முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » வரலாறு படைத்தோரின் வாழ்க்கை குறிப்புகள் » வில்லியம் டி.ஜி. மோர்ட்டோன் (கி.பி.1819 - கி.பி.1868)
வில்லியம் டி.ஜி. மோர்ட்டோன் (கி.பி.1819 - கி.பி.1868)

வில்லியம் தாமஸ் கிரீன் மோர்ட்டோன் என்ற பெயரை பெரும்பாலான வாசகர்கள் அறிந்திருக்க மாட்டார்கள். எனினும், வேறு பல புகழ்பெற்ற மனிதர்களை விட மிகப் பெருமளவுக்குச் செல்வாக்குப் பெற்றவராக அவர் விளங்கினார். ஏனெனில், அறுவை சிகிச்சையில் நோவை உணரா வண்ணம் உணர்ச்சி மயக்கமூட்டுகிற முறையை (Anaesthesia) பயன்படுத்துவதைப் புகுத்துவதற்கு மூலகாரணமாக விளங்கியவர் மோர்ட்டோன் ஆவார்.
வரலாறு முழுவதிலுமே, உணர்வின்மையை ஊட்டும் மயக்க மருந்தினைப் போல் தனி மனிதர்களால் மிக உயர்வாக மதிக்கப்படும் கண்டுபிடிப்புகள் மிகச் சிலவே உண்டு. அது மட்டுமன்றி, இதைப் போன்று மனிதரின் உணர்ச்சி நிலையில் ஆழ்ந்த மாற்றத்தை உண்டாக்கிய வேறு கண்டுபிடிப்பு எதுவுமில்லை எனலாம். ஒரு காலத்தில் ஒரு நோயாளி விழித்திருக்கும் போதே, அறுவைச் சிகிச்சை மருத்துவர் அவரது எலும்புகளில் இரம்பத்தைப் பாய்ச்சி அறுப்பார் என்பதை நினைத்துப் பார்க்கும் போதே நமக்குப் பெருந்திகில் உண்டாகிறது. இது போன்ற கொடிய வேதனைக்கு முற்றுப் புள்ளி வைக்க முடிந்தது என்பதே. எந்த ஒரு மனிதனும் தனது உடனொத்த மனிதர்களுக்கு அளிக்கும் மிகச் சிறந்த நன்கொடை என்பதில் ஐயமில்லை.
அமெரிக்காவில் மாசாசூசெட்ஸ் மாநிலத்தில் சார்ல்ட்டன் நகரில் 1819 ஆம் ஆண்டில் மோர்ட்டோன் பிறந்தார். இளமைப் பருவத்தில் பால்டிமோர் பல்மருத்துவக் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்றார். 1842 ஆம் ஆண்டில் இவர் பல் மருத்துவத்தில் தொழில் நடத்தினார். 1842 மற்றும் 1843 ஆம் ஆண்டுகளில் சிறிது காலம், ஹோரேல் வேல்ஸ் என்ற பல் மருத்துவ அறிஞருடன் கூட்டாண்மைத் தொழில் நடத்தினார். வேல்ஸ் இவரைவிடச் சற்று மூத்தவர். உணர்ச்சி மயக்க முறையில் வேல்சும் ஆர்வம் கொண்டிருந்தார். இவர்களுடைய கூட்டாண்மை லாபகரமாக இல்லை எனத் தோன்றுகிறது. 1843 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் அந்தக் கூட்டாண்மை முடிவுற்றது.
இதற்கு ஓராண்டுக்குப் பின்னர், வேல்ஸ், "சிரிப்பூட்டும் வாயு" (Laughing gas) என அழைக்கப்படும் நைட்ரஸ் ஆக்சைடை வலி நீக்கும் மயக்க மருந்தாய்ப் பயன்படுத்திப் பரிசோதனைகள் நடத்தலானார். கனக்டிக்கட் மாநிலத்தில் ஹார்ட்ஃபோர்டில் மருத்துவ தொழிலாற்றும் போது நைட்ரஸ் ஆக்சைடைப் பல் நோய் சிகிச்சையில் வேல்ஸ் பயன்படுத்தினார். ஆனால், பாஸ்டனில் இந்த முறையைப் பொதுமக்களுக்குச் செயல் விளக்கம் செய்து காட்ட இவர் முயன்றபோது இந்த முறை வெற்றியடையாமல் போயிற்று.
