முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » வரலாறு படைத்தோரின் வாழ்க்கை குறிப்புகள் » ஜோசஃப் லிஸ்டர் (கி.பி.1827 - கி.பி.1912)
ஜோசஃப் லிஸ்டர் (கி.பி.1827 - கி.பி.1912)

அறுவை சிகிச்சையில் நோய் நுண்மத்தடை (anticeptic) முறைகளைப் பயன்படுத்துவதைக் கண்டுபிடித்த பிரிட்டிஷ் அறுவைச் சிகிச்சை வல்லுநர் ஜோசஃப் லிஸ்டர் ஆவார். இவர் இங்கிலாந்திலுள்ள அப்ட்டான் என்னும் ஊரில் 1827 ஆம் ஆண்டில் பிறந்தார். இவர் லண்டனிலுள்ள பல்கலைக்கழகக் கல்லூரியில் கல்வி பயின்றார். மிகச் சிறந்த மாணவராகத் திகழ்ந்த இவர் 1852 ஆம் ஆண்டில் மருத்துவத்தில் பட்டம் பெற்றார். கிளாஸ்கோ தேசிய மருத்துவமனையில் 1861 ஆம் ஆண்டில் இவர் ஒரு அறுவை மருத்துவராகச் சேர்ந்தார். அங்கு எட்டு ஆண்டுகள் அந்தப் பதவியை வகித்தார். இந்தப் பணிக் காலத்தின்போது தான் நோய் நுண்மத் தடை அறுவைச் சிகிச்சை முறையை இவர் கண்டுபிடித்தார்.
கிளாஸ்கோக தேசிய மருத்துவமனையில் புதிய அறுவை சிகிச்சைப் பிரிவுக்கு லிஸ்டர் பொறுப்பாளராக இருந்தார். அங்கு அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஏராளமான நோயாளிகள் மாண்டு போவது கண்டு திடுக்கிட்டார். அறுவை சிகிச்சைக்குப் பிறகு தசையழுதல் போன்ற கொடிய நோய்கள் பெரும்பாலும் பீடிப்பதைக் கண்டார். லிஸ்டர் தமது பகுதியை மிகவும் தூய்மையாக வைத்துக் கொள்ள முயன்றார். எனினும், அதிக இறப்பு வீதத்தை இது தடுக்கவில்லை. மருத்துவமனையைச் சுற்றி எழும் புழுக்க நச்சு ஆவிகள் தாம் இந்தத் தொற்று நோய்களுக்குக் காரணம் என்று பல மருத்துவர்கள் கூறினார்கள். ஆனால், இந்த விளக்கம் லிஸ்டருக்கு மன நிறைவு அளிக்கவில்லை.
1865 ஆம் ஆண்டில் லூயி பாஸ்டர் எழுதிய ஆய்வுக் கட்டுரையொன்றை லிஸ்டர் படித்தார். அக்கட்டுரையிலிருந்து நோய் நுண்மம் பற்றிய கோட்பாட்டை அறிந்து கொண்டார். அதிலிருந்து லிஸ்டருக்கு ஒரு முக்கியமான எண்ணம் உதித்தது. நோய் நுண்மங்களினால், தொற்று நோய்கள் உண்டாகின்றன என்றால், திறந்த புண்களினால் நோய் நுண்மங்கள் நுழைவதற்கு முன்னதாக அவற்றை அழித்து விடுவதுதான் அறுவைச் சிகிச்சைக்குப் பிந்திய மரணங்களைத் தடுப்பதற்குச் சிறந்த முறை என லிஸ்டர் கருதினார். நோய் நுண்மக் கொல்லி மருந்தாகக் கார்பாலிக் அமிலத்தைப் பயன்படுத்தி, நோய் நுண்மத் தடுப்பு முறைகளின் புதிய தொகுதியொன்றை லிஸ்டர் வகுத்தமைத்தார். இதன்படி, ஒவ்வொரு அறுவைச் சிகிச்சைக்கு முன்பும், அவர் தமது கைகளை தூய்மையாகக் கழுவி, அறுவைச் சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் கருவிகளையும், கட்டுத் துணிகளையும் முற்றிலும் தூய்மையாக வைத்துக் கொண்டார். அறுவைச் சிகிச்சை அறையில் சிறிது நேரம் கார்பாலிக் அமிலத்தைத் தெளித்து வைக்கவும் செய்தார். இந்த முறைகளினால், அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு மரணங்கள் வெகுவாகக் குறைந்தன. ஆண்களுக்கான விபத்துப் பிரிவின், 1861-1865இல் அறுவை சிகிச்சைக்குப் பிறகு இறப்போர் விகிதம் 45% அளவுக்கு இருந்தது. இந்த விகிதம் 1869 ஆம் ஆண்டில் 15% அளவுக்குக் குறைந்தது.
