சேர மன்னர் வரலாறு - சேரமான் குட்டுவன் கோதை
கோசர்கள், தாம் இளமையில் விற்பயிற்சி பெற்றபோது எவ்வண்ணம் அம்பு எய்வரோ அவ்வண்ணமே எய்வதாகப் பிட்டன் கருதினான். அவர் சொரிந்த அம்புகள் பிட்டனுடைய மனநிலையையோ வலியையோ சிறிதும் அசைக்கவில்லை. பிட்டன் அவர்களை மிக எளிதில் வெருட்டி அவர்களது குறும்பை அடக்கினான். அவர் செய்த குறும்புகளால் அலைப்புண்ட நாட்டைச் சீர் செய்து கெட்ட குடிகளைப் பண்டு போல் நிலைபெறச் செய்தற்குப் பிட்டன் சில நாள்கள் கொங்குநாட்டில் தங்க வேண்டியவனானான். அங்கே காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார் என்னும் சான்றோர் அவனைக் காணச் சென்றார். அப்போது அவன் பகைவரை அடக்கும் செயலில் ஈடுபட்டிருந்தான். அவன் வினை முடித்து மீளுந்தனையும் அவன் இருந்த பெருமனைக் கண் தங்கினார். அவன் வெற்றியோடு திரும்பி வரவும் அவர் பெருமகிழ்ச்சி கொண்டு பாடினார். அப்போது, அவனது பார்வை, தன்னை அவர் போர்வினை இடத்தேயே கண்டிருக்கலாம் என்ற குறிப்பைப் புலப்படுத்திற்று. அதனை உணர்ந்தார் கண்ணனார்;
“பெரும், போர்வினையிடத்தும் நின் செவ்வி கிடைப்பது அரிதாகவுளது. போர்க்களத்தில் பகைவர் எறிதற்கு மேற்செல்லும் நின் வேற்படை வீரரை முன்னின்று நடத்துகின்றாய்; பகைவரது விற்படை எதிர்த்து மேல்வருங்கால் காட்டாற்றின் குறுக்கே நின்று அதன் கடுமையைத் தடுத்து நிறுத்தும் கற்சிறை போல அப் படையைக் குறுக்கிட்டுத் தடுத்து மேன்மை யுறுகின்றாய்; ஆகவே எவ் வழியும் நினது செவ்வி பெறுவது எம்மனோர்க்கு அரிது; செவ்வியும் இப்போதே கிடைத்தது. இதுகாறும் தாழ்த்தமையால் என் சுற்றத்தார் பசி மிகுந்து வருந்துகின்றனர்; எனக்கு இப்போதே பரிசில் தந்து விடுதல் வேண்டும்[13] என வேண்டினர். “கோசரது விற்போர் கண்ட எனக்கு, அவரது இளமைப் பயிற்சியையே அவரது விற்போர் மிகவும் நினைப்பித்தது. இளமைக் காலத்தில் அவர்கட்கு இலக்கமாய் நின்ற முருக்கமரக் கம்பம் போல நின் மார்பு காணப்பட்டது; அன்று அவர்கள் எய்த அம்புகள் பலவற்றில் ஒன்றிரண்டே அக் கம்பத்திற்பட்டது போல இன்றும் மிலச் சிலவே நின்னை அடைந்தன; அவர்களால் அக் கம்பம் வீழ்த்தப் படாமைபோல் இன்று நீ அவரது வில்வன்மையை விஞ்சி நிற்கின்றாய்” என்று அவர் குறிப்பாய் உரைத்தார்; அது கண்டு பிட்டன் பெரிதும் வியந்து அவர்க்கும் பிறர்க்கும் மிக்க பரிசில் நல்கி விடுத்தான்.
