மியன்மாரில் தமிழர் - தமிழர் வாழும் நாடுகள்
தமிழக பண்பாட்டுத் தொடர்பு
பல்வர்காலத்தில் தமிழக வைணவம் மியன்மாருக்குச் சென்றது. புத்தம் எப்படி தமிழகத்திலிருந்து சென்றதோ, அதுபோலவே வைதீகமதமும் சென்றது என்பதற்கு அதிகளவு ஆதாரங்கள் மியன்மார் அருங்காட்சிக் கூடத்தில் உள்ளது. இதுபோலவே சமஸ்கிருத மொழியும் பரப்பப்பட்டுள்ளது. அங்குள்ள கட்டடக்கலையின் சாயல் தென்னகத்தை பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளது. புத்தரின் சிற்பத்திலும் நம் கலையின் வீச்சை உணர்கிறோம்.
இரண்டாம் கட்டக் குடியேற்றம் :
1852-ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் பர்மாவைக் கைப்பற்றியதும் இந்தியர்கள் அதிகளவில் இரங்கூனில் குடியேறினர். ஆங்கிலேயர் கீழைப் பர்மாவைக் கைப்பற்றியதும் அங்கும் சென்று குடியேறினர். சென்னை, வங்காளம் மாநிலங்களிலிருந்துதான் பெருமளவில் குடியேறினர். 1874-84 ஆண்டுகளுக்கிடையே 83,197 பேர் சென்றனர். 1850-ஆம் ஆண்டு ஆங்கிலேயர் வருவதற்கு முன்பே மொய்மீன் பகுதியில் குடியேறியவர்கள் தமிழகத்து செட்டியார்கள். 1913-ஆம் ஆண்டு முதல் 1929 வரை 45 இலட்சம் இந்தியர்கள் பர்மாவிற்குச் சென்றனர். இவர்களில் 60 விழுக்காட்டிற்கு மேல் தமிழர்கள் இருந்தனர். இரங்கூன் இந்திய நகரமாகவே மாறிவிட்டது. 1901-ஆம் ஆண்டு இரங்கூனில் மொத்த மக்கள் தொகையில் 48 விழுக்காடு இந்தியர்கள் இருந்துள்ளனர். 1931-இல் 52 விழுக்காடாக இருந்தது. 1937-ஆம் ஆண்டு பர்மா இந்தியாவிலிருந்து பிரிந்தது. மற்றும் இரண்டாம் உலகப் போரின் காரணமாகவும் பர்மாவிற்கு வரும் இந்தியர்களின் எண்ணிக்கை குறையத்தொடங்கியது.
1938-ஆம் ஆண்டு இந்தியர்களுக்கு எதிரான கலகம் தோன்றியது. ஜப்பானியர் படையெடுப்பின் போது 5 இலட்சம் இந்தியர்கள் நாட்டைவிட்டு வெளியேறினர். 1948-ஆம் ஆண்டு பர்மா குடி மக்களாக அங்கீகரித்த தமிழரின் எண்ணிக்கை 10,000 மட்டுமே.
1962-66-ஆம் ஆண்டுகளுக்கு இடையில் எல்லாக் கடைகளும் தேசிய மயமாக்கப்பட்டன. மண்ணின் மைந்தர்களுக்கே வேலை வாய்ப்பு என்ற தேசிய கொள்கை வந்தபோது பாதிப்படைந்த தமிழர் எண்ணிக்கை 62,412 பேர். இவர்கள் தமிழகம் வந்தனர். 1974-ஆம் ஆண்டு சட்டமும் 1982-ஆம் ஆண்டுச் சட்டமும் மண்ணின் மைந்தரல்லாதவர் முக்கிய பதவிகள் வகிக்க முடியாது எனக் கூறிவிட்டது. இதனால் அல்லல் உற்றவர்கள் ஏராளம்.
தமிழரின் இன்றைய நிலை :
இன்று மியன்மாரில் 2,50,000 தமிழர்கள் வாழ்கின்றனர் என்று ஞானசூரியன் தெரிவிக்கிறார். இன்று மியன்மாரில் இருக்கும் 4 இலட்சம் இந்தியர்களில் 2 இலட்சம் பேர் நாடற்றவர்களாக இருக்கின்றனர். ஒரு இலட்சம் பேர் மியன்மார் நாட்டுக் குடிமகன்களாக இருக்கின்றனர். 1 இலட்சம் பேர் அனுமதி சீட்டு பெற்று (Resident permit) வாழ்கின்றனர் என்று 17-9-1988 இந்து நாளிதழ் தெரிவிக்கிறது.
