மருதகாசி பாடல்கள் - பக்கம் - 14

எழுதச் சொன்னார்கள். வெறும் ஊர்ப் பெயர் வந்தால் போதாது, கதை 'விவசாயி'யைப் பற்றியது. அதனால், அந்தத் தொழிலுக்கு முக்கியத்துவம் கொடுத்து எழுத வேண்டும் என்று எழுதிய பாட்டுத்தான் "மணப்பாறை மாடுகட்டி" என்று தொடங்கும் பாடல். அதே சமயத்தில், திரு. A K வேலன் அவர்களின் வெற்றிப் படமான "தை பிறந்தால் வழி பிறக்கும்" என்ற படத்திற்கு "நினைச்சது ஒண்ணு, நடந்தது ஒண்ணு" என்ற பல்லவியை எழுதிக் கொண்டிருக்கும்போது, நண்பர் வயலின் மகாதேவன் M.M. புரொடக்ஷன் என்ற கம்பெனி ஆரம்பிக்க வேண்டிய பங்குதாரர், பத்திரங்களுடன் வந்து கையெழுத்துப் போடுமாறு கேட்டார். முதலில் மறுத்தேன். பிறகு A.P.Nன் வற்புறுத்தலால் ஒப்புக் கொண்டேன்.
பல காரணங்களால், படம் வெளியிட இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆனதால், நானும் இசையமைப்பாளர் கே.வி. மகாதேவனும் அந்த "அல்லி பெற்ற பிள்ளை" என்னும் படத்தினால் அடைந்த தொல்லைக்கு அளவேயில்லை. இடையில், எத்தனையோ சம்பவங்கள். அன்றைய மக்கள் திலகம், புரட்சி நடிகர், இன்றைய முதல்வர் திரு. M. G. R. அவர்களுக்காக, என்னை அழைத்து, தேவர் அண்ணன் அவர்களால் எழுதி வாங்கப்பட்ட, புரட்சிகரமான கருத்துள்ள, முதல் பாடல் "மனுஷனை மனுஷன் சாப்பிடுறான்டா தம்பிப்பயலே" என்பதாகும்.
இடையில் மூன்று நான்கு ஆண்டுகள் நான், சேலத்திற்குப் போகவில்லை. அய்யா உடுமலையார் அவர்களை "அலிபாபாவும் நாற்பது திருடர்களும்" படத்திற்குப் பாடல் எழுதச் செய்ய, உயர்திரு. பாலு முதலியார் அவர்களும், சுலைமான் அவர்களும் வந்திருந்தார்கள். அப்பொழுது அய்யா அவர்கள். "நேஷனல் பிக்சர்ஸ்" ரத்தக் கண்ணீர் படத்திற்கு இந்தி ரிக்கார்டு டியூனுக்குப் பாட்டு எழுத, என்னைத் துணை புரிய அழைத்திருந்தார். அய்யா, அவர்களுடன் என்னைப் பார்த்த பாலு முதலியார் அவர்கள், "ஏனப்பா! நீ கூப்பிட்டால் கூட, சேலம் வருவதில்லை?" எனக் கேட்டார். நான் "நேரம் போதவில்லை. அதனால் வரவில்லை" எனச் சொல்லி விட்டேன். உண்மையான காரணம் வேறு. T.R.சுந்தரம் அவர்கள் இல்லாத சமயத்தில், என்னிடம் பண விஷயத்தில் சொன்னபடி நடக்கவில்லை என்பதுதான் காரணம்.
அவர்கள், அய்யா அவர்களை, "அலிபாபா" படத்திற்குப் பாட்டு எழுத 25 ஆயிரம் ரூபாய் என முடிவு செய்து விட்டு, "அய்யா! நீங்கள் எழுதி, டியூன் போட வேண்டிய பாடல்கள் இரண்டு அல்லது மூன்றுதான் இருக்கும். மீதமுள்ள பாடல், இந்தி அலிபாபாவில் உள்ள டியூனுக்கே எழுத வேண்டும்" என்று சொன்னதும், அய்யா என்னிடம், "நீ சேலம் வருகிறாயா?" எனக் கேட்டார்கள். அதன் காரணத்தை யூகித்துக் கொண்ட சுலைமான் அவர்கள் மாலை திரும்பி வருவதாகச் சொல்லி விட்டு T.R.S.க்கு டிரங்கால் செய்து, "அய்யாவை நீங்கள் கேட்டபடி ஏற்பாடு செய்து விட்டோம். ஆனால் ரிக்கார்டு டியூனுக்குப் பாட்டு எழுதுவது என்றால், மருதகாசியும் என்னுடன் வருவார் என்று சொல்லி இருக்கிறார்" எனக் கூற, அதற்கு T.R.S.அவர்கள் சுலைமான் அவர்களிடம், "நான் பலமுறை கேட்டும், மருதகாசி வர மறுத்து விட்டதாகச் சொன்னாயே? இப்பொழுது மட்டும் எப்படி வருகிறார்? அவர் மிகவும் மரியாதையுள்ளவர். இதற்கிடையில் ஏதோ காரணம் இருக்கிறது. அதனால் அருணா பிலிம்ஸ் கிருஷ்ணசாமியைப் பார்த்து, மருதகாசியை மாலை ஆறு மணிக்கு மேல் டிரங்கால் செய்து, நான் பேசச் சொன்னதாகச் சொல்" எனக் கூறி விட்டார். திரு. சுலைமான் அவர்கள், அதை அருணா பிலிம்ஸ்க்கு ஃபோன் செய்து சொன்னார்.
நான் டிரங்கால் செய்து, T.R.S. அவர்களிடம் பேசினேன். "காலையில் கவிராயரை அழைத்துக் கொண்டு வர முடியுமா?" என T R.S. கேட்டார். நானும் அய்யாவை அழைத்துக் கொண்டு சென்றேன். அங்கு பாடல்களைக் கேட்டோம். 8 பாடல்கள் இந்தி மெட்டுகள். இரண்டு பாடல்கள்தான் டியூன் செய்ய வேண்டியவை.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 12 | 13 | 14 | 15 | 16 | ... | 205 | 206 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் - 14 - மருதகாசி பாடல்கள், Maruthakasi Songs, சினிமா புத்தகங்கள் - Cinema Books, Tamil Music, Tamil Cinema, தமிழ்க் கலையுலகம், தமிழ் திரைப்படம், தமிழ் சினிமா, தமிழிசை - செய்து, அய்யா, பாடல், எனக், எழுத, நான், சுலைமான், காரணம், திரு, டிரங்கால், சொல்லி, கேட்டார், இரண்டு, இந்தி, பாட்டு, அதனால்