அந் நாளிலேயே தமிழகத்தின் அரசியலைச் சீரழித்து, அதன் பரப்பைச் சுருக்கி அதன் மொழியாகிய தமிழையும் கெடுத்து உருக்குலைக்கக் கருதிய கூட்டம் தோன்றி விட்டது. அதனுடைய சூழ்ச்சியும் செயல்படத் தொடங்கிவிட்டது. “நல்ல போலவும், நயவ போலவும், தொல்லோர் சென்ற நெறிய போலவும்” அச் சூழ்ச்சிகள் தொழில் செய்தன. படை மடம்படாமை ஒன்றையே கைக் கொண்டு ஏனைக் கொடை முதலிய துறைகளில் பெருமடம் பூண்பது பெருமையாக அவர்கட்கு அறிவுறுத்தப்பட்டது; அவ் வகையில் அவர்களும் அறிவறை போயினர். தமிழ்ப் புலமைக் கண்ணுக்கு அஃது அவ்வப்போது புலனாயிற்று. செவ்வி வாய்க்கும் போதெல்லாம் புலவர்கள் அதனை எடுத்துரைத்துத் தெருட்டி வந்தனர். அத்தகைய நிகழ்ச்சியொன்று சோழ பாண்டிய நாட்டில் தோன்றிற்று. சோழ பாண்டியரது ஒருமை தமிழகத்துக்குப் பேரரணமாகும் என்பதை அச்சூழ்ச்சிக் கூட்டம் உணர்ந்து அதனைக் கெடுத்தற்கு முயன்று கொண்டிருந்தது.
அதனைக் கண்டு கொண்டார், நம் காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார், தமிழ் அரசு வீழின், தமிழர் வாழ்வும் தமிழகத்தின் பரப்பும் தமிழ் மொழியின் மாண்பும் கெட்டழியும் என்பதைச் சால்புற உணர்த்தொழுகிய அவரது தமிழ் உள்ளம் ஒரு சிறிதும் பொறாதாயிற்று, ஒரு கால், சோழன் குராப் பள்ளித்[14] துஞ்சிய திருமாவளவனையும், பாண்டியன் வெள்ளி யம்பலத்துத் துஞ்சிய பெருவழுதியையும் ஒருங்கிருப்பக் காணும் செவ்வியொன்று கண்ணனார்க்கு வாய்ந்தது. உடனே அவர், “அன்புடைய உங்கள் இருவர்க்கும் இடைபுகுந்து கெடுக்கும் ஏதில் மாக்கள் உளர்; அவருடைய பொது மொழியைக் கொள்ளாது இன்றே போல்க நும் புணர்ச்சி[15] என்று பாராட்டிக் கூறினார். இத்தகைய தமிழ்ச் சிறப்புடைய காரிக்கண்ணனார் பிட்டங் கொற்றனைப் பெரிதும் பாராட்டிப் பாடிய குறிப்பு நல்லிசைச் சான்றோர் பலர்க்குப் பிட்டனைக் காண்டல் வேண்டும் என்ற விருப்பத்தை உண்டு பண்ணிற்று. பலரும் கொங்கு நாடு போந்து பிட்டங்கொற்றனைக் கண்டனர். அவர் அனைவரையும், பிட்டன் தன் பெருமையும் அன்பும் விரவிய வரவேற்பளித்து மகிழ்ந்தான். அவர்களுள் ஆனிரையும் நெல் வயலும் வேண்டினாருக்கு அவையும், சிலர்க்கு நெற்குவையும், சிலர்க்குப் பொற்குவையும், சிலர்க்குப் பொற்கலங்களும் சிலர்க்குக் களிறும் தேரும் எனப் பரிசில் வகை பலவும் வரிசை பிறழாது நல்கினான்.
- ↑ 13. புறம். 166.
- ↑ 14. குராப்பள்ளியென்பது இக் காலத்தே திருவிடைக்கழி என வழங்குகிறது. M. Ep. A.R.No.265 of 1925, வெள்ளியம்பலம்- மதுரை மாடக் கூடலின் ஒருபகுதி.
- ↑ 15. புறம். 58.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சேரமான் குட்டுவன் கோதை - History of Chera - சேர மன்னர் வரலாறு - அவர், பிட்டன், அவன், அவரது, தமிழ், பரிசில், நின், காரிக்கண்ணனார், செவ்வி