இரீயூனியனில் தமிழர்கள் - தமிழர் வாழும் நாடுகள்
இப்படியாக வந்தவர்களில் மிகச்சிலரே தங்கள் ஒப்பந்தம் முடிந்து தாயகம் திரும்பினர்.
ஏனையோர் இங்கேயே தங்கி விட்டனர். அதற்கு முக்கிய காரணம் இங்கேயே தொடர்ந்து
வசிப்பவர்கள் இந்த நாட்டின் குடிமக்களாவர் என்ற அரசாங்க சட்டமும், சாதீய
வேறுபாட்டுத் தாழ்வுணர்ச்சியின்றி எல்லோரும் சமமாக வாழும் சமரச வாழ்க்கை முறையும்,
வேலை நிச்சயமும், கூலி நிச்சயமும் ஆகும்.
1946 வரையில் பிரெஞ்சுக் காலனியாக இருந்து வந்த இத்தீவு 1947 இல் 'பிரெஞ்சு நாட்டின் கடல் கடந்த அங்க நாடு' என்று சட்டபூர்வமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. அன்று முதல் பிரான்ஸ் நாட்டு மக்களுக்கு என்னென்ன குடியுரிமையுண்டோ அத்தனையுரிமைகளையும் இங்குள்ள யாவரும் பெற்றுப் பிரெஞ்சுக் காரர்களாகவே வாழ்ந்து வருகின்றனர். இங்கு வெள்ளையினக் கிரியோல், தமிழர், ஆப்பிரிக்க நாட்டுக் காப்பிரியர்கள், மலகாஷ், கொமோர் தீவுகளின் மக்கள், சீனர்கள், வியாபாரம் நிமித்தம் கடைசியாக இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் வந்த இந்திய குஜராத்தி முஸ்லீம்கள் ஆகிய பல இனத்தவரும் அமைதியாக
வாழ்ந்து வருகிறார்கள்.
தமிழரின் இன்றைய நிலை
சமயம் :
இடைக்காலத்தில் ரீயூனியன் தமிழரின் திருமணம், சவ அடக்கம் ஆகிய சடங்குகள் கிறித்துவ முறையில் நடந்தது குறைந்து இப்பொழுதெல்லாம் இந்து சமய முறைப்படி நடப்பது பெருகி வளர்ந்து வருகின்றது. பெற்றோர் மணம் பேசுவதென்பதில்லை. பெண்ணும் பிள்ளையும் சந்தித்துப் பழகிய பிறகு, பெற்றோருக்கு அறிமுகமாகிப் பின்னரே இரு வீட்டினரும் இணைந்து திருமணம் முடித்து வைக்கின்றனர். வரதட்சிணை முறை இங்கில்லை. திருமணச் செலவை இரு வீட்டாரும் சமமாகப் பகிர்ந்து கொள்கின்றனர்.
பிறந்த குழந்தைக்கு உரிய காலத்தில் முடியிறக்கித் தெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவது வழக்கமாய் உள்ளது. ஆனால், காதுகுத்துதல் வழக்கொழிந்து விட்டது. இறந்தவர்களைக் கல்லறையில் அடக்கம் செய்வதே பின்பற்றப்படுகிறது. இங்கு ஒவ்வொரு ஊரிலும் ஒரு கோயிலுண்டு. சிவன், முருகன், காளிக் கோயில்கள் அதிகமுண்டு. தலைநகரமான செயிண்ட் பியரி (Saint Andre) முதலிய இடங்களில் முருகன் கோயில்கள் இருக்கின்றன. சிவ, திருமால் கோயில்களில் தமிழ்நாட்டிலிருந்து வரவழைக்கப்பட்ட குருக்கள் பணியாற்றுகின்றனர். 1980 இல் மொரீசியஸ் தமிழ் மொழி விழிப்புக்குப் பின் சில தமிழ்ப் பண்டாரங்கள் ரீயூனியன் கோயில் களில் தமிழில், வடமொழியில் அர்ச்சனை செய்கிறார்கள். அதற்கு முன்பு பிரெஞ்சு மொழிதான் இத்தீவில் உள்ள தமிழர்கள் கோயில்களின் ஆட்சிமொழி.
ரீயூனியன் தமிழர்களிடையே பெரும்பாலும் கிராமத் தேவதை வழிபாடே அதிகமாகக் காணப்படுகிறது. டிசம்பர், ஜனவரி, சூலை மாதங்களில் திரௌபதையம்மன் கோயிலில் தீமிதித் திருவிழா சிறப்பாக நடைபெறுகின்றது. பெண்கள் தீக்குழியினைச் சுற்றி வலம் வருவதோடுசரி; தீ மிதிப்பதில்லை. மாரியம்மனுக்கு மே, சூன் மாதங்களில் கஞ்சி ஊற்றுத் திருவிழா நடைபெறுகின்றது. காளியம்மனுக்கு டிசம்பர், ஜனவரி, சூலை மாதங்களில் ஆட்டுக்கடா, கோழி முதலியன பலி தந்து விழா கொண்டாடுவது வழக்கமாக உள்ளது. இந்த விழாக்கள் பத்து நாட்களுக்குக் குறையாமல் கொண்டாடப்படுகின்றன. பொதுக் கோயில்கள் மட்டுமல்லாமல், கிராமங்களில் ஒவ்வொரு வீட்டின் தோட்டத்திலும் காளி, மாரி, முனி, வீரன், கருப்பு முதலிய தேவதைகளுக்குச் சிறு கோயில்கள் எழுப்பி மாதந்தோறும் வழிபாடு செய்து வருகின்றனர். இது இந்தியாவில் ஒவ்வொரு வீட்டிலும் இருக்கின்ற சுவாமி அறை பூசையை ஒத்திருக்கின்றது.
