மொரீசியஸில் தமிழர் - தமிழர் வாழும் நாடுகள்
பொது விபரங்கள்
மொரீசியஸ் தீவு இந்தியாவிலிருந்து 4000 கி.மீ தொலைவில் இந்துமாக்கடலில் அமைந்துள்ளது. 2100 ச.கி.மீ பரப்புடையது. இதன் கடற்கரையைச் சுற்றி இருபதுக்கும் மேற்பட்ட தீவுகள் உள்ளன.
'மொரீசியஸ்' என்ற பெயர் மொரீசியஸ் தீவை மட்டுமே குறிப்பதாகத் தோன்றினாலும், இந்நாடு ரோட்ரிக்ஸ், அகலேகா, புனித பிராந்தோன் என்ற மூன்று சார்பரசு நாடுகளைக் கொண்டது. 110 சதுரக் கி.மீ பரப்புடைய ரோட்ரிக்ஸ், மொரீசியஸ் தீவின் கிழக்கே 560 கி.மீ தொலைவில் உள்ளது. அகலேகா, மொரீசியஸின் வடக்கே 935 கி.மீ தொலைவில் உள்ளது. புனித பிராந்தோன் மிகச் சிறிய தீவு. இது மொரீசியஸ் தீவின் தென் மேற்கே 400 கி.மீ தொலைவில்
இருக்கிறது.
மொரீசியஸ் 9 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. 1983-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 10,00,432 பேர் வாழ்கின்றனர். இச்சிறிய தீவுக்கு 370 ஆண்டு குடியேற்ற வரலாறு உண்டு. டச்சுக்காரர்கள், பிரஞ்சுக்காரர்கள், ஆங்கிலேயர் இத்தீவை ஆண்டிருக்கின்றனர். 1968-ஆம் ஆண்டு மொரீசியஸ் ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெற்றது.
மொரீசியஸ் ஒரு விவசாய நாடு. இந்நாட்டின் தேசிய வரவு செலவு திட்டம் முக்கியமான விளைபொருள்களான கரும்பையும், தேயிலையையும் ஆதாரமாகக் கொண்டுள்ளது.
மொரீசியஸ் பல இனங்களைச் சேர்ந்த பல்வேறு மொழிகள் பேசுகின்ற மக்களடங்கிய ஒருபன்மைச் சமுதாயம். வரலாற்றுக் காலந்தொட்டு மொரீசியசிலே பிறந்த மொரீசியர்களோடு உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்களும் இங்கு இணைந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களை ஐரோப்பியர்கள், இந்தியர்கள், கிரியோல்கள், சீனர்கள், ஆப்ரிக்க அடிமைகள் எனப் பிரிக்கலாம். 1983-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 84 சமயங்களைச் சேர்ந்தவர்களும் 66 மொழிகளைப் பேசுகிறவர்களும் உள்ளனர். 'கிரியோல்' என்பது ஆப்ரிக்கர் மற்றும் இந்தியர், ஐரோப்பிய வமிசாவழியினரோடு கலந்ததால் உருவான கலப்பின மொரீசியஸ் மக்களைக் குறிக்கிறது. பிரெஞ்சு இலக்கண அமைப்பு உடையதும் பெரும்பாலான ஆப்ரிக்க மொழிச் சொற்களையுமுடைய 'மொரீசியன் கிரியோல்' என்ற கலப்பு மொழி இவர்களது தாய்மொழியாகும்.
தமிழர் குடிபெயர்வுக்கான காரணங்கள் :
உலக நாடுகளில் தமிழர் இரண்டு விதங்களில் குடியேறினர்.
1. வாணிகத்தின் பொருட்டு கிறிஸ்து பிறப்பதற்கு முன்னரே குடியேறி, 15-ஆம் நூற்றாண்டு வரை வாணிபத்தின் பொருட்டு நடந்த குடியேற்றம்.