நோய் நுண்மத்தடை அறுவை சிகிச்சை பற்றிய லிஸ்டரின் முதலாவது முக்கிய ஆய்வுக் கட்டுரை 1867- ஆம் ஆண்டில் வெளியாகியது. இது பற்றிய இந்தக் கருத்துகள் உடனடியாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை. எனினும், 1869 ஆம் ஆண்டில் எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் அறுவை சிகிச்சைப் பிரிவின் தலைவர் பதவி இவருக்கு வழங்கப்பட்டது. அந்தப் பதவியில் இவர் பணியாற்றிய 7 ஆண்டுகளில் இவருடைய புகழ் பரவியது. 1875 ஆம் ஆண்டில் இவர் ஜெர்மனியில் சுற்றுப் பயணம் செய்து தமது கொள்கைகள் குறித்தும், முறைகள் பற்றியும் சொற்பொழிவுகள் ஆற்றினார். அதற்கு அடுத்த ஆண்டில் அமெரிக்காவிலும் இவர் அதே போன்ற சொற்பொழிவுப் பயணம் மேற்கொண்டார். எனினும், பெரும்பாலான மருத்துவர்களுக்கு இவருடைய முறையில் நம்பிக்கை ஏற்படவில்லை.
1877 ஆம் ஆண்டில் லண்டனிலுள்ள அரசர் கல்லூரியின் அறுவைச் சிகிச்சைத் துறையின் தலைவர் பதவியில் லிஸ்டர் நியமிக்கப்பட்டார். இப்பதவியை இவர் 15 ஆண்டுகள் வகித்தார். அப்போது, இவர் லண்டனில் தமது நோய் நுண்மத் தடை அறுவை சிகிச்சை முறைக்கு பல தடவை செயல் விளக்கம் செய்து காட்டினார். அதன் பின்னர், இவருடைய முறையில் மருத்துவ வட்டாரத்தினர் ஆர்வங்காட்டலானார்கள். இவருடைய கொள்கைகள் மேன்மேலும் ஏற்றுக் கொள்ளப்படலாயிற்று. லிஸ்டரின் ஆயுட்காலத்திற்குள்ளேயே அவருடைய நோய் நுண்மத் தடை அறுவை சிகிச்சை முறையினை உலகெங்குமுள்ள மருத்துவர்கள் ஏற்றுக் கொண்டனர்.
லிஸ்டர் தமது தலைசிறந்த பணிக்காக ஏராளமான விருதுகளைப் பெற்றார். இவர் தேசிய அறிவியல் கழகத்தின் தலைவராக ஐந்தாண்டுகள் பணியாற்றினார். விக்டோரியா அரசியாரின் சொந்த மருத்துவராகவும் பணி புரிந்தார். இவர் திருமணம் புரிந்து கொண்டார். ஆனால், குழந்தைகள் இல்லை. லிஸ்டர் 85 வயதுவரை வாழ்ந்தார். இவர் இங்கிலாந்திலுள்ள வால்மர் நகரில் 1912 இல் காலமானார்.
லிஸ்டரின் கண்டுபிடிப்புகள் அறுவை சிகிச்சைத் துறையில் புரட்சிகரமான மாறுதல்களை ஏற்படுத்தின. கோடிக்கணக்கான உயிர்கள் அவருடைய முறையினால் காப்பாற்றப்பட்டன. இன்று அறுவை சிகிச்சைக்குப் பிந்திய தொற்று நோய்களினால் இறக்கும் மக்களின் எண்ணிக்கை மிகச் சொற்பமே. அதுமட்டுமின்றி, நூறாண்டுகளுக்கு முன்பிருந்ததைப் போலவே நோய்த் தொற்று அபாயம் மிக அதிக அளவில் இருக்கும் இந்தக் காலத்தில் அறுவை சிகிச்சையை மிகவும் பாதுகாப்பானதாக ஆக்கியுள்ளது லிஸ்டரின் கண்டுபிடிப்புதான். மேலும், தொற்று நோய் அபாயம் மிகுதியாக நிலவிய முற்காலத்தில் மேற்கொள்வதற்கு முயற்சி செய்யப்பட்டிராத மிகச் சிக்கலான அறுவைச் சிகிச்சைகளை இன்று அறுவை சிகிச்சை வல்லுநர்கள் மிக எளிதாக மேற்கொள்ள முடிகிறது. உதாரணமாக, நூறாண்டுகளுக்கு முன்பு, மார்புக் கூட்டின் உட்குழியை அறுவைச் சிகிச்சையால் திறந்து பார்க்க நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார்கள். இன்று பயன்படுத்தப்படும் நோய் நுண்மத் தடை அறுவை சிகிச்சை உத்திகள் லிஸ்டர் பயன்படுத்திய அதே உத்திகளாக இல்லையெனினும், அவற்றின் அடிப்படைக் கருத்துகள் ஒன்றுதான். இன்றைய உத்திகள், லிஸ்டர் முறைகளின் ஒரு விரிவாக்கமேயாகும்.
