சோழர் வரலாறு - மூன்றாம் இராசராசன்
இப்பாண்டியன் படையெடுப்பைப் பற்றி இராச ராசன் கல்வெட்டுகளில் குறிப்பில்லை. ஆனால் பாண்டியன் மெய்ப்புகழ் இதனைச் சிறந்த தமிழ் நடையில் குறித்துள்ளது. அது படித்து இன்புறத்தக்க பகுதியாகும் :
“பனிமலர்த் தாமரை திசைமுகன் படைத்த
மனுநெறி தழைப்ப மணிமுடி சூடிப்
பொன்னிசூழ் நாட்டிற் புலியாணை போயகலக்
கன்னிசூழ் நாட்டிற் கயலாணை கைவளர
வெஞ்சின இவுளியும் வேழமும் பரப்பித்
தஞ்சையும் உறந்தையும் செந்தழல் கொளுத்திக்
காவியும் நீலமும் நின்று கவினிழப்ப
வாவியும் ஆறும் அணிநீர் நலனழித்து
மடமும் மாமதிலும் கோபுரமும் ஆடரங்கும்
மாடமும் மாளிகையும் மண்டபமும் பலஇடித்துத்
தொழுதுவந் தடையா நிருபர்தம் தோகையர்
அழுத கண்ணிர் ஆறு பரப்பிக்
கழுதை கொண்டுழுது கவடி வித்திச் செம்பியனைச் சினமிரியப் பொருதுகரம்
புகவோட்டிப்
பைம்பொன் முடிபறித்துப் பாணருக்குக் கொடுத்தருளிப்
பாடரும் சிறப்பிற் பரிதி வான்தோய்
ஆடகப் புரிசை ஆயிரத் தளியிற்
சோழவளவன் அபிஷேக மண்டபத்து
வீராபி ஷேகம் செய்து புகழ்விரித்து
நாளும் பரராசர் நாமத் தலைபிடுங்கி
மீளும் தறுகண் மதயானை மேற்கொண்டு
நீராழி வையம் முழுதும் பொதுவொழித்துக்
கூராழி யும்செய்ய தோளுமே கொண்டுபோய்
ஐயப் படாத அருமறைதேர் அந்தணர்வாழ்
தெய்வப் புலியூர்த் திருஎல்லை யுட்புக்கு,
பொன்னம் பலம்பொலிய ஆடுவார் பூவையுடன்
மன்னும் திருமேனி கண்டு மனங்களித்துக்
கோல மலர்மேல் அயனும் குளிர்துழாய்
மாலும் அறியா மலர்ச்சே வடிவணங்கி
வாங்குசிறை அன்னம் துயிலொழிய வண்டெழுப்பும்
பூங்கமல வாவிசூழ் பொன்னம ராவதியில்
ஒத்துலகம் தாங்கும் உயர்மேரு வைக்கொணர்ந்து
வைத்தனைய சோதி மணிமண்டபத் திருந்து
சோலை மலிபழனச் சோணாடும் தானிழந்த
மாலை முடியும் தரவருக என்றழைப்ப
மான நிலைகுலைய வாழ்நகரிக் கப்புறத்துப்
போன வளவன் உரிமையோ டும்புகுந்து
பெற்ற புதல்வனைநின் பேர்என்று முன்காட்டி
வெற்றி அரியணைக்கீழ் விருந்து தொழுதிரப்பத்
தன்னோடி முன்இகழ்ந்த தன்மையெலாம் கையகலத்
தானோ தகம்பண்ணித் தண்டார் முடியுடனே
விட்ட புகலிடம்தன் மாளிகைக் குத்திரிய
விட்ட படிக்கென்றும் இதுபிடிபா டாகஎனப்
பொங்குதிரை ஞாலத்துப் பூபாலர் தோள்விளங்கும்
செங்கயல்கொண் டூன்றும் திருமுகமும் பண்டிழந்த
சோழபதி என்னும் நாமமும் தொன்னகரும்
மீள வழங்கி விடைகொடுத்து விட்டருணி”
ஹொய்சளர் உதவி : இக் கல்வெட்டுச் செய்தியால், பாண்டியன் பழிக்குப்பழி வாங்கினான் என்பதும், இராசராசன் நாட்டை மீளப் பெற்று ஆண்டான் என்பதும் நன்கு தெரிகின்றன. ஆயின், ஹொய்சள மன்னர் கல்வெட்டுகள் வேறு செய்தி ஒன்றைக் கூறுகின்றன. ஹொய்சள அரசனான இரண்டாம் வல்லாளன் தன்னைச் ‘சோழ ராச்சியப் பிரதிஷ்டாசாரியன்’ என்றும், ‘பாண்டிய யானைக்குச் சிங்கம்’ என்றும் கூறிக்கொள்கிறான். அதனுடன் அவன் மகனான நரசிம்மன் ‘சோழகுலக் காப்பாளன்’ என்று கூறப்பெறுகிறான். இக்கூற்றுகள் கி.பி. 1218-க்கு முற்பட்ட கல்வெட்டுகளில் காண்கின்றன. வேறொரு கல்வெட்டு, “பகைவர் இடையில் மறைந்து கிடந்த சோழனைக் காத்து நரசிம்மன் சோழ ஸ்தாபனன் என்னும் பெயரையும், ‘பாண்டிய கண்டனன்’ என்னும் பெயரையும் பெற்றான்” என்று கூறுகிறது. கன்னட நூலாகிய சம்பு ‘வல்லாளனால் இராசராசன் காக்கப்பட்டான்’ என்றே கூறுகிறது.
