மொரீசியஸில் தமிழர் - தமிழர் வாழும் நாடுகள்
பெயர்கள் :
சுப்பையா, சந்நியாசி, சங்கிலி முதலிய பழைய பெயர்கள் இன்றும் வழக்கில் உள்ளன. நம்பி, வெள்ளி வீதி, நக்கீரன், மங்கையற்கரசி, மணிமேகலை, கண்ணகி, மாதவி, சிவகாமி, மீனாட்சி போன்ற பெயர்கள் வழக்கில் உள்ளன. சில பெயர்களை மாற்றி அழைக்கின்றனர். முத்தையா-மூச்சியா, முருகன்-மூர்கன், வீரப்பன்-வீர்லப்பென், திருவேங்கடம்-திருவேங்கடும் என நல்ல தமிழ் பெயர்களும் பிரஞ்சு தொடர்பினால் திரிந்து வழங்குவதைக் காணலாம்.
பழக்கவழக்கங்கள் :
குழந்தை பிறந்தால் 30 நாள் வரை அந்த வீட்டிற்குச் சென்று வந்தால் தலை முழுகுகின்றனர். காது குத்தும் சடங்கு பெண் குழந்தைகளுக்கு மட்டுமே உண்டு. திருமணத்தில் நிச்சயம் செய்தல், மஞ்சள் பூசுதல் (நலுங்கு வைத்தல், பரிசம் போடுதல், தாரை வார்த்தல், கன்னி காதானம் செய்து கொடுத்தல், மஞ்சள் கயிற்றில் தாலி கட்டும் மரபு, பாதபூசை செய்தல், சீர்வரிசை வைத்தல், நாத்தனார் மிஞ்சி அணிவித்தல், மாலை மாற்றல் போன்ற அனைத்துச் சடங்குகளும் தமிழ் மரபை ஒத்துள்ளன. இறப்பில் கோடி போடுதல், எட்டுப் படைத்தல், கரு மாதி, சோறு ஆக்கிப் போடுதல், மகன் மொட்டை அடித்தல் முதலிய யாவும் ஒன்றும் குறைவின்றி மொரீசியசு தமிழர்கள் கடைப்பிடித்து வருகின்றனர்.
தொழில் :
பெரும்பாலான தமிழர்கள் கரும்புத் தோட்டம், தேயிலைத் தோட்டங்களில் பணியாற்றுகின்றனர். மற்றவர்கள் நகரம் சார்ந்த தொழில்களைச் செய்து வருகின்றனர். பலர் அரசு அலுவலங்களில் பணியாற்றி வருகின்றனர்.
"பலர் செல்வம் படைத்த வணிகராகவும் கரும்புத் தோட்டங்களுக்கு உரிமையாளராகவும் இருந்தார்கள். தஞ்சாவூர் வீதி, திருச்சிராபள்ளி வீதி என்று போர்ட் லூயிசில் இருக்கும்வீதிகளில் ஒரு காலத்தில் தமிழ் பேசும் மக்களே வாழ்ந்தனர். ஆனால் இன்று தமிழர் பலர் அந்த இடங்களை இழந்து விட்டனர்" எனத் தனி நாயகம் அடிகள் கூறுகிறார்.
மொரீசியஸ் தமிழர்கள் :
பதினெட்டாம் நூற்றாண்டின் கடைசி வரை மொரீசியசில் இந்தியர்கள் எனக் கருதப்பட்டவர்கள் தமிழர்களாவர். "இவர்கள் மொரீசியஸ் மொத்த மக்கள் தொகையில் பத்து விழுக்காட்டினராக இருந்தனர். மொத்த மக்கள் எண்ணிக்கையான 60,000 பேர்களில் 50,000 பேர் அடிமைகள். இவர்களுள் இந்தியத் துணைக் கண்டத்தின் தென்பகுதியிலிருந்து குடியேறிய 6000 பேரும் அடங்குவர். 1830 களில் போஜ்புரியைத் தாய் மொழியாகக் கொண்ட பீகாரிகள் இத்தீவுக்கு வரும் வரைக்கும் கீழை மொழியாக இத்தீவில் பேசப்பட்ட மொழி தமிழாகும்" என்று இராமியத் குறிப்பிட்டுள்ளார்.
