சேர மன்னர் வரலாறு - ஆடு கோட்பாட்டுச் சேரலாதன்
சேரலாதன் இம் மழவரது குறும்பை அடக்க வேண்டியவனானான். அதனால் தன் தானை மறவர்களைப் பொறை நாட்டின் வழியாகக் கொங்கு நாட்டிற் செலுத்தி மழவர்களை ஒருங்கலுற்றான். அவர்கள் சிறந்த குதிரை வீரர்கள். அதனால், அவர்களை அறவே பகைத்து ஒதுக்குவது வேண்டத் தக்கதன்று என்பதைத் தேர்ந்து, அவர்களை வளைத்துப் பற்றித் தனக்கு அடங்கித் தன் ஏவல் வழி நிற்குமாறு பண்ண விரும்பினான். அவர்கட்குத்துவரைத் துவையலும் ஊன் கலந்து அட்ட சோறும் மிக்க விருப்பமானவை; அவற்றை நிரம்ப நல்கித் தன் தானை மறவராகக் கொண்டு, பின்னர் நிகழ்ந்த போர்கள் பலவற்றில் அவர்கட்கும் மெய்ம்மறையாய் நின்று அன்பு செய்தான்[9] அதனால் மழவர்கள் குறும்பு செய்வது தவிர்ந்து நண்பர்களாய் ஒழுகினர் அதனால் பதிகமும்[10] “மழைவரைச் செருவிற் சுருக்கி” என்று கூறுகிறது.
சேரலாதன் மழவரது குறும்பை அடக்கித் தனக்கு உரியராக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது கொங்கு நாட்டில் ஆன்பொருநைக் கரையில் (ஆம்பிராவதி) உள்ள கொங்கு வஞ்சி என்ற நகரத்தை அரண்களால் வலிமிக்கதாக்கினான். அதன்கண் சேரர் குடியில் தோன்றிய அரசியற் செல்வருள் ஒருவரை நிறுவிச் சேரர் கொங்கில் நாடு காவல் புரியச் செய்தான், இடைக்காலச் சோழ வேந்தர் கொங்கு வஞ்சியைக் கைப்பற்றி அதற்கு இராசராசபுரம் என்று பெயரிட்டனர். இதனை அவர்களுடைய கல்வெட்டுகள், “நறையனூர் நாட்டுக் கொங்கு வஞ்சியான ராசராசுபுரம்” என்று குறிப்பதினால் அறிகின்றோம். பிற்காலத்தே இதன் ஒரு பகுதி “இராசாதிராசத் சதுர்வேதிமங்கல”மாகியது. இப்போது இந்த இராசராசபுரம் தாராபுரம் என்று மருவிக் கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருப்பது யாவரும் அறிந்தது.
சான்றோர் செவிகைப்பச் சொல்லினும் அவற்றை ஏற்கும் பண்புடைய வேந்தன் பொன்றாப் புகழ் கொண்டு விளங்குவன் என்பதற்கு ஒப்பச் சேரலாதன், சான்றோர் அவ்வப்போது கூறுவனவற்றை யேற்று இனிதின் ஒழுகிப் புகழ்பெற்றான். ஒருகால், சேரலாதன் தன் ஆட்சியின் கீழிருந்து கொண்டே செருக்கிக் குறும்பு செய்த வேந்தன் ஒருவனைப் போரில் வென்று ஒடுக்கித் தன் நகர்க்குத் திரும்பி வரலானான் வரும் வழியல் அவ் வேந்தனுடைய அரண்மனை நின்றது. அதனை அறிந்த தானைத் தலைவர்கள், “அதற்குள் நுழைந்து செல்வதே தக்கது; அன்றேல், அதனைச் சுற்றி பெருந்தூரம் வளைந்து வளைந்து சேறல் வேண்டும்” என்றனர்; வேந்தனும் அவர் உரைக்கு இசையும் குறிப்புடையனானான் அப்போது காக்கை பாடினியார் குறுக்கிட்டு, “வேந்தே, செல்லும் வழியில் இருப்பது தொல்புகழ் மூதூர்; அதன்கண் எந்திரம் புணர்த்த கோட்டை வாயிலும், முதலைகள் வாழும் ஆழ்ந்த அகழியும், வானுற ஓங்கிய மதிலும் உள்ளன; அது நின்னாற் காக்கப்படுவதொன்று; அன்றியும், அதற்கு, நின் முன்னோர், தமக்கு முன்னும் பின்னும் வந்தோர் ஓம்புமாறு வேண்டுவன செய்துள்ளனர்; அதனால் அதன்கண் புகுந்து செல்லாது வேறு வழியே செல்வாயாக; நேரே செல்வாயேல், நின் படையிலுள்ள போர் யானைகள், ஏந்துகை சுருட்டித் தோட்டி நீவி மேம்படு வெல் கொடி நுடங்கத் தாங்கலாகா[11]” என்று தெருட்டினர். வேந்தனும் அவ்வாறே செய்து சிறப்புற்றான்.
