சேர மன்னர் வரலாறு - ஆடு கோட்பாட்டுச் சேரலாதன்
சேர நாடின் வடக்கில் வடவர் செய்யும் குறும்பும், அவர்களை ஒடுக்குதற்குச் சேரலாதன் படை கொண்டு செல்லும் மேற்செலவும் அவருக்குத் தெரிந்தன. சேர வேந்தர், மகளிர் பாடும் இசையிலும், ஆடும் கூத்திலும் பேரீடுபாடு உடையவர், செங்குட்டுவன் வடநாடு சென்ற போது பாடல் மகளிரும் ஆடல் மகளிரும் உடன் சென்ற திறம் இதற்குப் போதிய சான்றாகும். ஆடுகோட்பாட்டுச் சேரலாதன், ஆண்டில் இளையனாதலால் இன்பத்துறையில் மிக்க எளியனா யிருந்தது யாவர்க்கும் தெரிந்திருந்தது. சேரலாதன் போர்ச் செலவை மேற்கொண்டபோது மகளிர் கூட்டம் ஒன்றும் உடன் சென்றது. இந்த எளிமை வேந்தரது கொற்றத்தைச் சிதைக்கும் என்று காக்கை பாடினார் கண்டு தமது நெஞ்சில் அஞ்சிக்கொண்டே இருந்தார்.
ஆடுகோட் பாட்டுச் சேரலாதன் குடபுலம் செல்பவன், ஒருநாள் மாலையில், நுண்மணல் பரந்த பனம்பொழில் ஒன்றில் பந்தல் அமைத்து, ஏனை வேந்தரும் தலைவரும் கூடியிருப்ப விறலியரது பாட்டிசையில் இன்புறலானான். இதனை காக்கை பாடினார் அறிந்து, விரைந்து போந்து வேந்தனைக் கண்டு, “வேந்தே நீ இவ் வண்ணம் விறலியர் பாட்டிசையில் வீழ்ந்து கிடந்தால், நின் மனத் திண்மை உணராத பிறர் ‘இவ் வேந்தன் மெல்லியன் போலும்’ என எண்ணி இகழ்வரே!” என்ற கருத்துப்பட,
"சுடர் நுதல் மடநோக்கின் வாள் நகை இலங்கெயிற்று அமிழ்துபொதி துவர்வாய் அசைநடை விறலியர் பாடல் சான்று நீடினை உறைதலின், வெள்வேல் அண்ணல் மெல்லியன் போன்மென உள்ளுவர் கொல்லோநின் உணரா தோரே[4]” |
என இதனைக் கேட்கும் வேந்தன் உள்ளம் சினம் கொள்ளா வகையில், மிக்க நயமாக விளம்பினார். அதுகேட்டு வேந்தன் மறுவலித்துத் தன் செய்கையின் விளைவைச் சிந்திக்கலானான். உடனே காக்கை பாடினியார், நின்னை நன்கு உணர்ந்தோர், “நீ பெருஞ் சினப்புயலேறு அனையை” என்றும், நின் படைவழி வாழ்நர் “தடக்கையானைத் தோடிக்கோடு துமிக்கும் எஃகுடை வலத்தர்” என்றும், போர்க்களத்தின்கண்,
“மாற்றருஞ் சீற்றத்து மாயிருங் கூற்றம் வலை விரித்தன்ன நோக்கலை கடியையால், நெடுந்தகை![5]” |
என்றும் உணர்ந்து அமைவர் என்று இனிது மொழிந்து அவனைக் குடபுலப் போர்க்குச் செல்லுமாறு ஊக்கினார்.