நகரங்களில் உள்ள சிவசுப்ரமணியர், பெருமாள் ஆகிய தெய்வங்களின் கோயில்களில் ஆண்டுதோறும் பத்துநாள் உற்சவம் நடைபெறுகின்றது. அப்போது ஏராளமான மக்கள் நாள்தோறும் கோயிலுக்கு வந்து வழிபாடுகளில் பங்கேற்கின்றனர். முருகன் கோயிலாக இருந்தால் புரட்டாசி மாதம் முழுவதும் சனிக்கிழமை தோறும் பெரிய அளவில் விழாவெடுத்துக் கோவிந்தனை வழிபடுகின்றனர். கிருஷ்ண ஜெயந்தியையும் இரவு முழுவதும் கண்விழித்து அவனது வரலாற்றினைப் பக்தியுடன் கேட்டு மகிழ்வுடன் கொண்டாடுகின்றனர். திருவிழாக்களின் போது சாமி ஊர்வலமும், சக்தி கரக ஆட்டங்களும், அலகு குத்தி ஆடுவதும் சிறப்பாக நடைபெறும். ஊர்வலத்தின் போது பக்தர்கள் வீடுதோறும் தீபாரதனை செய்வார்கள்.
தமிழ்க் கிறித்துவர்கள் நீண்ட கவுன்களும் மேக்சிகளும் அணிந்து வந்து இந்துக் கோயில்களில் தவறாமல் வழிபடுகிறார்கள். ரீயூனியன் தமிழர்கள் தைப் பொங்கல், தீபாவளி, தமிழ் வருடப்பிறப்பு ஆகியவற்றை கோயிலில் கொண்டாடுகின்றனர். இந்நாட்களில் சூரியனுக்குச் சிறப்பான பூசைகள் நடக்கின்றன. பிரதி வருடமும் சூலை 14, நவம்பர் 11, டிசம்பர் 20 ஆகிய நாட்கள் தேசிய விழா நாட்களாக அரசாங்கத்தாலும் பொதுமக்களாலும் வெகுவிமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன.
தொழில்:
தமிழர்கள் அனைத்து தொழில்களிலும் ஈடுபட்டிருக்கின்றனர். கரும்பு தோட்ட வேலை, கட்டிடக் காண்டராக்ட், சாலைக் காண்ட்ராக்ட், பஸ், லாரி போக்குவரத்து ஆகியவற்றிலும், சிமெண்டு உற்பத்தித் தொழிற்சாலை, கருங்கல் ஜல்லி தயாரிப்புத் தொழிற்சாலை முதலியவற்றிலும் தமிழர்கள் பெரும்பங்கு வகிக்கின்றனர். முஸ்லீம் களும் சீனர்களும் வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பது போலத் தமிழர்கள் விவசாயத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். மக்களுக்குத் தேவைப்படும் இன்றியமையாப் பொருள்களை இங்கேயே உற்பத்தி செய்வதைக் காட்டிலும், வெளியிலிருந்து தருவிக்கப்படுவது மிகவும் விலை சகாயமாக அமைவதால், இங்குப் பெரிய தொழிற்சாலைகள் நிறுவப்படுவதில் போதிய அக்கறையோ அவசியமோ இது வரையிலும் ஏற்படவில்லை.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இரீயூனியனில் தமிழர்கள் - Tamils in Reunion - தமிழர் வாழும் நாடுகள் - Tamil Persons Living Countries - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - தமிழர்கள், வாழும், தமிழர், கோயில்கள், இரீயூனியனில், ஆகிய, ரீயூனியன், நாடுகள், இங்கேயே, முருகன், டிசம்பர், சூலை, நடைபெறுகின்றது, ஒவ்வொரு, கோயில்களில், மாதங்களில், தமிழ்நாட்டுத், தகவல்கள், ஜனவரி, தமிழ், உள்ள, முதலிய, விழா, போது, கொண்டாடுகின்றனர், ஈடுபட்டிருக்கின்றனர், தொழிற்சாலை, | , பெரிய, முழுவதும், திருவிழா, சிறப்பாக, கொண்டாடப்படுகின்றன, வந்து, கோயிலில், தமிழரின், tamilnadu, information, அதற்கு, நாட்டின், countries, living, tamils, reunion, tamil, persons, வேலை, நிச்சயமும், இங்கு, மக்கள், திருமணம், அடக்கம், வருகின்றனர், வாழ்ந்து, பிரெஞ்சுக், வந்த, பிரெஞ்சு, உள்ளது