நாட்டின் வருவாயைப் பெருக்கி, வந்ததனை அறம் பொருள் இன்பங்கட்குப் பகுத்துச் செவ்விய முறையில் ஆட்சி புரியும் சேரலாதன், இன்மையுற்று வருந்தும் இரவலர்க்கு வேண்டுவனவற்றை நிரம்ப நல்கி இனிது வாழச் செய்யும் இயல்புடையவன். பனியும் குளிரும் நின்று வருந்தும் மாசித் திங்களில் விடியற்காலத்தே செல்லும் பாணனுக்குக் காலையில் ஞாயிற்றின் எழுச்சியும் விளக்கமும் இன்பம் தருவது போல, இரவலருடைய சிறுகுடி பெருகப் பேருதவி செய்தான்[12]. காதலால் தமது உள்ளத்தைக் கவர்ந்து நிற்கும் மகளிர் துனித்து நோக்கும் பார்வை காதலர்க்கு மிக்க வருத் தத்தைச் செய்யும்; அதனை நீக்குதற்கு எச்செயலையும் அவர்கள் தட்டின்றிச் செய்வர் என்பது உலகியல் உண்மை. சேரலாதனோ எனின், காதலி காட்டும் துனித்த பார்வையினும் இரவலருடைய இன்மை நோக்கத்தைக் கண்டால் அஞ்சி நடுங்கி அதனை முற்பட்டு நீக்குவன்[13]. இதனால் சேரலாதன் நாட்டில், இரப்பவரே இலராயினர்; வேறு நாடுகளில் அவர்கள் இருப்பது ஒரு நாள் இவ்வேந்தனுக்குத் தெரிந்தது. உடனே அவன் அரசியற் சுற்றத்தாரை விடுத்து அந்த நாடுகட்குச் சென்று அவர்களைக் கொணருமாறு பணித்தான். அவர்கள் வந்தபோது அவர்கட்கு வேண்டுவன நல்கி இன்சொல்லும் நல்லுணவும் தந்து போக்கினான். இதனை, “வாராயினும் இரவலர் வேண்டித் தேரில் தந்து அவர்க்கு ஆர்பதன் நல்கும் இசைசால் தோன்றல்[14]” என்று நச்செள்ளையார் நாம் அறியப் பாடிக் காட்டுகின்றார்.
பொறை நாட்டின் வடபகுதியில் நறவு என்னும் ஒரு பேரூர் இருந்தது. அதனைத் தாலமி (Ptolemy) நறவூர் (Nouroura) என்று குறித்திருக்கின்றார்.[15] ஆங்குள்ள அரண்மனையில் ஒருகால் சேரலாதன் சென்று தங்கியிருந்தான். அதனோடு மகளிர் பலர் இருந்தனர். அக்காலத்தே, அவனைக் கண்ட நச்செள்ளையார், விறலி யொருத்தியை அவன்பால் ஆற்றுப்படுக்கும் வகையால் ஒரு பாட்டைப் பாடினர். அதன்கண் நறவூர் கடற்கரையில் உளதென்றும், அங்கிருக்கும் மறவர், கடலலை மோதுவதால் எழும் துளிகளையும் குளிர் முகிலின் துளிகளையும் கலந்து வீசும் ஊதைக்காற்றால் உடல் நடுங்கியிருப்பர் என்றும், அவன் அம் மகளிரிடையே இன்புற்றிருப்பினும் அவன் உள்ளம் போர்வினையையே கருதியிருக்கும் என்றும், அவனை அங்கே பாடிச் சென்று கண்டால் அவன் தான் பகைப்புலத்து வென்ற அரும் பொருள்களை நல்குவன் என்றும்[16] குறித்துள்ளார்.
- ↑ 9. பதிற். 55.
- ↑ 10. ஷை பதி. vi.
- ↑ 11. பதிற். 50.
- ↑ 12. பதிற். 59.
- ↑ 13. ஷை. 3.
- ↑ 14. ஷை. 55.
- ↑ 15. பெரிப்புளுஸ் ஆசிரியர் நவுறா (Naoura) என்பதும் பிளினி நித்திரியா (Nitria) என்பதும் இந்நறவூரையே; கர்னல்யூல் முதலியோர் நேத்தராவதியாற்றங் கரையிலுள்ள மங்களூர் என்று கருதுகின்றனர். ஆனால், நறவூர் என்ற பெயரையேயுடைய ஊரொன்று அப்பகுதியில் உளது.
- ↑ 16. பதிற். 60.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆடு கோட்பாட்டுச் சேரலாதன் - History of Chera - சேர மன்னர் வரலாறு - சேரலாதன், கொங்கு, அதனால், அதன்கண், அவன், சென்று, என்றும், செய்தான், நாட்டின், இருப்பது