10. பிரம்ம வைவர்த்த புராணம் - பதினெண் புராணங்கள்
பிரம்ம வைவர்த்த புராணம் பதினெட்டுப் புராண வரிசையில் பத்தாவதாக இடம் பெற்றுள்ளது. இது தீவிரமான வைணவ புராணம் என்று சொல்லப்படுகிறது. இப்புராணம் நான்கு பிரிவுகளைக் கொண்டது. அவையாவன: 1. பிரம்ம காண்டம், 2. பிரகிருதி காண்டம், 3. கணபதி காண்டம், 4. ஸ்ரீ கிருஷ்ணஜன்ம காண்டம் முதலியன. நான்காவது காண்டம் பூர்வ உத்திர என்னும் இரு பிரிவுகளைக் கொண்டதாகும். 18000 பாடல்களையும் 266 அதிகாரங்களையும் கொண்டது.
இப்புராணத்தின் முக்கியக் குறிக்கோள், ஸ்ரீ கிருஷ்ணனின் தெய்வீகமான உலகியல் கடந்த திருவிளையாடல்களைக் குறிப்பதும், ஸ்ரீ கிருஷ்ணரின் சக்தியாகிய ராதைக்கும்
கிருஷ்ணனுக்கும் உள்ள தொடர்பைக் குறிப்பதும் ஆகும். பிரம்ம வைவர்த்தம் என்ற பெயர் வந்ததே அனைத்தையும் கடந்து நிற்கின்றவன் - சக்தியாகிய ராதையோடு கூடிய ஸ்ரீ கிருஷ்ணன் அண்டங்கள் அனைத்திற்கும் தலைவனாவான் என்பதைக் குறிப்பிடுவதே ஆகும். "இந்த அண்டங்கள் முழுவதும் ஸ்ரீ கிருஷ்ணனே நிரம்பியுள்ளான் என்பதும், அவன் மனோ வாக்கு, காயம் கடந்த மெய்ப்பொருள் என்பதும், அவனுள் அண்ட சராசரங்கள் அனைத்தையும் காணலாம் என்பதும் உணரப்பட வேண்டும் என்று இப்புராணத்தி லுள்ள ஒரு பாடல் கூறுவதால், இப்பொருள் அனைத்தையும் உள்ளடக்கிப் பிரம்ம வைவர்த்தம் என்ற பெயரால் இப்புராணம் குறிப்பிடப்படுகின்றது.
"வாக்கு மனம் கடந்தவனும், நிர்க்குன பிரம்மத்தின் வடிவாக உள்ளவனும், எவ்வித மாற்றமும் இல்லாதவனும், எவனிடமிருந்து பிரகிருதி பிரம்மன், விஷ்ணு, சிவன் ஆகிய அனைவரும் தோன்றுகின்றனவோ அந்தக் கிருஷ்ணனை வணங்குகிறேன்” என்று இப்புராணத்தில் உள்ள மற்றொரு பாடல் அவனுடைய துணையாகிய ராதை என்பவள், துர்க்கை லட்சுமி, சரஸ்வதி சாவித்திரி, காளி ஆகிய பல்வேறு சக்திகளின் உறைவிடமாவாள் என்தையும் இப்புராணம் வலியுறுத்துகிறது. பல பெயரிட்டு அழைத்தாலும், தெய்வங்கள் அனைத்தும் ஒன்றே என்பதை வலியுறுத்துவது இப்புராணம், ஸ்ரீகிருஷ்ணன் மகாதேவரைப் புகழ்ந்து அவர்தாம் அனைத்தும் என்று சொல்வதும், மகாதேவர் கிருஷ்ணனைப் புகழ்ந்து அவர்தாம் அனைத்தும் என்று சொல்வதும் இப் புராணத்தில் பல இடங்களில் வருவதால் "ஏகம்சத் விப்ர பகுதாவதந்தி’' என்ற வேத வாக்கியம் நிரூபிக்கப் படுகிறது.
முன்னொரு காலத்தில் நைமிசாரண்ய வனத்தில் செளனகர் முதலிய முனிவர்கள் ஒய்வெடுத்துக் கொண் டிருந்தனர். அந்த நேரத்தில் மிக நீண்ட யாத்திரைக்குப் பிறகு லோமஹர்ஷனர் மகனாகிய செளதி முனிவர் அங்கு வந்து சேர்ந்தார். அவரைக் கண்டவுடன் செளனகரும் மற்ற முனிவரும் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். “முனிவனே! ஞானத்தைப் பெற வேண்டும் என்ற ஆசையால் நாங்கள் துடித்துக் கொண்டிருக்கிறோம். எல்லாப் புராணங்களையும் அறிந்தவ ராகிய தாங்கள் எங்களுக்கு ஞான வழியைக் காட்டும் ஏதாவ தொன்றை அருளிச் செய்ய வேண்டும்” என்று வேண்டினர்.
செளதி முனிவர், "தங்கள் விருப்பத்தை நிறைவேற்றுவதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். எல்லாப் புராணங்களையும் விட மிக உயர்ந்ததும், எல்லாப் புராணங்களின் சாரமாக இருப்பதும் ஆகிய பிரம்ம வைவர்த்த புராணத்தை உங்களுக்குச் சொல்லப் போகிறேன். இந்தப் புராணத்தைக் கேட்பவர்கள் உலக இன்பத்தை விரும்பினால் அதைத் தரும். மெய்ஞ்ஞான வழியை நாடுகின்றவர்கட்கு விடுதலையைத் தரும். இப்புராணம் வந்த வரலாற்றை முதலில் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். பிரம்மனுடைய வரலாற்றைக் கிருஷ்ணன் கூறி, அதை முதன்முதலில் பிரம்மனுக்கு உபதேசித்தார். பிரம்மன் இதைத் தர்மனுக்கு புஷ்கர நதிக்கரையில் கூறினார். தர்ம தேவதை நாராயணனுக்குக் கூற, நாராயணன் நாரதருக்குக் கூற, நாரதர் வேதவியாசருக்குக் கூறினார். வேதவியாசர் இப்புராணத்தைச் செளதி முனிவருக்குக் கூற, செளதி முனிவர் நைமிசாரண்ய வனத்தில், செளனக முனிவருக்கும், மற்றும் குழுமியிருந்த முனிவர்களுக்கும் கூற ஆரம்பித்தார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
10. பிரம்ம வைவர்த்த புராணம் - Brahma Vaivarta Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, இப்புராணம், காண்டம், பிரம்ம, ", ஸ்ரீ, செளதி, முனிவர், எல்லாப், அனைத்தும், என்பதும், அனைத்தையும், வேண்டும், ஆகிய