சேர மன்னர் வரலாறு - சேரமான் குட்டுவன் கோதை
இவ்வாறு பிட்டன்பால் வந்த சான்றோருள், உறையூர் மருத்துவன் தாமோதரனாரும் ஒருவர். அவர் வந்திருந்தபோது ஒற்றர்கள் சிலர் போந்து பகைவர் தம்முட் பேசிக் கொள்வனவற்றை எடுத்துரைத்தனர். உறையூர் மருத்துவனார் அப்பகைவேந்தரது ஒற்றர் செவிப்படுமாறு, “பகைவர்களே, கூர்வேல் பிரிட்டன் மலைகெழு நாடன்; அவனைப் பகைத்துக் குறுகுதலைக் கைவிடுவீர்களாக; தன்பால் உண்மை அன்புடையார்க்கே அவன் எளியன்; பகைவர்க்கோ எனின், கொல்லன் உலைக்களத்தில் இரும்பு பயன்படுத்தும் கூடத்துக்கு சம்மட்டிக்கு இளையாத உலைக்கல் போல்பவன் என்று உணர்வீர்களாக,[16]” என்று பாடினர்.
வடம் வண்ணக்கன் தாமோதரனார் என்ற சான்றோரும் மதுரை மருதன்இளநாகனாரும் ஆலம்பேரி சாத்தனாரும் பிறரும் பிட்டங்கொற்றனைப் பாடிப் பரிசில் பெற்று இன்புற்றனர். அப்போது அவர்களிடையே பிட்டனுடைய வள்ளன்மை பொருளாக ஒரு சொல்லாட்டு நிகழ்ந்தது. தன்னைப் பாடி வருவோர்க்கு நம் பிட்டன் நன்கொடை வழங்குவது ஒக்கும்; அவனது கொடைமடம் ஆராயத் தக்கது என்ற முடிவு அவர்களிடையே உண்டாயிற்று. அப்போது அங்கே இருந்த காவிரிப்பூம்பட்டினத்துக் காவிரிக் கண்ணனார், பிட்டனைப் பலகால் கண்டு பயின்ற வராதலால் முடிந்த முடிபாகக் கூறலுற்று, “சான்றீர், இப்பொழுது சென்றாலும், சிறிது போது கழித்துச் சென்றாலும், முற்பகல் பெற்றவன் பிற்பகல் சென்றாலும், பிட்டங்கொற்றன் தனது கொடைமடத்தால் முன்னே வந்தவன் என்னாமல் கொடுத்தலைக் கடனாகக் கொண்டு செய்பவன்; எக்காலத்தும் பொய்த்தலின்றி எம் வறுமை நீங்க வேண்டுவன நல்கிவிடுவது அவனுக்கு இயல்பு; மேலும், அவன்பால் நம்மனோர் சென்று ஆனிரை விளைக்கும் நெல்லை நெற்களத்தோடே பெறவேண்டினும், அருங்கலம் வேண்டினும், களிறு வேண்டினும், இவை போல்வன பிற யாவை வேண்டினும் தன் சுற்றத்தாராகிய பிறர்க்கு அளிப்பது போலவே நம்மனோர்க்கும் நல்குவன்[17]” என்று பாடிக் காட்டினர். கேட்டவர் யாவரும் ஒக்கும் ஒக்கும் எனத் தலையசைத்து உவந்தனர்.
பிட்டங்கொற்றன், சான்றோர் அனைவர்க்கும் அவரவர் வரிசைக் கேற்பப் பரிசில் தங்கி விடுத்தான். அதனால் தம்மை வருந்திய வறுமைத் துன்பம் கெட் நின்ற வடம வண்ணக்கன் என்னும் சான்றோர். “வன்புல நாடனான பிட்டனும் அவனுக்கு இறைவனாரும் குட்டுவன் கோதையும் அவ்விருவரையும் மாறுபட்டெழும் பகை மன்னரும் நெடிது வாழ்க; பகை மன்னர் வாழ்வு எப்போதும் பரிசிலர்க்கு ஆக்கம்[18]” என்று பாடினர். இவ்வாறே பிறரும் பாடிய பின்பு, காரிக் கண்ணனார், “இவ்வுலகத்தில் ஈவோர் அரியர்; ஈவோருள் ஒருவனாய்ச் சிறக்கும் பிட்டன் நெடிது வாழ்க; அவனது நெடிய வாழ்வால் உலகர் இனிது வாழ்வர்[19]” என்று வாழ்த்தினர்.
தலைமகன் கடமை குறித்துத் தன் காதலியைப் பிரிந்து செல்ல வேண்டியவனானான். அவன் செலவுக் குறிப்பு அறிந்த தலைமகள் ஆற்றாமல் கண் கலுழ்ந்து அவனை நோக்கினாள். அவன் தனித்திருந்து பிரிவுக்குரியன செய்யுங்கால் அவன் மனக்கண்ணில் காதலியின் கன்னிய கண்ணிணை நீர் நிறைந்து காட்சியளித்தது. அக்கட்பார்வையைக் கூறக் கருதிய மருதன் இளநாகனார்க்குப் பிட்டனுடைய வேற்படை நினைவுக்கு வந்தது. உடனே அவர் தலைமகன் கூற்றில் வைத்து, “வானவன் மறவன் வணங்குவில் தடக்கை, ஆனா நறவின் வண்மகிழ்ப் பிட்டன், பொருந்தா மன்னர் அருஞ்சமத்து உயர்த்த திருத்திலை எஃகம் போல, அருந்துயர் தரும் இவள் பனிவார் கண்ணே[20]” என்று பாடினர். இவ்வாறே தலைவியது ஆற்றாமை கண்ட தோழி, தலைகனை யடைந்து, “தலைவ, சென்று வருவேன் என்று நீ சொன்ன சிறு சொல்லைக் கேட்டதும் ஆற்றாளாய்க் கண்ணீர் சொரிந்தாள்; அவளை யான் எங்ஙனம் ஆற்றுவேன்'’ என்று கூறலுற்றாள். தோழி கூற்றைப் பாட்டுவடிவில் தர வந்த ஆலம்பேரி சாத்தனார், கண்ணீரால் நனைந்த தலைவியின் கண்களை நினைத்தலும் பிட்டனுடைய குதிரை மலையிலுள்ள சுனைகளில் மலர்ந்து நீர்த் திவலையால் நனைந்திருக்கும் நீலமலர் நினைவிற்கு வரவே,
“வசையில் வெம்போர் வானவன் மறவன், நசையின் வாழ்நர்க்கு நன்கலம் சுரக்கும் பொய்யா வாய்வான் புனைகழல் பிட்டன் மைதவழ் உயர்சிமைக் குதிரைக் கவாஅன் அகல் அறை நெடுஞ்சுனைத் துவலையின் மலர்ந்த தண்கமழ் நீலம் போலத் கண்பனி கலுழ்ந்தன நோகோ யானே[21]” |
என்று பாடித் தனது நன்றியினைப் புலப்படுத்தினார்.
- ↑ 16. புறம். 170.
- ↑ 17. புறம். 171.
- ↑ 18. புறம். 171.
- ↑ 19. புறம். 171.
- ↑ 20. அகம். 77.
- ↑ 21. அகம். 77.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சேரமான் குட்டுவன் கோதை - History of Chera - சேர மன்னர் வரலாறு - அவன், பிட்டன், வேண்டினும், சென்றாலும், ஒக்கும், பாடினர், பிட்டனுடைய