இரீயூனியனில் தமிழர்கள் - தமிழர் வாழும் நாடுகள்
சர்க்கரை ஆலைகள் மட்டும் நவீன மயமாக்கப்பட்டுப் பெரிய அளவில் நடந்து வருகின்றன.
சர்க்கரை ஏற்றுமதி செய்யப்படுகிறது. தமிழர்களில் 28 சதவீததினர் அரசியல், தொழில்,
வாணிபத்தில் ஈடுபட்டுள்ளனர். வெட்டிவேர், வன்னிலா, ஜெரானியம் போன்ற
வாசனைப் பயிர்த் தொழில் வளர்ச்சிக்கும், கைவினைப் பொருள் உற்பத்திக்கும், பேரளவு
தேன் உற்பத்திக்கும், மீன் பிடிப்பிற்கும் அரசாங்கம் பெருமளவில் உதவி புரிகிறது.
பிரான்ஸிலே படித்த பிரெஞ்சு மொழி பேசும் படித்த தமிழர்கள் மருத்துவர்களாகவும்
வழக்குரைஞர்களாகவும் ஆசிரியர்களாகவும் விரிவுரையாளர் களாகவும் பணிபுரிகின்றனர்.
வாழ்க்கைத்தரம் :
1947இல் இத்தீவு பிரான்சின் அங்க நாடாக மாறியதிலிருந்து இங்குள்ளோரின் வாழ்க்கைத்தரம் நாளுக்கு நாள் உயர்ந்து வருகின்றது. பிரான்ஸ் நாட்டில் நடைமுறைப்படுத்தப்படும் அத்தனைச் சலுகைச் சட்டங்களும் இங்கும் அப்படியே நடைமுறைக்கு வருவதால் இதனைச் சுற்றிலும் உள்ள நாடுகளின் வாழ்க்கைத் தரத்தைக் காட்டிலும் ரீயூனியன் மக்களின் வாழ்க்கைத் தரம் பன்மடங்கு உயர்ந்து காணப்படுகின்றது. இங்குக் குறைந்தபட்ச அடிப்படை சம்பளமே நாலாயிரம் பிராங் (சுமார் 7500 ரூபாய்). வேலை செய்யும் அத்தனை பேரும் கார் வைத்திருக்கின்றனர். உலகிலேயே அதிக விகிதத்தில் கார் விற்பனையாகும் இரண்டாவது இடம் ரீயூனியன்தான். சட்ட மன்றங்களில் தமிழர்களில் சிலர் அங்கம் வகிக்கின்றனர். பிரான்சில் உள்ள சட்ட மன்றங்களிலும் தமிழர்கள் சிலர் அங்கம் வகிக்கின்றனர்.
இங்கு ஏறக்குறைய எல்லோர் வீடுகளிலும், தொலைக்காட்சியும் தொலைபேசியும் உண்டு. சுருக்கமாகச் சொன்னால், மக்கள் சகல வசதிகளுடனும் வாழ்கின்றனர். வேலையற்றிருக்கும் படித்த இளைஞர்கள் முதல் தளர்ந்து விட்ட முதியோர் வரை, குடிமக்களுக்கு அரசாங்கம் பல வகையிலும் உதவித் தொகை அளிப்பதால் வறுமையென்பதற்கே இங்கு இடமில்லை. அருகிலுள்ள மொரீசியஸ் தீவைவிட இங்கு வாழ்க்கைத்தரம் பன்மடங்கு உயர்ந்துள்ளது.
உணவு :
விரல் விட்டு எண்ணக்கூடிய சிலர்தாம் அண்மை சில ஆண்டுகளாக உணவில் சைவமாக இருக்கின்றனர். மற்றையோர் அனைவரும் அசைவ உணவுப் பழக்கமுடையவர்களே. தமிழர்கள் மாட்டிறைச்சி உண்பதில்லை. பெரும்பாலான தமிழ்நாட்டுப் பலகாரங்கள் இங்கு மறந்து போய் விட்டன. ரொட்டியும் வெண்ணெயும் காலைச் சிற்றுண்டி. பெரும்பாலும் ஐரோப்பிய நாட்டு உணவுப் பழக்க வழக்கங்களே இங்கு அதிகம் இடம் பெறுகின்றன. கோயில் திருவிழாக்களின் போதும், மதச் சடங்குகள், வீட்டுப் பண்டிகைகளின் போதும் ஓரளவு தமிழ்ச் சமையல் முறை கையாளப்படுகிறது.
