடையவன் என்றும், வானவரம்பன் என்பது வானமலையை வரம்பாக வுடையவன் என்றும் நேரே பொருள்படுவது காணலாம்.
சேர நாட்டுக்கு வட பகுதியில் ஏழில் மலையைத் தன்கண் கொண்டிருந்த நாட்டைக் கொண்கான நாடு என்று தமிழ் மக்கள் வழங்கினர். ஏழில் மலையைச் சொல்லத் தெரியாத பிற மக்கள் அதனை எலிமலை யென்று வழங்கினதும், இன்றும் அவ்வாறே வழங்குவதும் அவர்கள் அந்த எலி நாட்டை வடமொழிப்படுத்து மூசிக நாடு என்று பெயர் கொண்டதும் முன்பே கூறப்பட்டன. அதற்கு வடக்கிலுள்ள நாட்டுக்கு வானவாசி நாடு என்பது பெயர். மேலைக் கடற்கரை நாடுகளை முறைப்படுத் துரைத்த வியாச பாரதம், “திராவிடர் கேரள: ப்ராச்யா மூசிகா வானவாசிகா:[16]” என்று கூறுவது போதிய சான்றாகும். ஏழில் மலையைச் சூழ்ந்த நாட்டுக்கு மூசிக நாடென்று பெயர் வழங்கினமை “மூஷிக வம்சம்” என்ற நூலால்[17] தெரிகிறது. இதனால், மூசிக நாடெனப்படும் கொண்கான நாட்டுக்கு வடக்கில் வானவாசி நாடு இருப்பது தெளிய விளங்குகிறது வானவாசி என்பது கல்வெட்டுகளில்[18] வானவாசி யென்றும் குறிக்கப்படுகிறது படவே, சேர நாட்டின் வடக்கில் அதனை யடுத்து எல்லையாக இருந்தது வானவாசி நாடாயிற்று.
வானவாசி நாட்டை கி.மு. ஆறாம் நூற்றாண்டுக்கு, முன்பிருந்தே ஆட்சிபுரிந்தவர் கடம்பர் எனப்படுவர். அவர்களது வான்வாசி நாட்டில் இப்போதுள்ள கோவா (Goa) பகுதியும் அடங்கியிருந்தது. கோவா என்பது கூபகம் என்ற பழம்பெயரின் திரிபு. அப் பகுதியில் கடம்பர்களுடைய கல்வெட்டுகள் இப்போதும் காணப்படுகின்றன. அந் நாட்டில் வானியாறு என்றோர் ஆறும் ஓடுகிறது. அது கிழக்கில் நிற்கும் மலைமுகட்டில் தோன்றி மேற்கே ஓடிச் சில கால்வாய்களாய்ப் பிரிந்து மேலைக் கடலில் சென்று சேர்கிறது. இப்போது வட கன்னடம் மாவட்டத்தில் மேலைக்கடற்கரையிலுள்ள ஹோனவார் (Honawar) என்னும் மூதூர் அந்த ஆற்றின் ஒருகால் கடலொடு கலக்குமிடத்தே இருக்கிறது. அந்தக் காலும் ஹோனவாறென்ற பெயர் கொண்டு நிலவுகிறது. அதனுடைய பழம் பெயர் வானவாறு என அங்கே வாழும் முகமதிய முதுவர்கள் கூறுகின்றனர். மலை முகட்டில் தோன்றிக் கடலோடு கலக்குங்காறும் அதன் பெயர் வானியாறே தான்; இப்போது அந்த ஆறு கடல் சேர்ந்த பகுதியில் பல கால்களாய்ப் பிரியுங்காறும் சாராவதியென்ற பெயர் கொண்டிருக்கிறது. ஜோக் கென்னும் ஊரருகே[19]இந்தச் சாராவதி 850 அடி உயரத்திலிருந்து வீழ்ந்து மேலைக் கடல் நோக்கி ஓடுகிறது. தோற்றமுதல் முடிவுவரை வானியாறாக இருந்தது இடையில் சேரவாறு என்ற பெயர் பெற்று, பின்னர் அது திரிந்து சாராவதியாய் விட்டது. திருவையாறு திருவாடி யென்றாகித் திருவாதியானது. காண்போர் சேரவாறு சாராவதியானது கண்டு வியப்பெய்தார்.
