பல்லவர்கள்
நீண்டகாலம் தொடர்ந்த பல்லவ - சாளுக்கியப் போர்கள் அவரது காலத்தில் தொடங்கின. இரண்டாம் புலிகேசி பல்லவர்களுக்கு எதிராகப் படையெடுத்து அவர்களது அரசின் வடக்குப் பகுதியைக் கைப்பற்றினான். முதலாம் மகேந்திரவர்மன் புள்ளலூர் என்ற இடத்தில் வெற்றிபெற்றதாக பல்லவர் கல்வெட்டு குறிப்பிட்ட போதிலும், இழந்த பகுதியை அவனால் மீட்க முடியவில்லை.
முதலாம் மகேந்திரவர்மன் தொடக்கத்தில் சமண சமயத்தை சேர்ந்தவனாக இருந்தான். அப்பர் என்று அழைக்கப்படும் திருநாவுக்கரசர் என்ற சைவப் பெரியாரால் அவன் சைவ சமயத்திற்கு மாற்றப்பட்டான், திருவதி என்ற இடத்தில் ஒரு சிவாலயத்தையும் கட்டினான். குணபரன், சத்யசந்தன், சேத்தகாரி (கோயில்களை கட்டுபவன்), சித்திரக்காரப் புலி, விசித்திரசித்தன், மத்தவிலாசன் போன்ற விருதுப் பெயர்களை அவன் சூட்டிக் கொண்டான்.
மகேந்திரவர்மன் I |
முதலாம் நரசிம்மவர்மன் (கி.பி. 630 - 668)
முதலாம் நரசிம்மவர்மன் 'மாமல்லன்' என்றும் அழைக்கப்பட்டான். அதற்கு மற்போரில் வல்லவன் என்று பொருள். சாளுக்கிய அரசன் இரண்டாம் புலிகேசியிடம் தனது தந்தை அடைந்த தோல்விக்குப் பழிவாங்க அவன் உறுதிபூண்டான். காஞ்சிக்கு அருகிலுள்ள மணிமங்கலம் என்ற இடத்தில் நடைபெற்ற போரில் இரண்டாம் புலிகேசிக்கு எதிராக அவன் பெற்ற வெற்றியை கூரம் செப்பேடுகள் கூறுகின்றன. பரஞ்சோதியை படைத்தலைவனாகக் கொண்ட பல்லவப்படை சாளுக்கியப் படையை விரட்டிச் சென்றது. இரண்டாம் புலிகேசி தோற்கடிக்கப்பட்டு கொல்லப் பட்டான். வாதாபிநகரம் அழிக்கப்பட்டது. முதலாம் நரசிம்மவர்மன் 'வாதாபி கொண்டான்' என்ற விருதைச் சூட்டிக் கொண்டான். தந்தை இழந்த பகுதியையும் மீட்டான். முதலாம் நரசிம்மவர்மனின் மற்றொரு குறிப்பிடத்தக்க சாதனை அவன் இலங்கைமீது கடற்படை நடத்திச் சென்றதாகும். தனது நண்பனும், இலங்கை இளவரசனுமான மானவர்மனுக்கு இலங்கை அரியணையை மீட்டுக் கொடுத்தான்.
அவனது ஆட்சிக் காலத்தில் சீனப்பயணி யுவான் சுவாங் தலைநகர் காஞ்சிபுரத்திற்கு வருகை புரிந்தார். காஞ்சி பற்றிய அவரது வருணனை குறிப்பிடத்தக்கது. மிகப்பெரிய, அழகிய நகரான அது ஆறு மைல்கள் சுற்றளவு கொண்டது எனக் கூறியுள்ளார். அங்கு நூறு புத்தசமய மடாலயங்கள் இருந்தன. பத்தாயிரம் புத்த சமயத்துறவிகள் அவற்றில் வாழ்ந்தனர். கல்விக்குப் பெயர் பெற்றது காஞ்சி மாநகர். அங்கிருந்த கடிகை மிகவும் புகழ்பெற்ற கல்விக் கூடமாகும். மாமல்லபுரத்தை நிறுவியவர் முதலாம் நரசிம்மவர்மன். அவரது ஆட்சிக்காலத்தில்தான் அங்கு ஒற்றைக்கல் ரதங்கள் அமைக்கப்பட்டன.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பல்லவர்கள் , முதலாம், அவன், வரலாறு, அவனது, இடத்தில், மகேந்திரவர்மன், நரசிம்மவர்மன், இந்திய, இரண்டாம், அவரது, கொண்டான், பல்லவர்கள், என்றும், பெயர், தந்தை, அங்கு, காஞ்சி, இலங்கை, மண்டகப்பட்டு, தனது, விசித்திரசித்தன், காலத்தில், சாளுக்கியப், இந்தியா, புலிகேசி, கல்வெட்டு, சூட்டிக், விருதுப், இழந்த, குடைவரைக்