முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » புகழ் பெற்ற புத்தகங்கள் » வால்காவிலிருந்து கங்கை வரை » பக்கம் 182
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 182
“தத்துவஞானி அரிஸ்டாட்டலா?”
“ஆம்; அவருடைய குரு பிளாட்டோ ஒரு லட்சியக் குடியரசைப் பற்றிக் கற்பனை செய்தார். ஆனால் அவருங்கூட அந்தக் குடியரசிலே பொது ஜனங்களுக்கு அதிகப்படியான உரிமை கொடுக்க விரும்பவில்லை. அவருடைய சிஷ்யனான அரிஸ்டாட்டல் லட்சியக் குடியரசிற்குப் பதிலாக ஒரு லட்சிய சாம்ராஜ்யத்தைக் கற்பனை செய்து விட்டான். இந்தக் கிரேக்க சக்கரவர்த்தி (அலெக்ஸாண்டர்) பாரசீகச் சக்கரவர்த்தியையும் தோற்கடித்து, அதற்கப்பாலும் எதுவரைக்கும் போவான் என்பது யாருக்குத் தெரியும்?”
“ஒரு முறை அகலக்கால் வைத்தவன், திரும்பவும் ஒடுக்கிக் கொள்வது என்பது அவனாலும் முடியாத காரியம். என்னுடைய நண்பன் விஷ்ணு குப்த சாணக்கியன் அங்கும் ஒரு சக்கரவர்த்தியைத் தேடிக் கொண்டிருக்கிறான்.”
“ஹிந்துச் சக்கரவர்த்தியும் கிரேக்கச் சக்கரவர்த்தியும் சிந்து நதிக் கரையிலே சந்திக்கும் நிலைமை ஏற்பட்டால்...?”
“இந்தத் தலைமுறையில் இல்லாவிட்டாலும், அடுத்த தலைமுறையில் நடக்கத்தான் போகிறது. நாள்தோறும் உலகம் சுருங்கிக் கொண்டே வருகிறது.”
சோபியாவும், நாகதத்தனும் சமுத்திரக் கரையிலிருந்து படகிலே பிரயாணமானார்கள். கடல் அமைதியாகவே இருந்தது. இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னே பாரசீகக் கடற்படைக்கு ஜலசமாதியளித்த அந்தக் கடல் அலைகளை, நன்றியோடும் அன்போடும் பார்த்தார்கள்.
கொஞ்ச தூரம் சென்றதும், திடீரென்று ஒரு பெரும் புயல் தோன்றியது. நூறு வருடங்களுக்கு முன்னால் பாரசீகர்கள் அனுபவித்த புயலின் கொடுமையை அவர்கள் உணர்ந்தார்கள். படகோட்டிகளுடைய பயம் நிறைந்த முகம் அவர்களுடைய பார்வையிலே பட்டது. படகின் துடுப்புகள் ஒடிந்தன. படகும் கவிழ்வதற்குத் தயாராகி விட்டது. நிலைமை தெளிவாகிவிட்டது. சோபியா நாகதத்தனைத் தனது கரங்களால் பிணைத்து, நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள். அவளுடைய முகத்திலே புன்முறுவல் பூத்தது. “மரணமும் நம்மைப் பிரிக்க முடியாது” என்றாள்.
“ஆம்; மரணமுங்கூட” என்ற நாகதத்தன், அவளுடைய இதழோடு இதழ் சேர்த்தான்.
படகும் கவிழ்ந்தது. அவ்விருவரையும் மரணத்தாலும் பிரிக்க முடியவில்லை.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 180 | 181 | 182 | 183 | 184 | ... | 367 | 368 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
- Volgavilirundhu Gangai Varai - வால்காவிலிருந்து கங்கை வரை - Famous Books - புகழ் பெற்ற புத்தகங்கள்