மோர்ட்டோன் தமது மருத்துவத் தொழிலில், செயற்கைப் பற்களைப் பொருத்துவதில் தனித் திறமை பெற்றவராக விளங்கினார். செயற்கைப் பற்களைத் தக்க முறையில் பொருத்துவதற்கு முதலில் பழைய பல்லின் வேரை அப்புறப்படுத்த வேண்டியிருந்தது. நோவு நீக்கும் மயக்க மருந்து கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்னர், பல்லின் வேர்களைப் பிடுங்குவது மிகுந்த வேதனையைத் தந்தது. இதற்கு ஏதேனுமொருவகை மயக்க மருந்துக் கண்டு பிடிப்பது இன்றியமையாததாயிற்று. தமது நோக்கங்களுக்கு நைட்ரஸ் ஆக்சைடு போதிய அளவுக்குப் பயனுடையதாக இராது என்பதை மோர்ட்டோன் உணர்ந்தார். அதைவிட ஆற்றல் வாய்ந்த ஒரு மருந்தை கண்டுபிடிப்பதில் தீவிரமாக ஈடுபட்டார்.
சார்லஸ் டி.ஜேக்சன் என்பவர் ஒரு மருத்துவ வல்லுநராகவும், விஞ்ஞானியாகவும் விளங்கியவர். அவர் மோர்ட்டோனிடம் ஈதரை (Ether) மயக்க மருந்தாகப் பயன்படுத்திப் பார்க்கும்படி ஆலோசனை கூறினார். ஈதருக்கு உணர்ச்சி மயக்கமூட்டுகிற பண்பு உண்டு என்பது 300 ஆண்டுகளுக்கு முன்னரே பாராசெல்சஸ் (Paracelsus) என்ற புகழ்பெற்ற சுவிஸ் மருத்துவரால் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. 19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் இது பற்றிய ஓரிரு அறிக்கைகள் வெளியாகியிருந்தன. ஆனால், ஈதர் பற்றி எழுதிய ஜேக்சனோ வேறு எவருமோ இந்த வேதிப் பொருளை அறுவை சிகிச்சைக்குப் பயன்படுத்தியதில்லை.
ஈதர் ஒரு வெற்றிகரமான மயக்க மருந்தாக அமையலாமென மோர்ட்டோனும் கருதினார். அதைக் கொண்டு அவர் பரிசோதனைகள் நடத்தலானார். முதலில் தமது செல்லப் பிராணி நாய் உட்பட விலங்குகளிடம் அதைப் பயன்படுத்தினார். பின்னர் தம்மிடமே சோதனை செய்து பார்த்தார். இறுதியில் 1846ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ஆம் நாள் ஒரு நோயாளிக்கு ஈதரைப் பயன்படுத்திச் சோதனை செய்வதற்கான ஓர் அரிய வாய்ப்புக் கிடைத்தது. ஈபன் ஃபிராஸ்ட் என்ற நபர், கடுமையான பல் வலியால் துடித்துக் கொண்டு மோர்ட்டோனிடம் வந்தார். தொல்லை கொடுத்த பல்லைப் பிடுங்கி தம் வலியைப் போக்கும் எந்தச் சிகிச்சைக்கும் தாம் தயாராக இருப்பதாகக் கூறினார். அவருக்கு மோர்ட்டோன் ஈதரை மயக்க மருந்தாக கொடுத்து, அவருடைய பல்லைப் பிடுங்கினார். ஃபிராஸ்ட் மயக்கம் தெளிந்து உணர்வு பெற்றபோது, பல்லைப் பிடுங்குகையில் தமக்கு வலியே தெரியவில்லை என்று கூறினார். இந்த முடிவுக்குத்தான் மோர்ட்டோன் காத்திருந்தார். வெற்றியும், புகழும், பொருளும் அவர் முன் காட்சியளித்தன.