வட இந்தியர்கள் மொரீசியசில் குடியேறிய பின்னர் தமிழரின் இடம் இன்று இந்தியர் அளவில் மூன்றாமிடத்தில் உள்ளனர். இந்தி (போஜ்புரி), உருதுவுக்கும் அடுத்த நிலையிலேயே தமிழ் இருந்தது. மேலும் வாழ்க்கையை ஓட்டுவதற்கு பிரஞ்சுக்காரர்கள் காலத்தில் பிரஞ்சும், பிரஞ்சும் ஆப்ரிக்க மொழியும் இணைந்த 'கிரியோலு'ம் தமிழரிடம் முக்கியத்துவம் பெற்றது. ஆங்கிலேயர் காலத்தில் ஆங்கில மொழி ஆட்சி மொழியானதால் ஆங்கிலத்துடனும் போட்டி போட வேண்டியிருந்தது. தமிழர்கள் தோட்டத் தொழிலாளிகளாக பேரளவில் இருந்ததால் கல்வி கற்கும் சூழல் குறைந்து, தங்களுடன் பெருமளவில் பணியாற்றிய பிறமொழியினரின் தாக்கம் காரணமாக தமிழ் மொழியை மறந்தனர். இன்று மொத்தத் தமிழரில் (65,000) 35,000 பேரே தமிழ் பேசவும் எழுதவும் கூடியவர்களாக உள்ளனர். அனைவரும் கிரியோல் பேசுபவர்களாகவே உள்ளனர்.
கிரியோல் மொழியில் தமிழ் :
பிலிப்பேக்கர் கிரியோலில் வழங்கும் திராவிட மொழிச் சொற்களைத் தொகுத்துள்ளார். கிட்டத்தட்ட 65 சொற்கள் இம்மொழியில் பயன்படுத்தப்படுவதாக அவர் குறிப்பிடுகிறார்:
உறவு முறைச் சொற்கள் | அண்ணன், அக்கா, தம்பி |
காய்கறி பெயர்கள் | கறிவேப்பிலை, கொத்துமல்லி, முருங்கை, பீர்க்கங்காய், புடலங்காய். |
உணவுப் பெயர்கள் | அப்பளம், ஜிலேபி, கள், கஞ்சி, கொழுக்கட்டை, முறுக்கு, மிளகுத் தண்ணீர், மிட்டாய், பாயாசம், புட்டு, சாராயம், உருண்டை. |
விளையாட்டுப் பெயர்கள் | கோலாட்டம், பல்லாங்குழி, சீட்டு விளையாட்டு. |
தெய்வங்களின் பெயர்கள் | காத்தாயி, மதுரை வீரன், முனீஸ்வரன், காளியம்மை. |
கோயிற் சொற்கள் | சாம்பிராணி, திருநீறு, பூசாரி, காவடி, கைலாசம் |
இச்சொற்கள் அனைத்தும் பொதுவாக ஆப்ரோ மொரீசியர்கள் தமிழர்களோடு கொண்டிருந்த கலாச்சாரத் தொடர்பை நன்கு காட்டுகின்றன.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மொரீசியஸில் தமிழர் - Tamils in Mauritius - தமிழர் வாழும் நாடுகள் - Tamil Persons Living Countries - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - தமிழர், பெயர்கள், தமிழ், தமிழர்கள், மொரீசியஸில், நாடுகள், வாழும், பலர், வீதி, இன்று, போடுதல், காலத்தில், வருகின்றனர், சொற்கள், தகவல்கள், உள்ளனர், தமிழ்நாட்டுத், ", மொரீசியஸ், மக்கள், பிரஞ்சும், கிரியோல், | , மொழி, குடியேறிய, இந்தியர்கள், மொத்த, மொரீசியசில், மஞ்சள், living, countries, persons, tamil, tamils, mauritius, tamilnadu, information, வைத்தல், செய்து, செய்தல், அந்த, முதலிய, வழக்கில், கரும்புத்