சேர மன்னர் வரலாறு - சேரர்கள்

சேர நாட்டை யாண்ட மன்னர்கள் தங்கள் நாட்டைக் குட்டநாடென்றும் குடநாடென்றும் பிரித்து ஒரு காலத்தே ஆட்சி நடத்தினர். வட பகுதியில் குட நாட்டின் பகுதியாய் வானவாசி நாட்டை அடுத்திருந்த கொண்கான நாட்டைச் சேரர் குடிக்குரிய நன்னன் மரபினர் ஆட்சி புரிந்தனர். கொண்கான நாட்டின் கிழக்கில் உள்ள புன்னாடும் அந் நன்னன் மரபினர் ஆட்சியிலேயே இருந்தது. புன்னாட்டின் தெற்கில் - குட நாட்டுக்குக் கிழக்கில் இருந்த நாடு சேரர் குடியில் தோன்றிய வேளிர் தலைவரான அதியமான்கள் ஆட்சியில் இருந்தது; அதற்குப் பின்னர்த் தகடூர் நாடு எனப் பெயர் வழங்கலாயிற்று.
தெற்கே கோட்டாற்றுக்கரை கொல்லம் என்ற பகுதியை எல்லையாகக் கொண்ட குட்ட நாட்டில் குட்டுவரும், குடநாட்டில் குடக்கோக்களும் இருந்து சேர வரசைச் சிறப்பித்தனர். குட்ட நாட்டுக்கு வஞ்சி நகரும், குடநாட்டுக்குத் தொண்டியும் சிறந்த தலைநகரங்களாகும். ஒரு குடியில் தோன்றிய இருவருள் முன்னவன் குட்ட நாட்டிலும் பின்னவன் குட நாட்டிலும் இருந்து அரசியற்றுவன். குட்ட நாட்டு வேந்தன் குட்டுவர் தலை வனாகவும், குட நாட்டு வேந்தன் குடவர் கோவாகவும் விளங்குவர்.
சில பல ஆண்டுகட்குப் பின்னர் அரசிளங் சிறுவர்கட்கு ஆட்சி நல்குதல் வேண்டிக் குட்ட நாட்டின் வட பகுதியையும் குடநாட்டின் தென் பகுதியையும் ஒன்றாய் இணைத்துப் பொறை நாடுஎனத் தொகுத்துத் தொண்டியை அதற்குத் தலைநகராக்கினர். இவ்வாறே கொச்சி நாட்டின் வடகீழ்ப் பகுதி பூழிநாடு எனப் பிரிந்து இயலுவதாயிற்று. இந் நாடுகளில் இருந்து ஆட்சி புரிவோருள் முன்னோன் எவனோ அவனே முடிசூடும் உரிமையுடைய சேரமானாவன். பிற்காலத்தே பொறை நாட்டின் கிழக்கில் கொங்கு நாட்டை யடுத்த பகுதியைக் கடுங்கோ நாடு எனப் பிரிந்து ஆட்சி செய்தனர். அவ் வேந்தர் கடுங்கோ எனப்பட்டனர். இவ்வாற்றால் சேரநாடு, பண்டை நாளில், குட்டநாடு, பொறைநாடு, குடநாடு, கடுங்கோ நாடு எனப் பிரிந்திருந்தமை பெறப்படுகிறது. வேந்தரும் அது பற்றியே, “பல்குட்டுவர் வெல்கோவே[20]” “தெறலருந்தானைப் பொறையன்[21]” “குடக்கோ நெடுஞ்சேரலாதன், பாலை பாடிய பெருங்கடுங்கோ என்று பெயர் கூறப்படுவராயினர். இவ்வாறு வேறு வேறாகக் கூறப் படினும், சேரமான் ஒருவனே ஒருகால் சேரல் என்றும், வானவன் என்றும், குட்டுவன் என்றும், இரும்பொறை என்றும் கூறப்படுவன். இதனால் இவர்கள் அனைவரும் சேரர் குடிக்குரியோர் என்பது துணிபாம். “குடபுலம் காவலர் மருமான், ஒன்னார் வடபுல இமயத்து வாங்குவில் பொறித்த, எழவுறழ் திணிதோள் இயல்தேர்க் குட்டுவன்[22]” என்றாற்போல் வருவன பல உண்டு. இவற்றைக் கொண்டு இவர்கள் வேறு வேறு குடியினர் என மயங்கிவிடுதலாகாது. அது பின்னர் வரும் வரலாற்றால் இனிது விளங்கும்.
