மருதகாசி பாடல்கள் - பக்கம் - 12
அனுபவம்
சென்னையில் அருணா பிலிம்ஸ் "ராஜாம்பாள்" படம் முடிந்ததும், "குமாஸ்தா" என்ற படம் ஆரம்பித்தார்கள். தெலுங்கு மொழிக்கு ஆச்சார்யா ஆத்ரேயாவும், தமிழுக்கு நானும் பாடல் இயற்றினோம். -
இசையமைப்பாளர் C. N. பாண்டுரங்கன் அவர்கள். ஆத்ரேயா தெலுங்கில் "மன அதக்குல இந்தே பிரதுக்குல பொந்தே ஆசலு பேக்கலமேடே" என்று பாடல் எழுதினார். அதற்கு நமது மனக் கோட்டைகள் எல்லாம் சீட்டுக் கட்டுகளால் கட்டப்பட்ட வீடு என்று அர்த்தமாம். நான் உடனே அதே பாடலின் மெட்டுக்கு, தமிழில் "நம் ஜீவியக் கூடு, களி மண் ஓடு! ஆசையோ மணல் வீடு" என்று பல்லவி எழுதினேன். ஆத்ரேயா உட்பட அனைவரும் பாராட்டிக் கொண்டிருக்கும் போதே, அதன் எதிரொலியாக, இன்னும் சொல்லப் போனால், தாங்கமுடியாத பேரிடியாக ஒரு தகவல் கிடைத்தது. அதுதான் என்னை நிலைகுலைய வைத்த எனது அடுத்த தம்பி கோவிந்தசாமி என்பவரின் மரணச் செய்தி. எழுதிய எழுத்துக்கள் என் வாழ்க்கையிலேயே நிஜங்கள் ஆகிவிட்டன. அதுவும் ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே.
அதன் பிறகு, மாதுரி தேவி அவர்கள் தனது சொந்தப் படமான "ரோகிணி"க்குப் பாடல் எழுத என்னையும், இசை அமைக்க G. ராமனாத அய்யர் அவர்களையும் ஒப்பந்தம் செய்தார்கள். அவர்கள் அடிக்கடி சில பெங்காலி கிராமபோன் ரிக்கார்டுகளைப் போட்டுக் காட்டி, மெட்டுகளுக்குப் பாடல் எழுதி ரிகார்டு செய்யுங்கள், என்று G. R. அவர்களிடம் சொல்ல, அவர் எந்தக் காரணத்திற்காக, சேலத்திற்கு (மாடர்ன் தியேட்டர்ஸ்) வர மாட்டேன் என்று சொன்னாரோ, அதே காரணம் இங்கும் தொடர்ந்ததும், G.R. மாதுரி தேவி அவர்களிடம், "இதற்கு நான் தேவையில்லை; வேறு யாரையாவது வைத்துக் கொள்ளுங்கள்" என்று சுமுகமான முறையில் சொல்லிவிட்டு அப்பொழுது H. M. V. யில் இருந்த, எனது அன்பிற்குரிய K. V. மகாதேவன் அவர்களை, இசை அமைப்பாளராகப் போடும்படி சொல்லிவிட்டு, விலகிக் கொண்டார். பல படங்களில் நாங்கள் ஒன்று சேர்ந்து வேலை செய்யும் சந்தர்ப்பத்தையும், ஒரே குடும்பம் போல் எங்கள் இரண்டு குடும்பங்களும் செயல்படும் நிலைமையையும் இறைவன் உண்டாக்கினார் என நினைக்கிறேன்
மாடர்ன் தியேட்டர்ஸில் இருந்து பிரிந்தவரும் என்னுடைய வளர்ச்சிக்காகப் பெரும் பாடுபட்டவருமான அண்ணன் M. A. வேணு அவர்கள், தனது சொந்தப் படங்களுக்கு என்னையும், ஷெரீஃப் அண்ணன் அவர்களையும் பாடல்கள் எழுத வைத்து, ஊக்குவித்ததை நான் என்றென்றும் மறக்க முடியாது.
