மியன்மாரில் தமிழர் - தமிழர் வாழும் நாடுகள்
இருப்பிடம்
மியன்மாரின் பழைய பெயர் பர்மா 6,76552 சதுர மைல்கள் கொண்டது. பர்மா நாட்டின் வடமேற்கு எல்லையில் இந்தியாவும், பங்களாதேசும் இருக்கின்றன. வடகிழக்கு எல்லையில் சீனாவும் லாவோசும் இருக்கின்றன. தென் கிழக்கு எல்லையில் தாய்லாந்து இருக்கிறது. பர்மா ஆங்கில ஆட்சியில் 1936 வரை இந்தியாவுடன் ஒரு மாநிலமாக இருந்தது. அரிசி, தேக்கு, நவரத்தினம், முத்து போன்றவை அதன் பாரம்பரியச் சொத்து.
தமிழர் குடியேறிய வரலாறு :
கிறிஸ்து தோன்றுவதற்கு முன்பே தமிழகத்திற்கும் பர்மாவுக்கும் தொடர்பு இருந்து வந்தது. அத்தொடர்பு வணிகத்தை நோக்கமாகக் கொண்டது. பர்மாவை-பட்டினப்பாலை 'காழகம்' என்கிறது. 'காழகத்து ஆக்கமும்' என்ற வரிகள் இதனை உணர்த்துகின்றன. 'அருமணதேயம்' என்று சிலப்பதிகாரம் கூறுகிறது.
கி.மு. 200 முதல் 300 வரை காஞ்சிபுரத்திலிருந்து புத்த சமயக் கருத்துக்களுடன் பல்லவ எழுத்து, நாகரிகம், பண்பாடு மூலம் தமிழகத் தொடர்பும், நட்பும் ஏற்பட்டன. 'தட்டாம்' எனப்படும் சுவர்ண பூமிக்குப் புத்த துறவிகளால் அவை கொணரப்பட்டன எனப் பர்மியப் பண்பாட்டு வரலாறு என்ற நூல் கூறுகிறது என ந.வீரப்பனார் தெரிவிக்கிறார். காஞ்சிபுரத்தைப் பற்றியும், புத்த சமய அறிஞர் தர்மபாலரைப் பற்றியும் தலைங் (Talaing Records) ஆவணத்தில் குறிப்புள்ளது. பல்லவரை அடுத்து, சோழர் காலத்தில் இராஜேந்திர சோழனுடைய கடாரப் படையெடுப்பு பற்றி அதிகளவு செய்திகள் கிடைக்கின்றன.
இராஜேந்திரச் சோழனின் கடாரம் படையெடுப்பு கி.பி. 1025 இல் நிகழ்ந்ததாக உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. இரண்டுமுறை கடல் வழியாகவும், ஒரு முறை நிலவழி அதாவது வங்காளம் வழியாகவும் பர்மாவின் மீது இராஜேந்திரச் சோழன் படையெடுத்தான் என்று ஆர்.சி. மசூம்தார் தெரிவிக்கிறார். பெகுவிற்கு அருகே இரண்டு கருங்கல் தூண்கள் கண்டு பிடிக்கப்பட்டிருக்கின்றன. அதில் "திருமன்னி வரை இரு நில மடந்தையும்" என்ற சிதைந்த வரி உள்ளது. இராஜேந்திரனின் வெற்றியைப் பறை சாற்றும் நோக்கத்துடன் இந்த வெற்றித் தூண்களை (ஜெயஸ்தம்பம்) அமைத்துள்ளான் என பர்மிய தொல்லியளாளரான டெசெயங்கோ கூறியுள்ளார்.
காண்க: (Archalogical Report on Burma 1908 Para 25) இவருடைய கருத்தை உறுதிப்படுத்துவது போல மற்றொரு செய்தி: பர்மாவில் உள்ள பப்பாளத்தை இராஜேந்திரன் கைப்பற்றினான். மற்றொரு கல்வெட்டு ஆய்வாளரான வெங்கைய்யா அவர்களின் ஆராய்ச்சிப்படி, பர்மாவில் உள்ள துறைமுக நகரம் பப்பாளம், இந்நகரைப் பற்றி மகாவம்சமும் குறிப்பிடுகிற படியால் ஒரே இடத்தில் இருப்பதாலும் இராஜேந்திரனுடைய படையெடுப்பு பற்றிக் கல்வெட்டு குறிப்பிடுகிறவை மெய்தான் என்றாகிறது. மேலும் கி.பி.1084-1112 ஆம் ஆண்டுகளில் வாழ்ந்த சான்சீத்தர் என்ற பர்மிய மன்னர் சோழப் பேரரசனோடு உறவு கொண்டிருந்தார் என்கிற கல்வெட்டும் கிடைத்துள்ளது.
தமிழ்க் கல்வெட்டு :
பர்மாவில் பாகாங்கு என்னும் இடத்தில், ஒரு தமிழ்க் கல்வெட்டு கிடைத்து இருக்கிறது. அக்கல்வெட்டு கி.பி.13-ஆம் நூற்றாண்டில் வழங்கிய தமிழ் எழுத்துக்களில் பொறிக்கப்பட்டிருக்கிறது. (சேரமான்) குலசேகர ஆழ்வாரின் 'முகுந்தமாலா' என்ற வடமொழி நூலில் உள்ள ஆறாம் சுலோகத்தோடு தொடங்கி, கீழ் காணும் தமிழ்ப் பகுதியோடு முடிகிறது.
"சுவஸ்திஸ்ரீ புக்கம் ஆன அரிவர்த்தனப்
புரத்து நானாதேசி விண்ணகர்
ஆழ்வார் கோயில் திருமண்டபமும்
திருக்கதவும் கிட்டேன், மலைமண்டலம்
துய மகோதையர் பட்டினத்து
ஈராயிரான சிறியனான சீ குலசேகர
நம்பியேன்"
(Epigraphia Indica. Vol. 1-7; P.197) என்பது கல்வெட்டு வாசகம். புக்கம்-என்ற அரிமர்த்தனப் புரத்தில் 'நானாதேசி'கனாகிய வணிகர்ன் குலசேகர நம்பி, விண்ணகர் ஆழ்வார் கோயில் கட்டினான் என்றும், அவன் சேர நாட்டிலுள்ள மகோதையர் பட்டினத்தைச் சேர்ந்தவன் என்றும் தெரியவருகிறது. சைவ, வைணவ பக்தி இயக்கத்தை வெளிநாடுகளுக்கும் தமிழர்கள் கொண்டு சென்றதை இதன் மூலம் உணர முடிகிறது.
1 | 2 | 3 | 4 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மியன்மாரில் தமிழர் - Tamils in Myanmar - தமிழர் வாழும் நாடுகள் - Tamil Persons Living Countries - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - தமிழர், கல்வெட்டு, மியன்மாரில், வாழும், நாடுகள், எல்லையில், புத்த, உள்ள, பர்மா, குலசேகர, தகவல்கள், பர்மாவில், படையெடுப்பு, தமிழ்நாட்டுத், ", பர்மிய, மற்றொரு, இடத்தில், முடிகிறது, மகோதையர், என்றும், | , கோயில், ஆழ்வார், வழியாகவும், புக்கம், விண்ணகர், தமிழ்க், மூலம், living, countries, tamilnadu, persons, tamil, tamils, myanmar, information, கொண்டது, தெரிவிக்கிறார், பற்றியும், பற்றி, கூறுகிறது, வரலாறு, இருக்கின்றன, இருக்கிறது, இராஜேந்திரச்