பல்லவர்கள்
பல்லவர்களின் தோற்றம்
பல்லவர்களின் தோற்றம் பற்றி பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. மேற்கிந்தியாவை ஆட்சிசெய்த அயலவர்களான பார்த்தியர்களோடு அவர்களை ஒரு சிலர் ஒப்பிடுகின்றனர். தக்காணத்தில் ஆட்சிபுரிந்த வாகாடகர்கள் என்ற பிராமண அரச குலத்தின் ஒரு பிரிவினரே பல்லவர்கள் என்ற கருத்தும் நிலவுகிறது. மணிபல்லவத் தீவின் இளவரசியான நாக கன்னிகைக்கும் சோழ இளவரசன் ஒருவனுக்குப் பிறந்தவர்களின் வழித் தோன்றல்களே பல்லவர்கள் என்பது மூன்றாவது கருத்து. ஆனால் மேற்கூறிய கருத்துக்களை ஆதரிக்கும் சான்றுகள் மிகவும் குறைவு.
எனவே, பல்லவர்கள் தொண்டை மண்டலத்தைச் சேர்ந்தவர்கள் என்ற கருத்தே அறிஞர்களால் பரவலாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது. அசோகரது கல்வெட்டில் காணப்படும் புலிந்தர்களோடும் அவர்களைத் தொடர்புப் படுத்துகின்றனர். தொண்டை மண்டலத்தை சாதவாகனர்கள் கைப்பற்றிய போது பல்லவர்கள் அவர்களிடம் படைத்தலைவர்களாகப் பணியாற்றினர். கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் சாதவாகனர்களின் வீழ்ச்சிக்குப் பின் பல்லவர்கள் கதந்திரம் பெற்றனர். சாதவாகனர்களிடம் பல்லவர்கள் கொண்டிருந்த தொடர்பு காரணமாகவே முதலில் பிராகிருத மொழியிலும், வடமொழியிலும் கல்வெட்டு களை வெளியிட்டனர். பிராமண சமயத்தையும் ஆதரித்தனர் என்று கூறலாம்.
அரசியல் வரலாறு
கி.பி. 250 முதல் 350 வரையிலான முற்காலப் பல்லவர்கள் பிராகிருத மொழியில் பட்டயங்களை வெளியிட்டனர். சிவஸ்கந்தவர்மன், விஜயஸ்கந்தவர்மன் ஆகியோர் இம்மரபில் குறிப்பிடத்தக்கவர்கள். அடுத்ததாக ஆட்சிக்கு வந்த பல்லவர்கள் கி.பி. 350 முதல் 550 வரை ஆட்சி புரிந்தனர். அவர்கள் வடமொழியில் பட்டயங்களை வெளியிட்டனர். அப்பிரிவில் முக்கிய ஆட்சியாளர் விஷ்ணுகோபன். சமுத்திரகுப்தரின் தென்னிந்தியப் படையெடுப்பின் போது அவர் முறியடிக்கப்பட்டார். மூன்றாவதாக ஆட்சிக்கு வந்த பல்லவ மரபினர் கி.பி. 575 முதல் ஒன்பதாம் நூற்றாண்டின் அவர்கள் வீழ்ச்சியடையும் வரை ஆட்சி புரிந்தனர். அவர்கள் வடமொழி, தமிழ் இரண்டு மொழிகளிலும் பட்டயங்களை வெளியிட்டனர். இப்பிரிவின் முதல் ஆட்சியாளர் சிம்ம விஷ்ணு. அவர் களப்பிரர்களை முறியடித்து தொண்டை மண்டலத்தில் பல்லவர் ஆட்சியை நிலையாக ஏற்படுத்தினார். சோழர்களை முறியடித்த அவர் காவிரி நதிக்கரை வரை பல்லவர் ஆட்சியை விரிவு படுத்தினார். அவரைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்தவர்களில் முதலாம் மகேந்திரவர்மன், முதலாம் நரசிம்மவர்மன், இரண்டாம் நரசிம்மவர்மன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
1 | 2 | 3 | 4 | 5 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பல்லவர்கள் , பல்லவர்கள், வரலாறு, தொண்டை, இந்திய, ஆட்சி, வெளியிட்டனர், அவர், பட்டயங்களை, ஆட்சிக்கு, புரிந்தனர், வந்த, ஆட்சியை, நரசிம்மவர்மன், முதலாம், பல்லவர், ஆட்சியாளர், பிராகிருத, நூற்றாண்டில், மண்டலத்தில், இந்தியா, பல்லவர்களின், தோற்றம், ஆகியோர், போது, பிராமண, குறிப்பிடத்தக்கவர்கள்