குடபுலம் சென்ற சேரலானது பெரும்படையின் வரவு கண்டதும், கொண்கான நாட்டு வேந்தரான நன்னன் வழியினருட் சிலர், மலைபடு பொருளும் காடுபடு பொருளும் கடல்படு பொருளுமாகியவற்றுள் மிகச் சிறந்தவற்றைத் திறையாகத் தந்து பணிந்தனர். சேரலாதன் அவரது திறை பெற்றும் சினந் தணியானாக, அவர் பொருட்குக் காக்கை பாடினியார் வேந்தன் முன் நின்று,
“செல்வர் செல்வம் சேர்ந்தோர்க்கு அரணம், அறியாது எதிர்ந்து துப்பிற் குறையுற்றுப் பணிந்து திறை தருப நின் பகைவ ராயின், சினம்செலத் தணிமோ, வாழ்கநின் கண்ணி[6]” |
என்றும், “சினந் தணியாது போர் செய்து நாட்டை அழிப்பது கூடாது; இதுவும் நினது நாடே; பாடுசால் நன்கலம் தரூஉம் நாடு புறந்தருதல் நினக்குமார் கடனே” என்றும் எடுத்தோதினர். பின்பு, சேரலாதன் அவர்கட்கு நட்பருளி, அவரது துணைமை பெற்று, வடவாரியரைத் துணைக்கொண்டு தன்னொடு பொரற்குவந்த சதகன்னருடன் பெரும்போர் உடற்றினான். களிறும் குதிரையும் தேரும் வீரரும் கூடிய தமிழ்ப் படை, வடவர் தானையை வென்று வெருட்டிற்று. தமிழ் மறவர் தங்கள் மெய்புதை அரணம் கிழிந்தொழிந்ததை நினையாமல் தும்பை சூடிப் பொருதழித்தனர். எண்ணிறந்த வீரர் துறக்கம் புகுந்தனர். முடிவில் சேரலாதன் தானை, வான்வாசி நாட்டுட் புகுந்து அங்கேயே பாடிவீடு அமைத்து நின்றது. பகைவர் பலரும் புறந்தந்து ஓடினர். ஆற்றாத சதகன்னருட் சிலர் அடிபணிந்து அருங்கலம் பல தந்து, எம்மை அருளுக என வேண்டினர். சேரலாதன் அவர்கட்கு அருள் செய்து, பண்டு போல் வானவரம்பை நிலைநாட்டி, அவர்களையும் எல்லை கடவாது காக்குமாறு பணித்துவிட்டுத் திரும்பலானான். அதனால் சேரலாதனைச் சான்றோர் வானவரம்பன் என்று பாராட்டினர். இது நிலைபெறுமாறு, அந்நாட்டுப் பார்ப்பனரைக்கொண்டு பெருவேள்வி செய்து, அவர்கட்குக் குடநாட்டில் ஓர் ஊரையும் கொடுத்தான். இது பற்றியே பதிகமும் “பார்ப்பார்க்குக் கபிலையொடு குடநாட்டு ஓர் ஊர் ஈத்து, வானவரம்பன் எனப் பேரினிது விளக்கி” என்று கூறுவதாயிற்று.
வானவரம்பன் என்ற பேர் இனிது விளக்கிய ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் வஞ்சிநகர் போந்து இனி திருக்கோயில், கிழக்கில் கொல்லிமலைக்கும் காவிரிக்கும் இடையிலுள்ள நாட்டில் வாழ்ந்த மழவர் என்பார், தெற்கில் வேளிர்கள் வாழும் நாடுகளைச் சூறையாடிக் குறும்பு செய்யத் தலைபட்டனர். நெடும்பொறை நாட்டை[7] அடுத்திருக்கும் மீகொங்கு நாடும்[8] குறும்பு நாடும் சேரர் ஆட்சியில் இருந்தன. அம் மழவருள் சிலர் சேரர் ஆட்சியில் தலைவராகவும் தானை மறவராகவும் இருந்தனர். ஆயினும், மழவரது குறும்பு நாளடையில் மீகொங்கு நாட்டிலும் பொறை நாட்டிலும் பரவத் தலைப்பட்டது.
- ↑ 4. பதிற். 51.
- ↑ 5. பதிற். 51.
- ↑ 6. பதிற். 59.
- ↑ 7. பாலைக்காட்டை யொட்டிய மேலைமலை நாடு
- ↑ 8. ஈரோடும் அதனை யுள்ளிட்ட பகுதியும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆடு கோட்பாட்டுச் சேரலாதன் - History of Chera - சேர மன்னர் வரலாறு - சேரலாதன், என்றும், வேந்தன், காக்கை, வானவரம்பன், குறும்பு, செய்து, சிலர், சென்ற, நின்