இந்த அறுவை சிகிச்சையைப் பலர் முன்னிலையில் மோர்ட்டோன் செய்து காட்டினார். அடுத்த நாளன்றே செய்தியிதழ்களில் அந்தச் செய்தி வெளிவந்தது. ஆயினும், இது பரவலாகக் கவனத்தைக் கவரவில்லை. இந்த முறையை இன்னும் வியப்புத் தருகிற வகையில் செயல் விளக்கம் செய்து காட்ட வேண்டிய அவசியம் ஏற்பட்டது. வலி நீக்கும் தமது முறையை ஒரு மருத்துவர் குழுவின் முன்னிலையில் நடைமுறையில் செயல் விளக்கம் செய்து காட்டுவதற்கு ஒரு வாய்ப்பளிக்கும்படி பாஸ்டனிலுள்ள மாசாசூசெட்ஸ் அரசு மருத்துவமனையின் மூத்த அறுவைச் சிகிச்சை வல்லுநராகிய டாக்டர் ஜான் லாரனிடம் மோர்ட்டோன் வேண்டினார். இதற்கு டாக்டர் லாரன் இசைந்தார். அந்த மருத்துவமனையிலேயே செயல் விளக்கத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அங்கு, 1846 ஆம் ஆண்டு அக்டோபர் 16 ஆம் நாளன்று, கணிசமான எண்ணிக்கையில், குழுமியிருந்த மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள் முன்னிலையில், கில்பர்ட் அப்பாட் என்ற அறுவை சிகிச்சை நோயாளிக்கு மோர்ட்டோன் ஈதரை மயக்க மருந்தாகக் கொடுத்தார். பின்னர், அப்பாட்டின் கழுத்திலிருந்து ஒரு கழலையை டாக்டர் லாரன் அறுவை சிகிச்சை செய்து அகற்றினார். மோர்ட்டோனின் மயக்க மருந்து முறை முழு அளவில் செயல் விளைவுடையதாக இருந்தது. அவருடைய செயல் விளக்கம் மகத்தான வெற்றியாக அமைந்தது. இது பற்றிய பல செய்தியிதழ்கள் விரிவாகச் செய்தி வெளியிட்டன. இதன் பின்பு, அடுத்த சில ஆண்டுகளிலேயே அறுவை சிகிச்சைகளில் மயக்க மருந்தினைப் பயன் படுத்தும் முறை மிகப் பரவலாகக் கையாளப்படலாயிற்று.
அப்பாட்டுக்கு அறுவைச் சிகிச்சை நடந்த பல நாட்களுக்குப் பின்பு, மோர்ட்டோனும், ஜேக்சனும், புத்தாக்க உரிமைக்காக (Patent) விண்ணப்பித்தனர். இதே புத்தாக்க உரிமைக்காக வேறு பலரும் போராடினார்கள். மயக்க மருந்து கொடுக்கும் முறையைக் கண்டுபிடித்த பெருமையின் பெரும் பகுதி மோர்ட்டோனையே சாரும் என்ற போதிலும், அவருக்கு அந்த பெருமையை அளிப்பதை பலர் எதிர்த்தனர். அவர்களில் குறிப்பிடத்தகக்கவராக ஜேக்சன் இருந்தார் என்பது வியப்பளிக்கின்றது. எனினும், இந்த எதிர்ப்புகள் ஒதுக்கப்பட்டு, ஒரு மாதத்திற்குப் பின்னர் மோர்ட்டோனுக்கே புத்தாக்க உரிமை வழங்கப்பட்டது. ஆனால், தமது இந்தக் கண்டுபிடிப்புத் தம்மைச் செல்வந்தராக்கும் என்ற மோர்ட்டோனின் நம்பிக்கை நிறைவேறவில்லை. ஈதரை மயக்க மருந்தாகப் பயன்படுத்திய பொரும்பாலான மருத்துவர்களும், மருத்துவமனைகளும் மோர்ட்டோனுக்கு உரிமைத் தொகை (Royalty) கொடுப்பது குறித்து கவலைப்படவேயில்லை. இதற்கென அவர் தொடுத்த வழக்குகளுக்காகவும், முந்துரிமைக்கான போராட்டத்திற்காகவும் அவர் செய்த செலவுகள் அவரது கண்டுபிடிப்புக்காக அவருக்கு கிடைத்த பணத் தொகையைவிட அதிகமாக இருந்தன. மனச்சோர்விலும், வறுமையிலும் வாடிய மோர்ட்டோன் 1888 ஆம் ஆண்டில் நியூயார்க் நகரில் காலமானார். அவருக்கு 49 வயது கூட ஆகியிருக்கவில்லை.
