மியன்மாரில் தமிழர் - தமிழர் வாழும் நாடுகள்
உணவு :
நெல் சோறே பெரும் உணவு. இட்லி, புட்டு, தோசை வடை எல்லாம் தமிழகம் போலவே இங்கும் உண்டு.
தகவல் தொடர்பு சாதனங்கள் :
1962-ஆம் ஆண்டிற்குப்பிறகு வானொலி, தொலைக்காட்சி போன்றவற்றில் தமிழர்களுக்கு இடம் இல்லை. செய்தித்தாள், புத்தக வெளியீடு மட்டும்தான் தமிழரின் தகவல் தொடர்பு சாதனமாகும். 1936-இல் 'லோகமான்யா' என்ற இதழ் புதன் கிழமை தோறும் வெளிவந்தது. இவ்விதழைப் பவானி நடேன் ஆசிரியராக இருந்து வெளியிட்டிருக்கிறார். 1931க்கு முன் 'இஸ்லாம் அலின்' என்ற ஏட்டை தமிழறிஞர் பா. தாவுத்சா நடத்தியிருக்கிறார். 'சாந்தி' எனும் நாளிதழை எம்.கே. இபுராகிம் நடத்தினார். இவ்வேடு 1952-ஆம் ஆண்டு வரை வெளிவந்தது. பின்னர் இவரே 'தொண்டன்' என்ற நாளேட்டையும் நடத்தினார். இது 40 ஆண்டு காலம் வெளி வந்திருக்கிறது. 1981-இல் இவர் காலமான பின் 'தொண்டன் நினைவு மலர்' 1982-இல் பாதி தமிழிலும், பாதி பர்மிய மொழியிலும் வெளிவந்தது. இவை தவிர சத்திய சோதி, தமிழ் உள்ளம் ஆகிய இதழ்களும் வெளிவந்தன. சாமிநாத சர்மா 'ஜோதி' என்ற இதழை பர்மாவில் நடத்திவிட்டு தமிழகம் திரும்பினார்.
தமிழ் மொழியின் நிலை
பிரஞ்சு குடியேற்ற நாடுகளில் ஏற்பட்டது போல மொழியை இழந்த நிலை இங்கு இல்லை. தமிழகத்துடன் விடாத தொடர்பு இருப்பதே இதற்குக் காரணம். 1877-இல் விக்டோரியா பேரரசிக்குத் தமிழில் வாழ்த்துப்பாவை பாடியவர் இராமசாமிப்புலவர். இரண்டாம் பதிப்பாக அதை 1877-இல் வெளியிட்டிருக்கிறார்.
பர்மா-ஆங்கிலம்-தமிழ்-இந்தி அகராதியை சோசப் என்பவர் எழுதி வெளியிட்டிருக்கிறார். எம்.என். நாகரத்தினம் 'அறங்காவலன்' (1983) ஏட்டில் புத்தரின் 'தம்மபத'த்தை மொழி பெயர்த்து வெளியிட்டு வருகிறார். பாலிமொழியிலிருக்கும் சுலோகங்களின் விரிவுரையும் வெளிவருகிறது. இவ்வேடு அகிலபர்மா இந்து மத்திய சபையால் வெளியிடப்படுகிறது.
கம்பை நாட்டுக் கோட்டைச் செட்டியார்கள் நடத்தும் கல்வி வாரியம் 1964-இல் திருக்குறளை பர்மிய மொழியில் வெளியிட்டது. இதைப் பர்மிய அறிஞர் ஊர்மியோ தாண்ட் ஆங்கிலத்திலிருந்து மொழி பெயர்த்தார். தட்டான் திருக்குறள் இயக்கம், திருக்குறளைப் பரப்புகிறது. தட்டானில் வள்ளுவர் கோட்டம் பெரிய அளவில் உருவாகி வருகிறது.
1908-இல் 'மானிட மர்ம சாஸ்திரம்' என்ற ஆயிரம் பக்க நூல், அறிஞர் எஸ். சாமிவேல் அவர்களால் எழுதப்பட்டு ரங்கூன் தமிழ் அச்சகத்தில் பதிப்பிக்கப்பட்டது. பத்தாண்டுக்குப் பின் இரண்டாம் பதிப்பு கண்டது. மதுரைப்பிள்ளை, இராமச்சந்திர புலவர் போன்ற பெரும் பண்டிதர்கள் இங்கு வாழ்ந்தனர் என்கிறார் வீரப்பனார். இன்றுள்ள எழுத்தாளர்களில் குறிப்பிட்டுச் சொல்லக் கூடியவர்: பூ.செ.புதியணன் ஆவார். இவரை ஆசிரியராகக் கொண்ட இலக்கிய ஏடு-காலாண்டிதழாக 1981-முதல் வெளிவருகிறது. 'தாயும் தாய்மையும்' என்ற நூலை 1981-இல் இவர் வெளியிட்டார். இது பர்மிய ஆசிரியர் சிட்சன்வின் எழுதிய நூலின் தமிழாக்கமாகும். மேலும் தமிழ்-பர்மிய அகராதியை தொகுத்து வருகிறார். அண்ணா நூல் வெளியீட்ட கத்தை நடத்தி வருகிறார்.