முடிவு : இக் கூற்றுகளையும் பாண்டியன் மெய்ப்புகழையும் நோக்க, சுந்தரபாண்டியன் படையெடுப் பால் சோழநாடு சீரழிந்தது, இராசராசன் ஒடி ஒளிந்தான், சுந்தரபாண்டியன் பழிக்குப்பழி வாங்கினான் என்பதை உணர்ந்த ஹொய்சள அரசனான வல்லாளன் தன் மகனான நரசிம்மனைச் சோனாட்டிற்கு அனுப்பியிருத்தல் வேண்டும்; அவன் தன் படையோடு வந்து பாண்டியனைப் பொருது வென்றிருத்தல் வேண்டும்; அல்லது அவன் வந்தவுடன் பாண்டியனே சமாதானம் செய்துகொண்டு சோணாட்டை இராசராசற்கு அளித்திருத்தல் வேண்டும் என்னும் முடிபுக்குத்தான் வருதல் கூடும்.
உள்நாட்டுக் குழப்பம் : பாண்டியன் முதல் படையெடுப்புக்குப் பின்னர்ச் சோழப் பெருநாட்டில் அங்கங்குக் குழப்பங்கள் இருந்தன என்பது சில கல்வெட்டுகளால் தெரிய வருகிறது. ஒரு கோவில் பண்டாரம், திருமேனிகள் முதலியன பாதுகாப்புள்ள இடங்கட்கு மாற்றப்பட்டன. இரண்டு சிற்றூர்கள் சம்பந்தமான பத்திரங்கள் அழிக்கப்பட்டன.[1] இங்கனம் பொதுவுடைமைக்கும் பொதுமக்களுக்குமே துன்பம் விளைத்த செயல் யாதாக இருத்தல் கூடும்? சிற்றரசருள் ஒருவர்க்கொருவர் பூசல் இட்டுக்கொண்டு இருந்தனர். உரத்தியை ஆண்ட காடவராயற்கும் வீர நரசிங்க யாதவ ராயற்கும் கி.பி. 1228-இல் போர் நடந்தது.[2] காடவராயர் ஹொய்சள நரசிம்மனுடனும் சண்டையிட்டனர். பின்னவன் முன்னவரிடமிருந்து காஞ்சியைக் கைப்பற்றி னான். இந் நிகழ்ச்சி பாண்டியன் முதற் படையெடுப்பின் பொழுதோ அல்லது அதன் பின்னரோ நடந்திருத்தல் வேண்டும். என்னை? நரசிம்மன் கி.பி1230-இல் காஞ்சியை ஆண்டு கொண்டிருந்தான். அவன் படைகள் காஞ்சியில் வைக்கப்பட்டிருந்தன ஆதலின் என்க.[3] இந்நிகழ்ச்சிகளால் சோழ அரசனது வலியற்ற நிலையும் அரசாங்க ஊழலும் ஹொய்சளர் உறவும் ஆதிக்கமும் நன்கு விளங்குகின்றன அல்லவா?
- ↑ 1. 41 of 1926, 213 of 1925, 309 of 1927
- ↑ 2. 271 of 1904
- ↑ 3. K.A.N. Sastry's Cholas', Vol.2. p. 178
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மூன்றாம் இராசராசன் - History of Chola - சோழர் வரலாறு - பாண்டியன், அவன், வேண்டும், ஹொய்சள, என்னும், நரசிம்மன், இராசராசன்