பல் மருத்துவத்திலும், பெரிய அறுவைச் சிகிச்சையிலும் உணர்ச்சியின்மையின் பயன்பாடு ஐயத்திற்கிடமின்றி தெளிவாகியுள்ளது. எனவே, மோர்ட்டோனின் ஒட்டு மொத்தமான முக்கியத்துவத்தை மதிப்பிடும் போது, மயக்க மருந்து பயன்படுத்தும் முறையைப் புகுத்திய பெருமையை எந்த அளவுக்கு மோர்ட்டோனுக்கும், அதில் தொடர்புடைய வேறு பல்வேறு நபர்களுக்குமிடையே பகிர்ந்தளிப்பது என்பதைத் தீர்மானிப்பதுதான் முக்கியமாக - கடினமாக இருக்கிறது. மற்ற நபர்களில் ஹோரேஸ் வேல்ஸ், சார்லஸ் ஜேக்ஸ், ஜார்ஜியா மற்றும் கிராஃபோர்டு டபிள்யூ. லாங் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். உண்மையைக் கருதும் போது, அந்த மற்றவர்களில் எவருடைய பணியையும் விட மோர்ட்டோனின் பணி மிகமிக முக்கியத்துவம் வாய்ந்தது என எனக்குத் தோன்றுகிறது. அதன்படியே வரிசை முறையில் அவருக்கு இடமளித்திருக்கிறேன்.
மோர்ட்டோன் ஈதரை வெற்றிகரமாகப் பயன்படுத்தத் தொடங்குவதற்கு ஈராண்டுகளுக்கு முன்னரே ஹோரேஸ் வேல்ஸ் தமது பல் மருத்துவச் சிகிச்சையில் மயக்க மருந்தினைப் பயன்படுத்தத் தொடங்கியிருந்தார் என்பது உண்மைதான். ஆனால், வேல்ஸ் மயக்க மருந்தாகப் பயன்படுத்திய நைட்ரஸ் ஆக்சைடு அறுவை சிகிச்சையில் புரட்சிகரமான மாறுதலை ஏற்படுத்தி விடவில்லை. ஏற்படுத்தியிருக்கவும் முடியாது. நைட்ரஸ் ஆக்சைடில் சில விரும்பத்தக்க குணயியல்புகள் இருந்தபோதிலும், பெரிய அறுவை சிகிச்சையில் மயக்க மருந்தாகத் தனியாகப் பயன்படுத்தக்கூடிய அளவுக்கு அது ஆற்றல் வாய்ந்ததாக இருக்கவில்லை. (இன்று அது வேறு சில நேர்த்தியான மருந்துகளோடு இணைவாகவும், சில பல்மருத்துவப் பணிகளிலும் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது). மாறாக, ஈதர் அற்புதச் செய்விளைவுடைய ஓர் ஆற்றல் வாய்ந்த வேதிப் பொருளாகும். அதைப் பயன்படுத்தியதால், அறுவைச் சிகிச்சையில் புரட்சிகரமான திருப்பம் உண்டாயிற்று. இன்று பெரும்பாலான நேர்வுகளில், ஈதரை விட அதிக ஏற்புடைய மருந்து அல்லது கூட்டு மருந்துகள் இருக்கக் கூடும். ஆயினும், ஈதர் பயன்பாட்டுக்கு வந்த பின்பு ஏறத்தாழ ஒரு நூற்றாண்டு காலத்திற்கு ஈதர்தான் பெரும்பாலும் மயக்க மருந்தாகப் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. ஈதர் எளிதில் தீப்பற்றக் கூடியது. இதைப் பயன்படுத்துவதால் ஏற்படும் பின்விளைவாகக் குமட்டல் உணர்வு இருந்து கொண்டே இருக்கும். இந்தப் பாதகங்கள் இருந்த போதிலும், இதுகாறும் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மயக்க மருந்துகளில் இது ஒன்றுதான் மிகவும் ஆற்றல் வாய்ந்த தனியொரு மயக்க மருந்து என்பதை மறுப்பதற்கில்லை. இதை எடுத்துச் செல்வதும் உட்செலுத்துவதும் மிக எளிது. அனைத்திற்கும் மேலாக, இது மிகவும் பாதுகாப்பானதாகவும், அதே சமயம் ஆற்றல் வாய்ந்ததாகவும் அமைந்துள்ளது.