கல்வி
1898-99-ஆம் ஆண்டுகளில் இந்தியர்களுக்கு என்று 45 பள்ளிகள் இருந்தன. பர்மா விடுதலை பெற்றபின்பு பர்மிய மொழி ஆட்சி மொழியானதால் தமிழ்க் கல்வி புறக்கணிக்கப்பட்டது. பர்மிய மொழியும், துணை மொழியாக ஆங்கிலமுமே கற்று கொடுக்கப்படுகின்றன. அயல் நாட்டினரின் கல்வி, பண்பாடு நடவடிக்கைகளுக்கு 1972-ஆம் ஆண்டு தடையாணை விதிக்கப் பட்டது. சர்வாதிகாரி நிவினின் தேசியமயக் கொள்கையால் தமிழ்க் கல்வி பறிபோனது. பர்மியப் பள்ளிகளில் தமிழ் வகுப்பு இல்லை என்றாலும், சில தமிழ்க் கோயில்களில் மாலை, இரவு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. பேகான் கோயிலிலும், கமாயூட் மாரியம்மன் கோயில், மினிக் கோன் சுப்பிரமணியர் ஆலயம் முதலியவை தமிழ்ப்பணி ஆற்றுகின்றன. கோயில்களும், கழகங்களும் ஞாயிறுதோறும் தமிழைக் கற்பிக்கின்றன. இக் கோயில் பள்ளிகளில் பர்மாவில் வெளியிடப்படும் பாலர் நூல்கள் பயன்படுத்தப்படுகின்றன. பி. சுப்பிரமணியன், மா. சந்திரன் என்பவர்கள் 'அண்ணா அரிச்சுவடி' எனும் பாலர் பாடநூலை 1981 இல் வெளியிட்டனர். 'கலைமகள் அரிச்சுவடி நூலை' பாலர் பள்ளிக்காக வேறுறொருவர் வெளியிட்டுள்ளார். ஒளவையார் ஆத்திச்சூடி வெளியிட்ட தமிழ்ப்புலவர் எம்.என். நாகரத்தினம் பாலர் பாடம் என்ற முதல் வகுப்பு, 2-ஆம் வகுப்பு நூல்களை 1980 முதல் வெளியிட்டு வருகிறார். வடபர்மாவில் தமிழ்ப் படிப்பு குறைந்து வருகிறது. தமிழ்ப் படிப்பிக்க எல்லா கோயில்களிலும் கட்டாயமாக்க பர்மிய இந்துச் சங்கம் முயன்று வருகிறது.
இலக்கியம் :
பர்மிய தமிழர்கள் கவிதையில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். சிலர் கதைகளையும் எழுதி வருகின்றனர். அவர்களில் குறிப்பிடத்தக்கோர்: கலைதாசன், திலகம், வசந்தி, பாணபட்டன், வாணவளவன், பாரதிநேசன், ரத்னா, கிருஷ்ணகுரு, தமிழ்மணி, பி.எஸ்.பி அப்துல் வகாப், கே.ஓ.எம் முகம்மது இஸ்மாயில், கார்முகில் கவிராயன், கவி கே.ஏ.மஜீது, ஹாஜி. எஸ்.ஏ.ரகீம், எஸ்.எம்.யூனுஸ், தமிழ்பித்தன், சிறுத்தொண்டன் முதலியோர்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மியன்மாரில் தமிழர் - Tamils in Myanmar - தமிழர் வாழும் நாடுகள் - Tamil Persons Living Countries - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - பர்மிய, தமிழர், தமிழ், கல்வி, வருகிறார், மியன்மாரில், பாலர், வாழும், நாடுகள், வெளிவந்தது, இல்லை, வெளியிட்டிருக்கிறார், மொழி, தொடர்பு, ஆண்டு, வருகிறது, தகவல்கள், வகுப்பு, தமிழ்க், தமிழ்நாட்டுத், வருகின்றனர், தமிழ்ப், | , நாகரத்தினம், அகராதியை, எழுதி, கோயில், வெளியிட்டு, நூல், பள்ளிகளில், வெளிவருகிறது, பர்மா, அறிஞர், அண்ணா, பின், countries, tamilnadu, information, உணவு, living, persons, tamils, myanmar, tamil, பெரும், தமிழகம், பாதி, பர்மாவில், நிலை, இங்கு, இவர், இவ்வேடு, தகவல், எனும், நடத்தினார், இரண்டாம்