உடை :
இங்குள்ள தமிழர்கள் பொதுவாக மேலை நாட்டுப் பாணியிலேயே உடையணிகின்றனர். இந்துக் கோயில் திருவிழாக்களிலும், தமிழ்ச் சமய திருமணச் சடங்குகளிலும் ஆர்வமுள்ள இளைஞர் பலர் வேட்டி, சட்டை அல்லது ஜிப்பா அணிந்தும், பெண்களில் பலர் புடவை, ரவிக்கை அணிந்தும் தமிழ்க் கலாச்சாரத்தை வெளிப்படுத்து கின்றனர். பொங்கல், தீபாவளி, புத்தாண்டு, விரதம், தீமிதிப்பு முதலிய விழா நாட்களின் போது பெண்கள் புடவையும் நகைகளும் அணிந்து கொள்கிறார்கள்.
வீடு :
சிறிய வீடாக இருந்தாலும், அதனைச் சுற்றி அழகிய பூந்தோட்டம் அமைத்துப் பராமரிப்பதிலும், வரவேற்பு அறையினைப் பூஞ்சாடிகளால் அலங்கரிப்பதிலும், வீட்டை எப்போதும் தூய்மையாக வைத்திருப்பதிலும் இவர்கள் மிகுந்த ஆர்வமும் அக்கறையும் காட்டுகின்றனர். வார விடுமுறை நாட்களைக் குடும்பத்துடன் இயற்கை காட்சிகள் நிறைந்த வெளியிடங்களுக்குச் சென்று, உண்டு, களித்து ஓய்வெடுப்பதன் மூலம் கழிக்கின்றனர்.
தமிழின் நிலை
பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் குடியேறியத் தமிழர்கள் பிரெஞ்சு முதலாளிகளின் நம்பிக்கைப் பெற்றவர்களாகப் பணிபுரிந்த போது, ரீயூனியன் எங்கும் தமிழ்மயமாக இருந்து, தமிழர்களுக்கும் பிரெஞ்சுக் காரர்களுக்கும் இடையே கருத்துப் பரிமாற்றம் நிமித்தம் பிறந்ததே கிரியோல் (Creole) என்னும் கொச்சை மொழி. இம்மொழியில் சொற்கள் பிரெஞ்சுச் சொற்களாகவும் கருத்து வெளியீடு தமிழ் முறையாகவும் இருப்பதால் இந்தக் கிரியோல் அன்றைய தமிழ்மக்களின் படைப்பேயாகும்.
இப்போது உள்ள ரீயூனியன் தமிழர்கள் தமிழை மறந்து விட்டனர். அனைவரும் கிரியோல் மொழியே பேசுகின்றனர். கிரியோல் மொழி ரீயூனியனின் தேசிய மொழியாக விளங்குகிறது. படித்தவர்கள் மட்டுமே பிரெஞ்சு மொழி பேசுகின்றனர். பிரெஞ்சு மொழி பணித்துறை, அலுவலக மொழியாக விளங்குகிறது. பொதுவாக 100க்கு 95 தமிழர்களுக்கு தமிழ் எழுதவோ படிக்கவோ பேசவோ தெரியாது. பாரீஸ்-புதுவை தொடர்புள்ள ஒரு சிலர் தமிழ் பேசுகின்றனர்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இரீயூனியனில் தமிழர்கள் - Tamils in Reunion - தமிழர் வாழும் நாடுகள் - Tamil Persons Living Countries - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - தமிழர்கள், இங்கு, மொழி, இரீயூனியனில், பிரெஞ்சு, நாடுகள், கிரியோல், வாழும், தமிழர், படித்த, ரீயூனியன், உள்ள, சிலர், தகவல்கள், பேசுகின்றனர், தமிழ், தமிழ்நாட்டுத், வாழ்க்கைத்தரம், உணவுப், அனைவரும், உண்டு, மறந்து, பொதுவாக, போது, மொழியாக, விளங்குகிறது, | , அணிந்தும், பலர், போதும், தமிழ்ச், வகிக்கின்றனர், கோயில், வாழ்க்கைத், countries, tamilnadu, information, living, persons, tamils, reunion, tamil, சர்க்கரை, தமிழர்களில், கார், இடம், சட்ட, பன்மடங்கு, உயர்ந்து, தொழில், உற்பத்திக்கும், அரசாங்கம், அங்கம்