கிராஃபோர்டு டபிள்யூ. லாங் (1815 - 1878) என்ற ஜார்ஜிய மருத்துவர், மோர்ட்டோன் ஈதருக்கு செயல்விளக்கம் செய்து காட்டியதற்கு 4 ஆண்டுகளுக்கு முன்னர், 1842-ஆம் ஆண்டில், அறுவைச் சிகிச்சையில் ஈதரைப் பயன் படுத்தினார். ஆனால், அறுவைச் சிகிச்சையில் ஈதரின் பயன் பாட்டினை மோர்ட்டோன் தமது செயல் விளக்கத்தின் மூலம் மருத்துவ உலகுக்கு எடுத்துக் காட்டியதற்கு நெடுங்காலத்திற்குப் பின்னரே (1849) அவர் தமது முடிவுகளை வெளியிட்டார். இதன் விளைவாக, லாங்கின் பணி ஒரு சில நோயாளிகளுக்கு மட்டுமே பயன்பட்டது. ஆனால் மோர்ட்டோனின் பணி உலகில் பெரும்பகுதியினருக்குப் பயனாகியது.
ஈதரைப் பயன்படுத்திப் பார்க்கும்படி மோர்ட்டோனுக்கு ஆலோசனை கூறியவர் சார்லஸ் ஜேக்சன். அவர் நோயாளிகளுக்கு ஈதரை எவ்வாறு உட்செலுத்த வேண்டும் என்பது குறித்துப் பயனுள்ள ஆலோசனைகளை மோர்ட்டோனுக்குக் கூறினார். எனினும், அவரே தமது மருத்துவச் சிகிச்சைகளில் ஈதரைக் குறிப்பிடத்தக்க அளவில் பயன்படுத்தவில்லை. மோர்ட்டோன் வெற்றிகரமாகச் செயல் விளக்கம் செய்து காட்டியதற்கு முன்னர், ஈதரின் பயன்பாடு குறித்துத் தாம் அறிந்திருந்த தகவல்களை மருத்துவ உலகுக்குத் தெரிவிக்க ஜேக்சன் எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை. தம்முடைய நற்பெயருக்கு அவமதிப்பு ஏற்படலாம் என அறிந்திருந்தும், அதைப் பொருட்படுத்தாமல் துணிவோடு பொது மக்கள் அறியும்படி செயல் விளக்கம் செய்து காட்டியவர் மோர்ட்டோனேயன்றி கில்பர்ட் அப்பாட் இறந்து போயிருந்ததால், இந்தச் செயல் விளக்கத்திற்குச் சார்லஸ் ஜேக்சன் பொறுப்பேற்றிருப்பாரா என்பது ஐயமே.