பண்டை நாளைத் தமிழ் வேந்தர் அரசெய்திய முறை ஒரு தனிச் சிறப்பு உடையதாகும். ஒரு வேந்தனுக்கு மூவர் புதல்வர்களெனின் அவர்கள் ஒருவர் பின் ஒருவராக முடிசூடிக் கொள்வர். முன்னவன் முடிவேந்தனாக ஏனை இருவரும் நாட்டின் இருவேறு பகுதிகளில் சிற்றரசராய் முடிவேந்தற்குத் துணைபுரிவர். இம் மூவரும் முடிசூடியிருந்த பின்பே, இவர் மக்களுள் மூத்தவன் எவனோ அவன் முடிவேந்தனாவன். இம் முறை இடைக்காலச் சோழ வேந்தரிடத்தும் இருந்திருக்கிறது. முதற் பராந்தகனுக்கு இராசாதித்தன், கண்டராதித்தன் அரிஞ்சயன், உத்தமசீலி என மக்கள் நால்வர் உண்டு. அவர்களுள் இராசாதித்தன், பராந்தகன் இருக்கும் போதே இறந்தான். அதனால் பராந்தகனுக்குப் பின் கண்டராதித்தன் சோழவேந்தனாய் முடிசூடிக் கொண்டான். அவனுக்குப்பின் அரிஞ்சயன் முடிவேந்தனானான். அவனுக்கு முன்பே உத்தமசீலி மறைந்து போனான். கண்டராதித்தனுக்கு உத்தம சோழன் என்றொரு மகனும் அரிஞ்சயனுக்குச் சுந்தரசோழன் என்றொரு மகனும் இருந்தனர். அவ்விருவருள், சுந்தரசோழன் மூத்தவனாதலால் முதலில் அவனும், அவற்குப் பின் உத்தம சோழனும் முடிவேந்தராயினர். உத்தம சோழனுக்குப்பின் அவன் மக்களுள் மூத்தவனான ஆதித்த கரிகாலன் தந்தையிருக்கும் போதே இறந்தமையின், இளையோனான முதல் இராசராசன் சோழர் முடிவேந்தனாய்த் திகழ்ந்தான். இதே முறைதான் பண்டை நாளைத் தமிழ்வேந்தர் அரசுரிமை முறையாக இருந்தது. ஆகவே, தந்தைக்குப்பின் அவனுடைய மூத்த மகன்; அவற்குப்பின் அவனுடைய மூத்தமகன் என வரும் அரசியல் தாயமுறை (Prinogeniture) தமிழ் நாட்டுக்குரியதன்று என அறியலாம்.
இவ்வாறே சேர மன்னருள் உதியஞ்சேரலாதன் என்பானுக்கு இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், பல்யானைச் செல்கெழு குட்டுவன் என மக்கள் இருவர் உண்டு. இமயவரம்பன் சேரமானாய் முடிசூடியிருந்த பின், அவன் தம்பி பல்யானைச் செல்கெழு குட்டுவன் சேரமானாய் முடிசூடிக் கொண்டான் அவற்குப்பின் இமயவரம்பன் மக்களுள் மூத்தவனான களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரலும் அவன் பின் செங்குட்டுவனும் அவற்குப்பின் ஆடுகோட்பாட்டுச் சேரலாதனும் சேர நாட்டு முடிவேந்தராய் விளங்கினர்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சேரர்கள் - History of Chera - சேர மன்னர் வரலாறு - நாட்டின், பின், குட்ட, ஆட்சி, அவன், என்றும், எனப், குட்டுவன், நாடு, முடிசூடிக், உத்தம, அவற்குப்பின், உண்டு, இமயவரம்பன், மக்களுள், பண்டை, கிழக்கில், சேரர், இருந்து, நாட்டு, நாட்டை, கடுங்கோ, வேறு