2. 18, 19-ஆம் நூற்றாண்டுகளில் பிரஞ்சு, ஆங்கிலேயக் குடியேற்ற நாடுகளில் தோட்ட வேலைகளுக்குக் கூலி அடிமைகளாய் கொண்டு செல்லப்பட்ட இரண்டாம் கட்ட குடியேற்றம். இந்த இரண்டாம் கட்ட குடியேற்றம் நடந்த நாடுகளில் ஒன்றுதான் மொரீசியஸ் தீவு.
17-ஆம் நூற்றாண்டில் நாயக்கராட்சி முடிவுக்கு வந்தது. ஆங்கிலேயர், பிரஞ்சுக்காரர்கள், ஆர்காட்டு நவாபு முதலியோர் தொடர்ந்து தங்கள் ஆதிக்கத்தை நிறுவ தென் தமிழ் நாட்டில் இருந்த 72 பாளையப்பட்டுக்காரர்களுடன் ஓயாத போரினைச் செய்து வந்தனர். இதனால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் விவசாயிகளும், விவசாய தொழிலாளர்களும் தாம். தொடர்ந்து நிலவிய பஞ்சம், வறுமை, சாதிக் கொடுமை, கிராமப்புரங்களில் போதிய தொழில் வளர்ச்சியின்மை, நிலப்பிரபுக்களின் கொடுமை, வட்டிக் கடைக்காரர்களின் பொருளாதாரச் சுரண்டல், கொத்தடிமைத்தனம், அடிமை முறை போன்றவற்றைத் தாங்கமுடியாமல், குறிப்பாக தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, மதுரை, இராமநாதபுரம் ஆகிய தமிழக மாவட்டங்களிலிருந்து ஏராளமான விவசாயிகள் நாடு விட்டு ஓடிப் பிற நாடுகளில் குடியேறினர்.
தமிழர் குடியேற்றம்
மொரீசியசில் தமிழர் குடியேற்றத்தை மூன்று கட்டங்களாகப் பிரிக்கலாம்.
1. முதலாவது கட்டம் : மொரீசியசின் கட்டட வளர்ச்சிக்காகவும் பிற கைவினை நுட்ப வேலைக்காகவும் கைவினைத் திறம் பெற்ற தமிழர்களைக் குடியேற்றியது.
2. இரண்டாவது கட்டம் : ஒப்பந்தக் கூலி முறையில் தோட்டத் தொழிலாளர்களாகத் தமிழர்களைக் குடியேற்றியது.
3. மூன்றாவது கட்டம் : ஒப்பந்தக் கூலி முறையோ அல்லது வேறெந்த நிபந்தனையோ இன்றி வாணிகத்தின் பொருட்டுத் தமிழர்கள் குடியேறியது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
மொரீசியஸில் தமிழர் - Tamils in Mauritius - தமிழர் வாழும் நாடுகள் - Tamil Persons Living Countries - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - தமிழர், மொரீசியஸ், தொலைவில், மொரீசியஸில், குடியேற்றம், நாடுகளில், ஆண்டு, நாடுகள், வாழும், கூலி, தீவு, கட்டம், தகவல்கள், தமிழ்நாட்டுத், பிரிக்கலாம், பொருட்டு, ஆப்ரிக்க, வாணிகத்தின், குடியேறினர், mauritius, கிரியோல்&, நடந்த, கட்ட, குடியேற்றியது, ஒப்பந்தக், | , தமிழர்களைக், கொடுமை, இரண்டாம், பல்வேறு, தொடர்ந்து, tamils, ஆங்கிலேயர், ரோட்ரிக்ஸ், அகலேகா, புனித, tamil, information, living, countries, tamilnadu, பிராந்தோன், மூன்று, பிரஞ்சுக்காரர்கள், persons, விவசாய, குடியேற்ற, கணக்கெடுப்பின்படி, தீவின், உள்ளது, தென், நாடு