இந்தப் பட்டியலில் வில்லியம் மோர்ட்டோனுக்கு உரிய இடம் எது. இங்கு, மோர்ட்டோனை ஜோசஃப் லிஸ்டருடன் ஒப்பிட்டுப் பார்ப்பது மிகவும் பொருத்தமாக இருக்கும். இருவரும் மருத்துவ அறிஞர்கள்; இருவரும் அறுவைச் சிகிச்சையினையும் மகப்பேற்றையும் எளிதாக்கும் புதிய புரட்சிகரமான முறைகளைக் கண்டுபிடித்தார்கள். இருவரின் கண்டுபிடிப்புகளும், ஐயத்திற்கிடமின்றி மிகப் பெரும் விளைவை உண்டு பண்ணின என்பதில் ஐயமில்லை. இருவருமே, தத்தம் முயற்சிகளால் வெளியிட்டுப் பிரபலப் படுத்திய உத்தியை அல்லது முறையை முதலில் பயன்படுத்தியவர்கள் அல்லர். இருவருமே தங்களுடைய புத்தமைப்புக்கான பெருமையை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டியவர்களாக இருந்தனர். மோர்ட்டோனுக்கு லிஸ்டரைவிடச் சற்று உயர்ந்த இடத்தை நான் அளித்திருக்கிறேன் என்றால் அதற்கு முதன்மையான காரணம் நீண்ட கால நோக்கில், நோய் நுண்மத் தடை அறுவைச் சிகிச்சையை (Antiseptics Surgery) புகுத்தியதைவிட, மயக்க மருந்தைப் புகுத்தியது அதிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு முன்னேற்றம் என நான் கருதுவதேயாகும். அறுவைச் சிகிச்சையின் போது, நோய் நுண்மத் தடை மருந்துகளுக்குப் பதிலாக நவீன நோய் எதிர்ப்பு மருந்துகளை (Antiseptic) ஓரளவுக்குப் பயன் படுத்த முடியும். ஆனால், மயக்க மருந்து இல்லாமல், நுட்பமான அல்லது நீண்ட அறுவைச் சிகிச்சைகளைச் செய்வது இயலாது. சிறிய அறுவைச் சிகிச்சைகள் இன்றியமையாதவையாக இருந்தாலன்றி, மயக்க மருந்தில்லாமல் செய்யப்படுவதில்லை.
1946 - ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 16 ஆம் நாள் காலையில் மயக்க மருந்தின் நடைமுறைப் பயன்பாட்டினை மோர்ட்டோன் செயல் விளக்கம் செய்து காட்டியது மனித வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. மோர்ட்டோனின் சாதனையை அவரது நினைவுச் சின்னத்திலுள்ள கல்வெட்டு வாசகத்தைப் போல் சிறபப்பாகச் சுருங்க உரைப்பது வேறொன்றும் இருக்க முடியாது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 81 | 82 | 83 | 84 | 85 | ... | 109 | 110 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வில்லியம் டி.ஜி. மோர்ட்டோன் (கி.பி.1819 - கி.பி.1868), மயக்க, மோர்ட்டோன், அறுவைச், செயல், செய்து, தமது, அறுவை, சிகிச்சையில், அவர், மருந்து, விளக்கம், வேல்ஸ், மருத்துவ, ஈதரை, வேறு, மோர்ட்டோனின், ஜேக்சன், அவருக்கு, ஈதர், என்பது, ஆற்றல், நைட்ரஸ், சிகிச்சை, சார்லஸ், வாய்ந்த, முறையை, மருந்தாகப், உணர்ச்சி, கூறினார், மோர்ட்டோனுக்கு, பின்னர், நோய், போது, ஆண்டில், பயன், பின்பு, அந்த, மிகவும், காட்டியதற்கு, பல்லைப், புத்தாக்க, டாக்டர், புரட்சிகரமான, ஈதரைப், பெருமையை, அல்லது, முன்னிலையில், முறை, மருத்துவர், அவரது, உண்டு, மருந்தினைப், எனினும், மிகப், என்பதை, முறையில், முன்னர், அதைப், முதலில், பயன்படுத்திப், இதற்கு, நீக்கும், ஆண்டு, Life Notes of Historians - வரலாறு படைத்தோரின் வாழ்க்கை குறிப்புகள் - General Knowledge - GK Data Warehouse - பொது அறிவு - பொது அறிவுக் களஞ்சியம்