பதினான்கு மற்றும் பதினைந்தாம் நூற்றாண்டுகளில் ராமானந்தர், கபீர், நானக் ஆகிய மூவரும் பக்தி இயக்கத்தின் தூண்களாக விளங்கினர். தமக்கு முந்தைய பெரியோர்களிடமிருந்து அவர்கள் பக்தியுணர்வைப் பெற்றனர். ஆனால், மக்களுக்கு புதிய வழிகளைக் காட்டினர். காலங்காலமாக பின்பற்றப்பட்டுவந்த மூடநம்பிக்கைகளை விட்டொழித்து பக்திநெறியைக் கடைப்பிடித்து முக்தி பெறுமாறு அவர்கள் சாமானிய மக்களைக் கேட்டுக் கொண்டனர். முந்தைய கால சீர்திருத்தவாதிகளைப்போல ஒரு குறிப்பிட்ட சமயத்தை அவர்கள் சார்ந்திருக்கவில்லை. சடங்குகளிலும் சம்பிரதாயங்களிலும் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை. பல கடவுட் கொள்கையைச் சாடிய அவர்கள் ஒரு கடவுள் கோட்பாட்டை வலியுறுத்தினர். சிலை அல்லது உருவ வழிபாட்டையும் அவர்கள் இகழ்ந்தனர். பக்தி நெறிமூலமாக மட்டுமே முக்தி கிட்டும் என்று அசைக்கமுடியாத நம்பிக்கையை அவர்கள் கொண்டிருந்தனர். அனைத்து சமயங்களின் அடிப்படை ஒற்றுமையை அவர்கள் வலியுறுத்தினர்.
ராமானந்தர்
|
ராமானந்தர் |
ராமானந்தர் அலகாபாத்தில் பிறந்தவர். தொடக்கத்தில் அவர் ராமானுஜரின் சீடராகத்திகழ்ந்தார். பின்னர் அவரது தனிப்பிரிவை நிறுவி பனாரஸ், ஆக்ரா போன்ற இடங்களில் தமது கருத்துக்களை பரப்பினார். அவர் ராமரை வழிபட்டார். முதன்முதலில் பிராந்திய மொழியில் கருத்துக்களை பரப்பியவர் அவரே. எளிமையான வழிபாட்டை அவர் அறிமுகப்படுத்தினார். பண்டைய சாதிச் சட்டங்களை தகர்த்தெறிந்தார். இவ்விரண்டும் பக்தி இயக்கத்திற்கு அவர் அளித்த கொடைகளாகும். சாதி முறையைச் சாடிய ராமானந்தர் தமது சீடர்களை அனைத்து பிரிவுகளிலுமிருந்தும் தேர்ந்தெடுத்தார்.
அவரது முக்கிய சீடர்கள் வருமாறு :
அ) கபீர் - ஒரு முஸ்லிம் நெசவாளி.
ஆ) ராய்தாசர் - செருப்புத்தைக்கும் தொழிலாளி
இ) சேனா - முடி திருத்துபவர்
ஈ) சாதனா - மாமிசம் வெட்டுபவர்
உ) தன்னா - ஜாத்இன குடியானவர்
ஊ) நரஹரி - பொற்கொல்லர்
எ) பிபர் - ராஜபுத்திர இளவரசர்
கபீர்
|
கபீர் |
ராமானந்தரின் சீடர்களிலேபே புகழ்மிக்கவர் கபீர். பனாரஸ் நகரில் ஒரு பிராமண விதவைக்கு மகனாகப் பிறந்தார். ஆனால் ஒரு முஸ்லிம் தம்பதியினரால் வளர்க்கப்பட்டார். அவர்கள் நெசவுத்தொழிலை செய்து வந்தனர். பகுத்தறியும் ஆற்றல் மிக்க அவர் இந்து சமயம் மற்றும் இஸ்லாமிய சமயம் குறித்து நன்கு அறிந்து கொண்டார். இந்து, முஸ்லிம் தத்துவங்களை அவருக்கு எடுத்துரைத்தவர் ராமானந்தர். இந்து முஸ்லிம்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்துவதே கபீரின் அடிப்படை நோக்கமாக இருந்தது. சிலை வழிபாட்டை கண்டித்த அவர், கடவுள் முன்பு மனிதர் அனைவரும் சமம் என்றுரைத்தார். அனைத்து சமயங்களும் ஒன்றே என்றும் இந்துக்களும் முஸ்லிம்களும் ஒரே களிமண்ணால் வடிக்கப்பட்ட பாத்திரங்களே என்று எடுத்துக் கூறினார். ராமன் அல்லா இருவரும் அவருக்கு ஒன்றே! கோயிலும் மசூதியும் ஒன்றே என வலியுறுத்தினார். கடவுள்மீது பக்தி செலுத்துவதே முக்திக்கு சிறந்த வழி என்று கூறினார். இதற்கு தூய இதயத்தைப் பெற்றிருப்பதுடன் கொடுங்கோன்மை, நாணயமின்மை, போலிவேடம், கடமை தவறுதல் போன்றவற்றை விலக்கவும் வேண்டும் என்று கூறினார். அவரது சீடர்கள் கபீர்பந்திகள் என்று அழைக்கப்பட்டனர்.