சேர மன்னர் வரலாறு - ஆடு கோட்பாட்டுச் சேரலாதன்
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனுக்கு வேளாவிப் பதுமன் தேவி ஈன்ற மக்கள் இருவருள், முன்னவன் களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரலும் பின்னவன் ஆடுகோட்பாட்டுச் சேரலாதனுமாவர். இவர் நார்முடிச் சேரலுக்கும் செங்குட்டுவனுக்கும் இளையவனாதலின் செங்குட்டுவற்குப் பின் சேரநாட்டு அரசு கட்டில் ஏறினான்.
ஒருகால், தொண்டை நாட்டுக்கும் கொண்கான நாட்டுக்கும் இடையிலிருந்த தண்டாரணியத்தில் வாழ்ந்த வேந்தருக்கும் சேரருக்கும் பகைமையுண்டாக, இச் சேரலாதன் சேரர் படை யொன்றைக் கொண்டு சென்று வெட்டிசிப் போர் செய்து நிரைகளைக் கவர்ந்து வந்தான், அவற்றைத் தன் நாட்டுத் தொண்டி நகர்க்கண் நிறுத்தி அச் செயலில் துணை புரிந்த வீரர்களுக்கும் ஒற்றர்களுக்கும் கணிமொழிந்த பிறர்க்கும் பகுத்தளித் தான். தண்டாரணியத்திற் கோட்பட்டவற்றுள் வரை யாடுகளே மிக்கிருந்தமையின் அவனுக்கு ஆடுகோட் பாட்டுச் சேரலாதன்என்ற சிறப்புப் பெயர் உண்டாயிற்று. “தண்டாரணியத்துக் கோட்பட்ட வருடையைத் தொண்டியுள் தந்து” என்று பதிகம்[1] கூறுவதால், இவன் தொடக்கத்தில் தொண்டி நகரைத் தலைநகரமாகக் கொண்ட பொறைநாட்டல் இருந்து வந்தான் என்பது தெரிகிறது. செங்குட்டுவனுக்குப்பின் வஞ்சி நகரை அடைந்து சேரநாடு முழுதிற்கும் இச் சேரலாதன் முடி வேந்தனானான்.
ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் அரசு கட்டி லேறியதும், சேரநாட்டின் வட பகுதியில் வாழ்ந்த சதகன்னர், வானவாற்றையும் வானமலையையும் வரம்பறுத்துத் தம்மை வானவரம்பர் எனச் சேரர் கூறிக்கொள்வது பற்றி அழுக்காறு கொண்டு அதற்குத் தெற்கிலும் தமது எல்லைப் பரப்ப முயன்றனர். அவரது வானவாசி நாட்டுக்குத் தெற்கில், சேர நாட்டின் வடபகுதியாக இருந்த கொண்கான நாட்டை ஆண்டுவந்த “நன்னன் உதியன்[2]” என்பான், சேரர் கீழ்க் குறுநிலத் தலைவனாய் இருந்துவந்தமையின், அது குட நாட்டைச் சேர்ந்த பகுதியாயினும் தனியாக வைத்துப் பேசப்பட்டு வந்தது. அதன் தென் பகுதியே குடநாடு எனப் பெயர் வழங்கிற்று. நார்முடிச் சேரலால் கொங்கு நாட்டில் நன்னன் வலியழிந்து போகவே, அவன் வழிவந்தோர் சதகன்னர்களுக்கு அஞ்சி அவர்வழி நிற்கலாயினர். இரு திறத்தாரும் தம்மிற் கூடிக் குடநாட்டுட் புகுந்து குறும்பு செய்தனர். அச் செய்தி ஆடுகோட்பாட்டுச் சேரலாதனுக்கு தெரிந்தது. அவன் Fதகன்னர் முதலிய வடவரது குறும்பு பொதுவாகத் தமிழகத்தின் தனி மாண்புக்கு ஊறு செய்யும் என உணர்ந்து பாண்டி வேந்தர்க்கும் சோழ வேந்தர்க்கும் வேளிர்களுக்கும் அறிவிப்பத் தமிழ் வேந்தர் பலரும் கருத்தொருமித்துப் படைத்துணை புரிந்தனர். தமிழ்ப் பெரும்படை திரண்டு குடபுலம் நோக்கிச் சென்றது.
அக் காலத்தே, பொறை நாட்டின் கீழ்ப் பகுதியில் நச்செள்ளையார் என்ற புலவர் பெருமாட்டியார் வாழ்ந்தார். இப்போது அப்பகுதி பாலைக்காடு நாட்டில் நடுவட்டம் என வழங்குகிறது. தலைமகன் வினை மேற்கொண்டு தலைமகளைப் பிரிந்து சென்று வினை முடித்து மீண்டுவந்து தன் மனையை அடைந்து இனிதிருக்கையில், மனைவியின் தோழியை நோக்கி, என் பிரிவுக் காலத்தில் நீ நன்கு ஆற்றியிருக்குமாறு இவட்குத் துணை செய்தாய்; உனக்கு என் நன்றி” என்று கூற, அவனுக்கு அவள், “தலைவ, நின் வருகையை முன்னர் அறிவித்த காக்கைக்கு நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளோம்; இந் நாட்டுத் தொண்டி தகர்க்கண் இடப்பெறும் நெற்சோற்றில் நள்ளியின் கானத்தில் வாழும் இடையர் தரும் நெய்யைப் பெய்து ஏழு கலங்களில் ஏந்தித் தரினும், நின் வரவை கரைந்து உணர்த்திய காக்கைக்கு நன்றியாகச் செலுத்தக் கடவ பலி பெரிதாகாது, மிகவும் சிறிதாம்” என்றாள். இக் கருத்தை நற்செள்ளையார்,
“திண்டோர் நள்ளி கானத்து அண்டர் பல்லா பயந்த நெய்யின் தொண்டி முழுதுடன் விளைந்த வெண்ணெல் வெண்சோறு எழுகலத்து ஏந்தினும் சிறிது என் தோழி பெருந்தோள் நெகிழ்ந்த செல்லற்கு விருந்து வரக் கரைந்த காக்கையது பலியே[3] |
என்று பாடினர். இப் பாட்டின் இனிமையையும், நள்ளியினுடைய கானகத்தின் இயல்பையும், தொண்டி நகரின் நெல் வளத்தையும் உள்ளவாறு தீட்டப் பெற்றிருக்கும் ஒட்பத்தையும் கண்ட சான்றோர், அவர்க்குக் காக்கை பாடினி என்ற சிறப்பை நல்கினர். அதுமுதல் அவர் காக்கை பாடினியார் நச் செள்ளையார் என்று விளங்குவாராயினர். அதனை யறிந்த வேந்தன், அவர் இருந்த ஊரைக் காக்கையூர் என்று பெயரிட்டு அவர்க்கு இறையிலி முற்றூட்டாக வழங்கினான். அவர் தனது காக்கையூலிருந்து வந்தார். அது பாலைக்காட்டுப் பகுதியில் உள்ளது.
1 | 2 | 3 | 4 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆடு கோட்பாட்டுச் சேரலாதன் - History of Chera - சேர மன்னர் வரலாறு - தொண்டி, பகுதியில், அவர், சேரர், சேரலாதன், ஆடுகோட்பாட்டுச்