சோழர் வரலாறு - மூன்றாம் இராசராசன்
கீழ்ப்படியாமை : அரசாங்க ஆணைக்குக் கீழ்ப்படி யாமையும் நாட்டில் தாண்டவம் ஆடியது. சான்றாக ஒன்றுகாண்க. தஞ்சைக் கோட்டத்துச் சிவபுரம் கோவில் சிவப்பிராமணர் இருவர் அம்மனுடைய நகைகளைத் தாங்கள் வைத்திருந்த பரத்தை ஒருத்திக்குக் கொடுத்து விட்டனர்; தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட கோவிற் பணத்தைக் கையாடினர்; தம் நிலவரியைக் கொடுக்க மறுத்தனர்; பிறவழிகளிலும் தவறாக நடந்துகொண்டனர்; அரசனது ஆணை மீறியதோடு, வரிவசூலிக்கவந்த அரசாங்க அலுவலாளரை அடித்துத்துன்புறுத்தினர்; கன்னடியருடன் (அரசனை மீட்கச் சென்ற பொழுது சோணாட்டுர்களைக் கொள்ளையடித்துச் சென்ற ஹொய்சளப் படைவீரர்?) சேர்ந்து மக்களைத் துன்புறுத்தி 50 ஆயிரம் காசுகள் வசூலித்தனர். இத்துணைக் குற்றங்களைச் செய்த அப்பிராமணர் மகேசுவரராலும்(கோவில் அதிகாரிகள்) ஊர் அவையினராலும் விசாரிக்கப்பட்டுத்தண்டனை பெற்றனர்.[9]
ஹொய்சளர் செல்வாக்கு : இராசராசனுக்கு அடங்கிய வரும் ஆனால் கொடிய பகைவருமாக இருந்தவர் காடவராயரே ஆனார். இவருள் ஒருவனே சிறப்புற்ற கோப்பெருஞ்சிங்கன்.இவர்கள் மாயூரம் முதல் காஞ்சிவரை அங்கங்கே பல சிறு நாடுகளை ஆண்டுவந்தனர்; காஞ்சியும் இவர்கள் கையில் இருந்தது. மூன்றாம் குலோத்துங்கன் இதனைத் தெலுங்குச் சோழரிடமிருந்து மீட்டான். அவன் இறந்தவுடன் அது காடவர் கைப்பட்டது. அதனை நரசிம்ம ஹொய்சளன் கைப்பற்றினான். அதனால் ஹொய்சளர் நிலைப்படை அங்கு இருக்க வேண்டியதாயிற்று. நரசிம்மவர்மன் செல்வாக்கினால் ஹொய்சளர் பலர் காஞ்சி முதல் திருநெல்வேலிவரை பரவி இருந்தனர். விருத்தாசலம் கூற்றத்துத் திருவடத்துறைக் கோவில் திருமேனிகள் சில நரசிம்ம தேவன் கொண்டு சென்றனன் என்று ஒரு கல்வெட்டுக் கூறுகிறது.[10] பூததேய நாயகன், மகாப்பிரதானி அம்மண்ண தண்ட நாயகன், என்போர் காஞ்சியில் இருந்த படைத் தலைவர் ஆவர். இவர்கள் காஞ்சியில் உள்ள அத்திகிரி முதலிய கோவில்கட்குப் பல நிபந்தங்கள் விடுத்துள்ளனர்.[11] நரசிம்மனது மற்றொரு தண்ட நாயகன் வல்லயன் என்பான் திருமழப்பாடிக் கோவிலுக்குப் பல நிபந்தங்கள் விடுத்தான்.[12] நரசிம்மன் மனைவியான சோமளதேவியின் பரிவாரப் பெண்களில் ஒருத்தி திருக்கோகர்ணம் கோவிலுக்கு நிபந்தம் விடுத்தாள்.[13] இங்ஙனமே ஹொய்சள தண்டநாயகரும் பிறரும் பாண்டிய நாட்டில் செல்வாக்குப் பெற்றிருந்தனர்; அரசியலிலும் தொடர்பு கொண்டிருந்தனர்.[14]
சோழப் பெருநாடு : இராசராசன் கல்வெட்டுகள் (130-ம் ஆண்டுவரை) சித்துார், நெல்லூர், கடப்பைக் கோட்டங்களிற் கிடைக்கின்றன. ஆதலின், சோழப் பெருநாடு கடப்பைவரை வடக்கே பரவி இருந்தது என்னலாம்.சேலத்தில் இவனுடைய கல்வெட்டுகள் இருக்கின்றன. ஆதலின் கொங்கு நாடும் பெருநாட்டிற்கலந்து இருந்தது என்னலாம். இவனது ஆட்சியில் பாண்டியநாடு தனிப்பட்டுவிட்டது. எனவே மூன்றாம் குலோத்துங்கன் ஆட்சியில் இருந்த பரப்பு இவன் காலத்தில் இல்லை என்பது விளங்குகிறது.
