சேர மன்னர் வரலாறு - சேரமான் குட்டுவன் கோதை

சேர வேந்தர் குடியில் கோதையென்னும் பெயர் கொண்ட கிளையொன்று பண்டை நாளில் இருந்திருக் கிறது. இக் கிளையினர் பெயர் கோதையென்றே முடியும். இவர்கள் பெரும்பாலும் குட்ட நாட்டிலேயே இருந்துள்ளனர். இன்றும் குட்ட நாட்டில் கோதைச் சிறை, கோதைக் குறிச்சி, கோதைச் சேரி, கோதை நல்லூர், கோதைக் குளங்கரை, கோக்கோதை மங்கலம் என ஊர்களும், கோதையாறு என யாறும் உள்ளன. இவ்வாறு கோதை என்ற பெயரோடு கூடிய ஊர்களோ பிறவோ ஏனைக் குடநாட்டிலும் வேணாட்டிலும் இல்லை.
செங்குட்டுவன் காலத்தில் வில்லவன் கோதை என்ற பெயருடைய அமைச்சனொருவன் இருந்தான் என இளங்கோவடிகள் குறிக்கின்றனர்[1]. இக்கோதை குட்டநாட்டுக் கோதை வேந்தரின் குடியின்னாகும் எனக் கருதுவதுண்டு. இக்கோதை வேந்தர், சங்கத் தொகை நூல் காலத்திலும், கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த சேரமான் பெருமாள் நாயனார் காலத்திலும் இருந்தனர் என்பது ஒருதலை. இவருள் குட்டுவன் கோதை என்பவன் மிகவும் பழையோனாக வுள்ளான். அவன் காலத்தில் பாண்டி நாட்டில் இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய பாண்டியன் நன்மாறனும், வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதியும், சோழ நாட்டில் குராப்பள்ளித் துஞ்சிய பெருந் திருமாவளனும் இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய நலங்கிள்ளி சேட் சென்னியும், குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனும், காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளியும் ஆட்சி செய்து வந்தனர். “ஒளிறு வேற் கோதை ஓம்பிக் காக்கும் வஞ்சி”[2] என்றும் “நெடுந்தேர்க் கோதை திருமா வியனகர்க் கருவூர் முன்றுறை[3]” என்றும் சான்றோர் கூறுவதால், குட்டுவன் கோதையது ஆட்சியில் குட்ட நாடு வஞ்சிமா நகரும், அதற்கண்மையிலுள்ள கருவூரும் சிறந்து விளங்கின என்றும் அறிகின்றோம்.
குட்டுவன் கோதை பெருவலி படைத்த முடிவேந்தன். அதனால் அவனுடைய குட்டநாடு பகைவர்க்கு மிக்க அச்சம் பயந்து நின்றது. அக்காலத்தே கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனார் என்ற நல்லிசைச் சான்றோர் குட்டுவனை நேரிற் கண்டு பாடியிருக்கின்றார். அப்போது அந்த நாட்டைப்பற்றி ஏனை நாட்டவர் கொண்டிருந்த எண்ணத்தை அவர் நன்கறிந்து தாம் பாடிய பாட்டில் குறித்துள்ளார். ஏனை நாட்டவர் குட்டுவன் கோதையைப் புலியெனவும், அவனது நாட்டைப் புலி கிடந்து உறங்கும் புலம் எனவும் கருதி, புலி துஞ்சம் புலத்திற்குள் செல்ல அஞ்சும் ஆட்டிடையன் போல அவ்வேந்தர்கள் அஞ்சினர் எனவும்[4] குமரனாரது குறிப்புக் கூறுகிறது.