தமிழர்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் இரங்கூன் மத்தியப் பகுதி, கிழக்குப் பகுதி, வடக்கு, மத்திய பகுதிகள். இலாமூடா, தட்டாகலே கம்மாகச்சி, தட்டோன், கம்பை, கலாபஸ்தி, இன்சின், மினிக் கோன், தெ அவுக்கலப்பா, தாம்புவே, தல்லா, கீழந்தான், கம்மாயுட், தீங்காஞ்சூன், சூரியம்-டாம்பின்குயின், மண்டலை, மோல்மின், பாகான். பொதுவாக இந்தியர்கள் இரங்கூன், அராகன், ஐராவதி ஆற்றங்கரையோரம், தென்னாசரீம், மாக்னே முதலிய இடங்களில் வாழ்கின்றனர்.
சமயம் :
மயன்மரில் உள்ள பழைய கோயில்கள் சித்தி விநாயகர் கோயில் (1860); காளிகோயில் (1860); தாட்டானில் உள்ள தண்டபாணிக் கோயில் (1888); இரங்கூன் மகாமாரியம்மன் கோயில் (1903); வரதராச பெருமாள் கோயில் (1927). 1933 வரை 62 ஆலயங்கள் பர்மா செட்டியார்கள் பேராதரவுடன் கட்டப்பட்டன. மோல் மீனில் உள்ள வேல்முருகன் கோயில் மலையில் உள்ளது. இதுவே பர்மாவில் உள்ள பெரிய இந்துக் கோயிலாகும். தமிழ் கத்தோலிக்கர்களுக்கும், முஸ்லீம்களுக்கும் தனித்தனிக் கோயில்களுண்டு. பர்மாவில் தமிழ்க் கத்தோலிக்கர் ஆலய நூற்றாண்டு விழா (1877-1977) சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. 1946-க்குப்பின் கத்தோலிக்க சமயத் தலைவர்களாக தமிழர்களே உள்ளனர்.
அகில பர்மா இந்து மத்திய வாரியத்தின் கீழ் 75 கோயில்களும், கழகங்களும் சேர்ந்துள்ளன. இவ்வாரியம் ஐந்து மாநாடுகளை நடத்தியுள்ளது. வெள்ளி விழா மலரை ஆங்கிலத்தில் 1978-ஆம் ஆண்டு வெளியிட்டது. தமிழர் நடத்தும் விழாக்களில் (தைபூசம்) பர்மியரும் கலந்து கொள்வார்களாம். தீமிதி, தேரோட்டத்தில் ஏராளமாக கலந்து கொள்வார்கள் என்று பலரும் தெரிவிக்கின்றனர். பொங்கலும், தீபாவளியும் கொண்டாடப்படுகின்றன.
உடை :
தமிழர்கள் பெருவாரியாக வாழும் இடங்களில் வேட்டி, துண்டு, சட்டையுடன் காட்சியளிப்பார்கள். மற்ற இடங்களில் பர்மியரைப் போலவே வாழ்கின்றனர்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மியன்மாரில் தமிழர் - Tamils in Myanmar - தமிழர் வாழும் நாடுகள் - Tamil Persons Living Countries - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - தமிழர், ஆண்டு, இலட்சம், மியன்மாரில், வாழும், பேர், இந்தியர்கள், கோயில், வாழ்கின்றனர், நாடுகள், இரங்கூன், பர்மா, உள்ள, தமிழர்கள், குடியேறினர், தமிழ்நாட்டுத், எண்ணிக்கை, தகவல்கள், இடங்களில், தேசிய, தமிழரின், இந்து, பர்மாவில், விழா, கலந்து, | , மத்திய, பகுதி, சட்டமும், இன்று, இருக்கின்றனர், மண்ணின், ஆங்கிலேயர், countries, tamilnadu, information, living, persons, tamils, myanmar, tamil, தமிழக, சென்றது, கைப்பற்றியதும், இரங்கூனில், சென்றனர், பர்மாவைக், இரண்டாம், மியன்மார், உள்ளது, செட்டியார்கள்