பாஸ்டர் முறையின் தொடர் பயன்கள்தாம் லிஸ்டரின் கொள்கைகள் என்றும், அதனால் எவ்விதப் பெருமைக்கும் லிஸ்டர் உரிமையுடையவர் அல்லர் என்றும் ஒரு சாரார் கூறுவர். ஆனால், பாஸ்டர் நோய் நுண்மத் தடை குறித்து எழுதி மட்டுமே வைத்திருந்தார். நோய் நுண்மத் தடை அறுவை சிகிச்சை முறைகளை நடைமுறையில் கண்டு பிடித்துப் பரப்புவதற்குக ஒருவர் தேவைப்பட்டார். அந்த ஒருவர்தான் லிஸ்டர். பாஸ்டருக்கும், லிஸ்டருக்கும் இந்த நூலில் இடமளிப்பது, ஓர் கண்டுபிடிப்புக்காக இரண்டு முறை பெருமையளிப்பது போன்றதாகும் எனக்கூறுவதும் சரியன்று. நோய் நுண்மக் கோட்பாட்டின் பயன்பாடுகள் மிகப் பெரும் முக்கியத்துவம் வாய்ந்தவை. அதற்கான பெருமையை பாஸ்டர் லீயூவென்ஹூக், பிளமிங், லிஸ்டர் ஆகியோரிடையே பகிர்ந்தளித்தாலுங்கூட அவர்கள் ஒவ்வொருவரும் இந்தப் பட்டியலில் இடம் பெறுவதற்கு முழுத் தகுதியுடையவர்கள் ஆவர்.
லிஸ்டருக்கு இந்தப் பட்டியலில் இத்துணை உயர்ந்த இடம் அளிப்பதற்கு இன்னொரு வகையிலும் எதிர்ப்பு தெரிவிக்கப்படடடடலாம். லிஸ்டர் தமது பணியைச் செய்வதற்கு 20 ஆண்டுகளுக்கு முன்னர், இக்னாஸ் செம்மல்வெய்ஸ் (1818-1865) எனற அங்கேரிய மருத்துவர், வியன்னா அரசு மருத்துவமனையில், மகப்பேறு மருத்துவம் அறுவை சிகிச்சை இரண்டிலும் நோய் நுண்மத் தடை முறைகளின் நன்மைகளைத் தெளிவாகச் செயல்விளக்கம் செய்து காட்டியிருந்தார். எனினும், இக்னாஸ் செம்மல்வெய்ஸ் ஒரு போராசிரியராகத் தம் கொள்கைகளை விளக்கி அரிய கொள்கைளை எழுதியிருந்த போதிலும், அவரை மருத்துவ உலகம் பெரும்பாலும் கண்டு கொள்ளவில்லை. விடா முயற்சியுடன் எழுதியும், சொற்பொழிவுகளாற்றியும், செயல் விளக்கங்கள் செய்து காட்டியும் மருத்துவ தொழிலில் நோய் நுண்மத் தடைமுறைகளைக் கையாள்வதன் இன்றியமையாமையை மருத்துவத் தொழிலாற்றுநர்களுக்கு உள்ளபடியே உணர்த்தியவர் ஜோசப் லிஸ்டரே ஆவார்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 83 | 84 | 85 | 86 | 87 | ... | 109 | 110 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஜோசஃப் லிஸ்டர் (கி.பி.1827 - கி.பி.1912), நோய், அறுவை, லிஸ்டர், இவர், அறுவைச், சிகிச்சை, ஆண்டில், நுண்மத், சிகிச்சைக்குப், தமது, லிஸ்டரின், தொற்று, பாஸ்டர், இவருடைய, எனினும், செய்து, பிறகு, இன்று, ஏற்றுக், கொள்கைகள், முறைகளின், மருத்துவ, கண்டு, தேசிய, மிகச், மருத்துவமனையில், இந்தப், பற்றிய, லிஸ்டருக்கு, கொண்டார், Life Notes of Historians - வரலாறு படைத்தோரின் வாழ்க்கை குறிப்புகள் - General Knowledge - GK Data Warehouse - பொது அறிவு - பொது அறிவுக் களஞ்சியம்