தெற்கே பொன்வானிபோல வடக்கில் இந்த வானியாறு இருப்பதை நோக்கின் பண்டை நாளில் சேரநாட்டுக்கு வடவெல்லையாக இந்த வானியாறு விளங்கிற்றென்பது இனிது விளங்கும். இதற்கு வடக்கில் வேளகமும் வடகிழக்கில் வானவாசி நாடும் இருந்தன. இதனை ஆண்ட கடம்பர்கள் சேர நாட்டிற்கு குறும்பு செய்து ஒழுகினமை சங்க இலக்கியங்களால் தெரிகிறது ஒருகால் அவர்கள் சேரர்க்குரிய கொண்கான நாட்டுட் புகுந்து குறும்பு செய்து அப் பகுதியைத் தமது வானவாசி நாட்டோடு சேர்த்துக்கொள்ள முயன்றார்கள். நாடோறும் அவர்களது குறும்பு பெருகக்கண்ட சேர வேந்தர் பெரும் படையுடன் சென்று கடம்பர்களைத் தாக்கி வென்று வானியாற்றின் வடக்கிற் சென்று ஒடுங்குமாறு செய்தநர். இவ் வகையால் கடம்பர்கள் மீள மீளப் போர் தொடுக்கா வண்ணம், சேரர் கடம்பரோடு ஒன்றுகூடி வானவாற்றை வரம்பு செய்து கொண்டனர். வானியாறு சேரருக்கு உரியதானமையின், அதுவே பின்பு சேரவாறாயிற்று; அச் சேரவாறே சாராவதியென் முன்பே கூறினோம். மேலை வானமா மலைத் தொடருக்கு உரிமையும், அதனைத் தன் நாட்டுக்கு எல்லையுமாகக் கொண்டமையின், சேர மன்னன் வானவரம்பனானான் என்பது உண்டு. சங்கத் தொகைநூல் பாடிய ஆசிரியர்கள் காலத்துக்குப் பல்லாண்டுகட்கு முன்னர் இது நிகழ்ந்து மருவின்மை யால், வானவன் என்றும் வானவரம்பன் என்றும் சேர மன்னர்களைத் தாம் பாடிய பாட்டுகளில் அவர்கள் சிறப்பித்துப் பாடினார்கள்.
- ↑ 14. மு. இராகவையங்கார்: சேரன் செங்குட்டுவன்.
- ↑ 15. Madras Discourses of Sri Sankaracharya P. 147, 163.
- ↑ 16. பாரதம்: பீஷ்ம் பருவம். ix. 58
- ↑ 17. T.A.S. Vol. i p. 87-113.
- ↑ 18. Bom. Gezet. kanaras, part-ii p. 77
- ↑ 19. “தோகைக்காவின் துளுநாடு” (அகம். 15) என்ற விடத்துக் காணப்படும் தோகைக்கா என்பதே இப்பகுதிக்குப் பழம் பெயர். இது தோக்கா என மருவிப் பின்பு ஜோக் என்ற பெயருடன் இப்போது வழங்குகிறதென்பது அறிஞர்கள் காணவேண்டியதொன்று.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சேரர்கள் - History of Chera - சேர மன்னர் வரலாறு - பெயர், என்பது, வானவாசி, வானவரம்பன், நாட்டுக்கு, என்றும், வானியாறு, வடக்கில், நாடு, மேலைக், சென்று, செய்து, குறும்பு, மூசிக, ஏழில், சிலர், சேரர், என்பர், எல்லையாக, பகுதியில், கொண்கான, வானவன், அந்த