சிலப்பதிகாரம் - இரண்டாம் நூற்றாண்டு
பக்தி இலக்கிய முன்னோடி
அடிகளின் ஆய்ச்சியர் குரவையும், வேட்டுவ வரியும், குன்றக் குரவையும் பல்லவர் காலத்துப் பக்திப் பாடலாசிரியர்களாம் நாயன்மார்கட்கும் ஆழ்வார்கட்கும் வழிகாட்டியாய் அமைகின்றன. பின்வரும் பாடல்களைக் காண்க.
மூவுலகும் ஈரடியால் முறைநிரம்பா வகைமுடியத் தாவிய சேவடி சேப்பத் தம்பியொடும் தான் போந்து சோவரணும் போர்மடியத் தொல்லிலங்கை கட்டழித்த சேவகன் சீர் கேளாத செவியென்ன செவியே திருமால்சீர் கேளாத செவியென்ன செவியே! (மதுரைக்காண்டம், ஆய்ச்சியர் குரவை) |
இது திருமால் துதியாகும்.
அணிமுகங்கள் ஓராறும் ஈராறு கையும் இணையின்றித் தானுடையான் ஏந்திய வேலன்றே பிணிமுகம் மேற் கொண்டு அவுணர் பீடு அழியும் வண்ணம் அணிவிசும்பின் கோன் ஏத்த மாறட்ட வெள்வேலே (மதுரைக்காண்டம், குன்றக் குரவை) |
இது முருகப் பெருமான் புகழ்ச்சியாகும்.
பத்தினியின் பெருமை
பெண்ணின் பெருமை பேச வந்த காப்பியம் சிலப்பதிகாரமாகும். மதுரை மாநகரைக் காவல் செய்த மதுராபதி தெய்வம் கண்ணகியின் முன் தோன்றுவதற்கு அஞ்சுகிறது. பின்பக்கமாக நின்று பேசுகிறது. தீக்கடவுள் அவள் ஏவல் கேட்கின்றது. தேவர்கள் விண்ணூர்தியில் வந்து கண்ணகியை அழைத்துச் செல்கின்றனர். இப்படித் தெய்வங்கட்குத் தெய்வமாகக் கண்ணகியைக் காட்டுகிறார் அடிகள். விண்ணரசு போற்றும் தெய்வத்தை மண்ணரசர் போற்றுவதில் உயர்வில்லையே! சேரன் எடுத்த பத்தினிக் கோட்டத்திற்குக் கொங்கரும், ஈழ மன்னரும் வருகின்றனர்; மாளுவ நாட்டரசன் வருகின்றான். இப்படி, பத்தினி வழிபாட்டை முதன் முதலாக அறிமுகம் செய்கிறார் இளங்கோவடிகள்.
வானம் பொய்யாது வளம்பிழைப்பு அறியாது நீள்நில வேந்தர் கொற்றம் சிதையாது பத்தினிப் பெண்டிர் இருந்தநாடு. (மதுரைக்காண்டம், அடைக்கலக்காதை, வரிகள்: 145 -147) |
என்பது அடிகள் வாக்கு.
கற்புக்கடம் பூண்ட இத்தெய்வம் அல்லது பொற்புடைத் தெய்வம் யாம் கண்டிலமால் (மதுரைக்காண்டம், அடைக்கலக்காதை, வரிகள்: 143 -144) |
என்று கண்ணகியை ஒரு முழுமுதல் தெய்வமாகத் துறவியான கவுந்தியடிகளைச் சொல்ல வைத்துள்ளார் அடிகள்.
முத்தமிழ்க் காப்பியம்
சிலப்பதிகாரத்திற்குப் பல சிறப்புகள் உண்டு. அவற்றுள் ஒன்று அது முத்தமிழ்க் காப்பியம் என்பது. செஞ்சொற்களால், கற்பனை சிறக்கப் பாடப்பட்ட இயற்றமிழ்க் காப்பியத்தில் முத்தமிழின் சிறந்த கூறுகளான இசைத்தமிழ்க் கூறுகளும் நாடகத்தமிழ்க் கூறுகளும் செறிந்து கிடக்கின்றன.
பண்டையத் தமிழக மக்கள் நாட்டுப்புறங்களில் பாடியும், ஆடியும் களித்தனர். அக்களிப்பினை நேரில் கண்ட அடிகள் அவர்தம் ஆடலுக்கும், பாடலுக்கும் முதன்முறையாக இலக்கிய வடிவம் தந்தார். அவைகளே கானல் வரியும், வேட்டுவ வரியும், ஆய்ச்சியர் குரவையும், அம்மானையும், கந்துக வரியும், ஊசல் வரியும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிலப்பதிகாரம் - Silappatikaram - இரண்டாம் நூற்றாண்டு - 2nd Century - தமிழ் இலக்கிய நூல்கள் - Tamil Literatures List - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - இலக்கிய, வரியும், சிலப்பதிகாரம், அடிகள், இரண்டாம், மதுரைக்காண்டம், நூற்றாண்டு, ஆய்ச்சியர், குரவையும், காப்பியம், தகவல்கள், தமிழ்நாட்டுத், தமிழ், நூல்கள், தெய்வம், கூறுகளும், பெருமை, | , கண்ணகியை, அடைக்கலக்காதை, என்பது, முத்தமிழ்க், குரவை, வரிகள், வேட்டுவ, literatures, tamil, century, silappatikaram, list, tamilnadu, செவியென்ன, கேளாத, குன்றக், information, செவியே