சோழர் வரலாறு - பராந்தகன் மரபினர்
வீரபாண்டியனை எதிர்த்த ஆதித்த கரிகாலனுக்கு உறுதுணையாக இருந்தவர் சிலர். அவருள் முற்கூறிய வேளார். ஒருவன். ‘பூதி விக்கிரம கேசரி’ என்னும் கொடும்பாளுர்ச் சிற்றரசன் மற்றொருவன். இவனுக்குக் கற்றளிப் பிராட்டியார், வரகுணப் பெருமானார் என்னும் மனைவியர் இருந்தனர். இவருள் பின்னவர் சோழ அரசன் (ஆதித்தன்?) உடன் பிறந்தவர் என்று கல்வெட்டு கூறுகிறது. இவனுடைய மக்கள் இருவர்க்கும் ‘பராந்தகன், ஆதித்தவர்மன்’ என்னும் பெயர்கள் இடம்பெற்றிருந்ததையும் நோக்க, சோழ மன்னர் கொடும்பாளுர்ச் சிற்றரசரிடம் பெண் கொடுத்தும் கொண்டும் வந்தனர் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல விளக்கமாதல் காண்க.
விக்கிரமகேசரி பல்லவனை வென்றதாகக் கல்வெட்டு ஒன்று கூறுகிறது. அச்சொல் வல்லபன் (இராட்டிரகூட அரசன்) என்றிருத்தல் வேண்டும் என்று அறிஞர் அறைவர். இரண்டாம் பராந்தகன் தன் தந்தை, பெரிய தாதை இவர்களைப் பின்பற்றித் தொண்டை நாட்டைக் கைப்படுத்த முயன்றான். அம்முயற்சியில் விக்கிரம கேசரியும் ஈடுபட்டானாதல் வேண்டும். இப்பராந்தகன், ஆதித்த கரிகாலன் இவர்தம் கல்வெட்டுகள் தொண்டை நாட்டில் மிகுதியாகக் கிடைப்பதையும், மூன்றாம் கிருஷ்ணனுடைய கல்வெட்டுகள் குறைந்து காணப் படலையும் நோக்க, முதற்பராந்தகன் இறுதிக் காலத்தில் இழந்த தொண்டை மண்டலம் அவன் மரபினனது இடைவிடா முயற்சியால் சிறிது சிறிதாகக் கைப்பற்றப் பட்டு வந்தது என்பது தெரிகிறது. இரண்டாம் பராந்தகன் காஞ்சிபுரத்தில் தனக்கென்று இருந்த அரண்மனையில் இறந்தான்; அதனால் ‘பொன்மாளிகைத் துஞ்சிய தேவர்’ எனப்பட்டான்.[6] இதனால், இவன் காலத்தில் முழுத் தொண்டை நாடும் சோழர் ஆட்சிக்கும் மீண்டும் உட்பட்டுவிட்டது என்பது விளங்குகிறதன்றோ?
இரண்டாம் பராந்தகன் மனைவியருள் குறிப்பிடத் தக்கவர் இருவர். இவரே தம் கணவனுடன் உடன் கட்டை ஏறினர்.[7] இவர் இறந்தபொழுது இராசராசன் குழந்தையாக இருந்தான் என்று திருக்கோவலூரில் உள்ள முதல் இராராசன் கல்வெட்டு உணர்த்துகிறது. மற்றவர் சேரன் மாதேவியார்.[8] வானவன் மாதேவியார்க்கு ஆதித்த கரிகாலன், இராசராசன், குந்தவ்வை என்னும் மக்கள் மூவர் இருந்தனர். இப்பேரரசன் காலத்திற்றான் வீரசோழியம் என்னும் இலக்கண நூல் புத்தமித்திரர் என்பவராற் செய்யப்பட்டது.[9] குந்தவ்வையார் பெற்றோர் படிமங்களைத் தஞ்சாவூர்ப் பெரிய கோவிலில் எழுந்தருளுவித்தார்.[10]
ஆதித்த கரிகாலன் (கி.பி. 956 - 969) : இவன் பட்டம் பெற்று ஆண்டிலன்; ஆயினும் தந்தைக்கு உதவியாக இருந்தனன்; தன் பெயரால் பல கல்வெட்டுகள் வெளிவரக் காரணமாக இருந்தான். இரண்டாம் பராந்தகன் உயிருடன் இருந்த பொழுதே இவன் கொலை செய்யப்பட்டான்.[11] இதற்குக் காரணம் என்ன? கண்டராதித்தன் மகனான உத்தம சோழன் (மதுராந்தகன்) தக்க வயதடையாததால், சிற்றப்பனான அரிஞ்சயன் நாட்டை ஆண்டான், பின்னர் அவன் மகனான இரண்டாம் பராந்தகன் அரசன் ஆனான்; அவனுக்குப் பின் பெரு வீரனான ஆதித்த கரிகாலனே பட்டம் பெறவேண்டியவன். அவன் பட்டம் பெற்றால் தான் தன் வாழ்நாளில் அரசனாதல் இயலாதென்பதை அறிந்த மதுராந்தகன் (ஆதித்தனது சிற்றப்பன்) ஏதோ ஒரு சூழ்ச்சியால் ஆதித்தனைக் கொலை செய்துவிட்டான். சோணாட்டுக் குடிகள் ஆதித்தனுக்குத் தம்பியான அருள்மொழித் தேவனையே (இராசராசனை) பட்டம் ஏற்குமாறு தூண்டினர். ஆயினும் இராசராசன் அதற்கு இணங்கவில்லை; தன் சிற்றப்புனான மதுராந்தகனுக்கு நாடாள விருப்பம் இருந்ததை அறிந்தான்; அவனை அரசனாக்கினான்; தான் அவனுக்கு அடங்கிய இளவரசனாக இருந்து நாட்டைக் கவனித்து வந்தான். அவனுக்குப் பின் தானே அரசனாவன் என்னும் ஒப்பந்தப்படி இச் செயலைச் செய்தான்.[12]
- ↑ 6. S.I.I. Vol. 3, p.288.
- ↑ 7. 236 of 1902.
- ↑ 8. இவர் பெயரால் அமைந்த ஊரே இன்று ‘சேர்மாதேவி’ என வழங்குகிறது.
- ↑ 9. ‘Cholas’ Vol. 190. 4.
- ↑ 10. S.I.I. Vol II, Part 1, pp.69-70.
- ↑ 11. 577 of 1920.
- ↑ 12. Thiruvalangadu plates, S.I.I. iii.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பராந்தகன் மரபினர் - History of Chola - சோழர் வரலாறு - என்னும், ஆதித்த, இரண்டாம், பராந்தகன், தொண்டை, பட்டம், இவன், இராசராசன், அவன், கரிகாலன், கல்வெட்டு, அரசன், என்பது, கல்வெட்டுகள்