அந்நாளில் குடநாடும் சேர நாடாகவே இருந்தது. கேரள நாடாகவோ கன்னட நாடாகவோ மாறிவிடவில்லை. குடநாட்டில் பிட்டங்கொற்றன் என்றொரு குறுநிலத் தலைவன் ஆட்சிசெய்து வந்தான். அவனது நாடு குதிரை மலையைத் தன் அகத்தே கொண்டிருந்தது. குதிரைமலை இப்போது சஞ்சபருவதமென ஒரு சிலரால் மொழி பெயர்க்கப்பட்டிருப்பினும், குதிரை மூக்கு என்ற பழைய தமிழ்ப் பெயருடன் தென் கன்னடம் மாவட்டத்தில் உப்பினங்காடி வட்டத்தில் வழங்கி வருகிறது. இந் நாட்டில் மேற்கரை என்னும் தமிழ்ப் பெயர் மர்க்காரா என்றும், வடகரை படகரா என்றும் வானவன் தோட்டி மானன்டாடி என்று உருத்திரிந்தும் வழங்குகின்றன. வடமொழியாளர் குதிரை மலையைச் சஞ்ச பருவதம் என்றும், மேற்கு மலைத் தொடரைச் சஃயாத்திரி என்றும் மொழி பெயர்த்துள்ளனர்; ஆனால் மக்கள் வழக்குக்கு வரவில்லை . மேலும், இம்மலை தென்கன்னடத்துக்கும் மைசூர் நாட்டுக்கும் எல்லையாய் நிற்கிறது. இதன்மேற் பெய்யும் மழை ஒருபால் கிருஷ்ணையாற்றையும் ஒருபால் காவிரியாற்றையும் அடைகிறது. இம் மலையை மேலைக்கடலிலிருந்து பார்ப்போமாயின், இது குதிரையின் முகம்போலக் காட்சி தருவது பற்றிக் குதிரை மலையெனப்படுவ தாயிற்று [5].
பிட்டனுடைய இந்தக் குடநாடு மலை நிறைந்தது. மலையிடையிலும் சரிவிலும் மூங்கில் அடர வளர்ந்து செறிந்திருக்கும். மலைச் சரிவுகளில் அருவி நீர் வீழ்ந்து பெருமுழக்கம் செய்யும். காட்டாற்றின் கரையில் கமுகும் வாழையும் வளர்ந்திருக்கும். அவற்றின் இடையே மிளகுக் கொடிகள் வளர்ந்து அம் மரங்களைச் சுற்றிக் கொண்டிருக்கும். பக்கங்களில் உள்ள புனங்களில் காந்தள் முளைத்துக் கைபோல் பூத்து மலைப்புறத்தை அழகு செய்யும். அங்குள்ள பெருங்காடுகளில் வாழும் காட்டுப் பன்றிகள் காந்தட் புனத்தைத் தம் கொம்பால் உழுது காந்தளின் கிழங்கைத் தோண்டி உண்ணும். அதனால் அங்கே வாழும் குறவர் நிலத்தை உழுவது கிடையாது. பன்றி உழுத புழுதியின் செவ்விநோக்கி அவர்கள் தினையை விதைத்துவிடுவர். அது நன்கு வளர்ந்து உரிய காலத்தில் மிக்க தினையை விளைத்து நல்கும். பொங்கற் புது நாளன்று, அவர்கள் புதிது விளைந்த தினையரிசி கொண்டு, மரையா (காட்டுப்பசு) விடத்துக் கறந்த பாலை உலையிற் பெய்து அடுப்பிலேற்றிச் சந்தனக் கட்டைகளை விறகாக எரித்துச் சமைத்த சோற்றைக் கூதாளிமரத்தின் கால் நிறுத்தி மலை மல்லிகைக் கொடி படரவிட்டு இருக்கும் மனைமுற்றிலில் விருந்தினரை இருத்தி, அகன்ற வாழையிலையை விரித்து அதன்மேற் படைத்து உண்பித்துத் தாமும் உண்பர்[6]’ இதனை இப்போது அந் நாட்டவர் புத்தரி (புத்தரிசி ; பொங்கற் புதுச்சோறு என்று வழங்குகின்றனர்[7]. தினை விளையும் பருவம்[8] ஏனற் பருவம் என்றே வழங்குகிறது.
- ↑ 1. சிலப். 25: 151.
- ↑ 2. அகம். 263.
- ↑ 3. அகம். 93
- ↑ 4. புறம். 54.
- ↑ 5. Imp. Gazett. Madras. Vol. ii. p. 395-6.
- ↑ 6. புறம். 168.
- ↑ 7. Imp. Gazett. Mys & Coorg. p. 300.
- ↑ 8. Malabar. Series. Wyanad. p. 62.
1 | 2 | 3 | 4 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சேரமான் குட்டுவன் கோதை - History of Chera - சேர மன்னர் வரலாறு - கோதை, என்றும், குதிரை, துஞ்சிய, குட்டுவன், நாட்டில், வளர்ந்து, குட்ட, நாட்டவர், பெயர், காலத்தில்