சிற்றரசர் : குலோத்துங்கன் ஆட்சிக் காலத்துச் சிற்றரச மரபினர் வழிவந்தவரே இராசராசன் காலத்தில் சிற்றரசராக இருந்தனர்.இவருள் குறிப்பிடத்தக்கவர் சிலராவர்.அவருள் முதல்வன் கோப்பெருஞ்சிங்கன். இவன் முதலில் திரு நீடுரைச் சுற்றியுள்ள நாட்டுக்குத் தலைவனாக இருந்தான்; பிறகு சேந்தமங்கலம், கூடலூர், விருத்தாசலம், திருவெண்ணெய் நல்லூர் முதலிய ஊர்களைத் தன் அகத்தே கொண்ட நாட்டை ஆண்டுவரலானான். இவன் பழைய பல்லவர் மரபினன், வீரம் மிக்கவன்; சிறந்தபோர்வீரன், அரசியல் தந்திரி, பேரரசனையே சிறைப்பிடித்த செம்மல். இவனைப்பற்றிய கல்வெட்டுகள் பலவாகும். இவன் ஹொய்சளர், காகதியர் முதலிய பலருடனும் போர் இட்டவன், சோழப் பேரரசிற்கு அடங்கியதாகக் கல்வெட்டுகளிற் காட்டிக் கொண்டு தன்னாட்சி நடத்தி வந்தவன். இவன் கி.பி. 1243 முதல் தன் ஆட்சி ஆண்டைக் கணக்கிட்டு வந்தவன்; அதுமுதல் கி.பி. 1279 வரை 36 ஆண்டுகள்) தன்னாட்சி பெற்றுப் பெருநாட்டை ஆண்டவன், தெற்கே சடாவர்மன் சுந்தர பாண்டியனுடன் போரிட்டவன். இப்பெரு வீரன் வடக்கே திராrாராமம் முதல் தெற்கே தஞ்சாவூர் வரை கோவில் திருப்பணிகள் பல செய்தவன். இவன் சிறந்த சிவபக்தனாக இருந்தான்.இவன் தென்னாட்டுப் பெருவீரருள் ஒருவனாக மதிப்பிடத் தக்கவன் ஆவன்[15].
சித்துனர், நெல்லூர், கடப்பை இவற்றை ஆண்ட தெலுங்கச் சோடர் அடுத்துக் குறிப்பிடத் தக்கவர் ஆவர். சாளுக்கிய நாராயணன் என்ற மதும சித்தரசன் ஒருவன். மதுராந்தக பொத்தப்பிச் சோழ எர்ர சித்தரசன் ஒருவன். இவர்கள் காஞ்சி நகரத்துக் கோவில்களில் பல பணிகள் செய்துள்ளனர். மலமாதேவரசன் என்பவன் சித்துரை ஆண்ட சிற்றரசன். தெலுங்கச் சோடருட் சிறந்தவனும் பேரரசனுமான முதல் திக்கன் என்ற கண்ட கோபாலன் பல கல்வெட்டுகளிற் குறிக்கப்பட்டுளன். வானர், வைதும்பர், கங்கர், யாதவராயர், சாம்புவராயர், சேதியராயர் மரபினரும் வழக்கம்போலப் பல கல்வெட்டுகளிற் குறிக்கப்பட்டுள்ளனர். எனவே, பெருங்காயம் இருந்த பாண்டம் மணம் வீசுதலைப் போல வலியற்ற இராசராசன் பெரு நாட்டில் சோழரது பழம் பெருமையை நினைத்தும் ஹொய்சளர்க்கு அஞ்சியும் இச்சிற்றரசர் தம்மைச் சோழருடைய சிற்றரசர் எனக் கூறிக்கொண்டனர்.
அரச குடும்பம் : இராசராசன் காலத்திற் சிறப்பாகக் குறிக்கப்பெற்ற அரண்மனை ஆயிரத்தளியே ஆகும். தஞ்சை, உறையூர்களில் இருந்த அரண்மனைகள் சுந்தர பாண்டியனால் அழிவுண்டன. ஆயிரத்தளியும் ஒரளவு பாதிக்கப்பட்டது. இவனுக்கு இரு மனைவியர் இருந்தனர். அவருள் ஒருத்தி கோப்பெருந்தேவி வாணகோவரையன் மகள் ஆவள். இளையவள் ‘புவனம் முழுதுடையாள்’ எனப்பட்டாள். இராசராசன் 30 ஆண்டுகள் அரசாண்டான். இதற்குப் பின் கி.பி. 1246-இல் மூன்றாம் இராசேந்திரன் அரசு கட்டில் ஏறினான். இராசராசன் கல்வெட்டுகள் ‘சீர்மன்னி இருநான்கு திசை, சீர்மன்னு மலர்மகள்’ என்ற தொடக்கங்களை உடையன.
- ↑ 9. 279 of 1927; A.E.R. 1927. 11.30.
- ↑ 10. 228 of 1929
- ↑ 11. 349,369, 404, 408 of 1919
- ↑ 12. 89 of 1920
- ↑ 13. 183 ofp. Ins. 5.
- ↑ 14. K.A.N. Sastry’s Pandyan Kingdom. pp. 158-159
- ↑ 15. இவனது வரலாறு விரைவில் வெளியிடப்படும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மூன்றாம் இராசராசன் - History of Chola - சோழர் வரலாறு - இவன், இராசராசன், கல்வெட்டுகள், இருந்த, இவர்கள், கோவில், ஹொய்சளர், கல்வெட்டுகளிற், சோழப், நாயகன், மூன்றாம், குலோத்துங்கன், இருந்தனர், நாட்டில், முதலிய