சிலப்பதிகாரம் - இரண்டாம் நூற்றாண்டு
தமிழில் வழங்கும் ஐம்பெருங்காப்பியங்களில் இது முதலாவதாக வைக்கப்பட்டுள்ளது. இக்காப்பியத்தின் தலைவியான கண்ணகியின் காலில் அணியப்பெற்ற சிலம்பே கதையின் நிகழ்விற்கு அடிப்படையானமையால் அவ்வணியின் பெயராலேயே காப்பியம் அழைக்கப்பட்டது. பூம்புகாரில் பெரும் புகழ்மிக்க வணிகர் குடியில் தோன்றிய கோவலனும், கண்ணகியும் இக்கதையில் தலைவனும் தலைவியுமாக அமைகின்றனர். அரசனால் தலைக்கோல் பட்டம் பெற்ற மாதவி இரண்டாம் தலைவி என்றும் நிலை பெற்றுள்ளாள். இவர்களைத் தவிர, பாண்டிய மன்னன், சேர மன்னன், கவுந்தியடிகள், ஆயர்குலமகள் மாதரி, அவள் மகள் ஐயை, கண்ணகியின் தோழி தேவந்தி, மாடலமறையோன், அரண்மனைப் பொற்கொல்லன் ஆகியோர் இதில் பாத்திரங்களாக அமைகின்றனர்.
நூலாசிரியர்
இளங்கோவடிகள் |
செங்குட்டுவன் கி.பி. இரண்டாம் நூற்றாண்டினன். எனவே, இளங்கோவடிகள் அக்காலத்தவரே என்பர். வரந்தரு காதையில் பத்தினி விழாவிற்கு வந்தவர்களுள் கடல்சூழ் இலங்கைக் கயவாகுவும் ஒருவனாக இடம் பெறுகிறான். இவன் காலம் கி.பி. 2 ஆம் நூற்றாண்டு. எனவே, அடிகளும் அக்காலத்தவரே என்பர். ஆயினும் ஆராய்ச்சியாளர்கள் சிலர், இளங்கோவடிகள் கி.பி.5 அல்லது 6ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்பர்.
காப்பியத்தின் அமைப்பு
இக்காப்பியம் (1) புகார்க் காண்டம் (2) மதுரைக் காண்டம் (3) வஞ்சிக் காண்டம் என்று மூன்று பகுதிகளைக் கொண்டது. ஒவ்வொரு காண்டமும் பல உட்பிரிவுகள் கொண்டது. பெரும்பான்மையான பிரிவுகள் காதை என்ற பெயரும், சிறுபான்மையானவை பாடல், வரி, குரவை என்றும் பெயர் பெறுகின்றன. உரைப்பாட்டுமடை, உரைபெறு கட்டுரை என்ற உறுப்புக்களும், சில வெண்பாக்களும் இதனுள் உண்டு.
புகார்க் காண்டத்தில் பத்தும், மதுரைக் காண்டத்தில் பதின்மூன்றும், வஞ்சிக் காண்டத்தில் ஏழும் என உட்பிரிவுகள் அமைந்துள்ளன. நூலின் முகப்பில் பதிகம் என்ற உறுப்பும் உள்ளது. இது பின்னால் சேர்க்கப்பட்டது என்பர். இது சிலப்பதிகார நிகழ்ச்சிகளைத் தொகுத்துச் சொல்கிறது. இக்காப்பியம் மூன்று அடிப்படைக் கருத்துக்களைக் கூறுகிறது. அவையாவன:
1) அரசியல் பிழைத்தார்க்கு அறம் கூற்றாகும்.
2) புகழ்மிக்க பத்தினியை உலகம் போற்றும்
3) ஊழ்வினை தவறாது வந்து தன் பலனை அடையச் செய்யும்
என்பனவாகும். இக்கதையை, இதன் ஆசிரியரான இளங்கோவடிகள் சொல்ல, அதனை மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் கேட்டார் என்கிறது சிலப்பதிகாரம்.
கதைச் சுருக்கம்
கோவலனும் கண்ணகியும் காவிரிப்பூம்பட்டினத்தில் புகழ் ஒங்கிய இரு வணிகர்களின் மக்களாகத் தோன்றியோர். இருவரும் மணந்து கொண்டு இனிதே இல்லறம் நடத்திவரும் காலத்தில், அந்நகரத்தில் கணிகையர் குடும்பத்தில் பிறந்த கலையரசி மாதவியின் அழகால் கவரப்பட்ட கோவலன் தன் மனைவியைத் தனியே விடுத்து மாதவி இல்லத்திலேயே வாழ்ந்தான். ஒரு நாள் கடற்கரை மணல் வெளியில் இருவரும் அமர்ந்து யாழ் வாசித்துப் பாடும்போது கோவலனுக்கு மாதவி மீது ஐயம் தோன்றிற்று. அவன் தன் வீடு நோக்கிச் சென்றான்; தன் குறைகளை வெளிப்படையாகக் கண்ணகியிடம் சொல்லி வருந்தினான்; தன் செல்வம் குறைவுற்றது பற்றிப் புலம்பினான்; இழந்த பொருளை மீட்க மதுரைக்குச் செல்ல விரும்பினான்.
1 | 2 | 3 | 4 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிலப்பதிகாரம் - Silappatikaram - இரண்டாம் நூற்றாண்டு - 2nd Century - தமிழ் இலக்கிய நூல்கள் - Tamil Literatures List - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - இரண்டாம், என்றும், சிலப்பதிகாரம், இளங்கோவடிகள், நூற்றாண்டு, என்பர், இவர், மாதவி, புகழ்மிக்க, தகவல்கள், காண்டம், மதுரைக், உண்டு, தமிழ், செங்குட்டுவன், இலக்கிய, நூல்கள், தமிழ்நாட்டுத், காண்டத்தில், சொல்கிறது, அக்காலத்தவரே, வஞ்சிக், உட்பிரிவுகள், இருவரும், | , கொண்டது, மூன்று, புகார்க், வருந்தினான், இக்காப்பியம், மன்னன், list, tamilnadu, literatures, tamil, silappatikaram, century, information, கண்ணகியின், ஆயினும், சேரமான், அமைகின்றனர், கண்ணகியும், கோவலனும், காதையில்