இப்படி இருக்கும் போது பாகவதருடைய "புது வாழ்வு" படத்திற்கு ஒரு நகைச்சுவைப் பாடல் எழுதுவதற்கு கலைவாணருடைய ஒப்புதல் வாங்க என்னையும், திரு G. ராமனாதன் அவர்களையும் N.S.K. வீட்டிற்கு அழைத்துச் சென்றார்கள். N.S.K. யிடம் பாடல் ஆசிரியர் என்ற முறையில் எனக்கு அன்றுதான் அறிமுகம்.
ஆனால் N.S.K. அவர்கள் அவருக்கே உரிய பாணியில் என்னிடம் "எனக்கு இதுவரை உடுமலையார், கே. பி. காமாட்சி இருவரைத் தவிர, ஒரே ஒரு பாடல் ஆசிரியரான சந்தான கிருஷ்ண நாயுடு மட்டும்தான் எழுதினார். "நீங்கள் எழுதித் தரும் பாடல் எனக்குப் பிடிக்கவில்லையென்றால் நான் மறுபடியும் உடுமலையாரைக் கூப்பிடு என்று சொல்வேன். நீங்கள் மனம் ஒடிந்து விடுவீர்கள். நன்றாய் இருந்தால் பாராட்டுவேன். சம்மதம் என்றால் எழுதுங்கள்" என்றார்.
நான் அதைச் சவாலாக எடுத்துக் கொண்டேன். "பாடலுக்குரிய காட்சி அமைப்பைச் சொல்லுங்கள்" என்றேன். அதற்கு அவர், "ஒரு குருவிக்காரனும், குருவிக்காரியும் பகல் முழுவதும் தனித் தனியாக வியாபாரத்திற்குச் சென்று விட்டு வருகிறார்கள். அவன் அவள் மீது சந்தேகப்பட்டு ஏதேதோ கேட்கிறான். அவள் அதற்குச் சரியான பதில் சொல்லிக் கொண்டு வருகிறாள். முடிவில் உண்மையைச் சொல்லுகிறாள், வழியில் ஒரு காலிப்பயல் வம்பு செய்ததாக. அதைக் கேட்டு, குருவிக்காரன் கோபத்துடன் அவளையும் அழைத்துக் கொண்டு, அந்தக் காலிப்பயலைச் சந்தித்து, புத்தி புகட்ட போவதாகச் சொல்கிறான். இதுதான் காட்சி அமைப்பு", என்றார், பாடல் தன்னுடைய பாணியில் இருக்க வேண்டும் என்று சொன்னார். நான் "இது மிகவும் எளிதாயிற்றே. குற்றாலக் குறவஞ்சியில் வரும் சிங்கன் சிங்கிதானே", என்றவுடன் N.S.K. என்னிடம் "தங்களுக்கு இலக்கியப் பயிற்சி உண்டா?" எனக் கேட்டார். எனக்கு இலக்கியப் பயிற்சி அளித்த பாபநாசம் ராஜகோபாலய்யர் அவர்கள், என்னுடைய மானசீக குரு உடுமலையார் அவர்கள், என்னுடைய வழிகாட்டிகள் காழி அருணாசலக் கவிராயர் (ராம நாடகம் எழுதியவர்) "நந்தனார்" சரிதம் எழுதிய கோபால கிருஷ்ண பாரதியார், சைவ சமய சமரச கீர்த்தனைகள் தந்த ஜட்ஜ் வேதநாயகம் பிள்ளை, பாபநாசம் சிவன், நாடகத் தந்தை சங்கரதாஸ் சுவாமிகள் எனச் சொல்லி, அவரிடம் சில பாடல்களையும் பாடிக் காட்டினேன். என்னை உடனே N.S.K. அணைத்துக் கொண்டு, உடுமலை இருந்த இதயத்தில் உங்களுக்குப பாதியைக் கொடுத்து விட்டேன்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 10 | 11 | 12 | 13 | 14 | ... | 205 | 206 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் - 12 - மருதகாசி பாடல்கள், Maruthakasi Songs, சினிமா புத்தகங்கள் - Cinema Books, Tamil Music, Tamil Cinema, தமிழ்க் கலையுலகம், தமிழ் திரைப்படம், தமிழ் சினிமா, தமிழிசை - பாடல், நான், எனக்கு, கொண்டு, அவர்களையும், என்னையும், என்னுடைய