சோழர் வரலாறு - பராந்தகன் மரபினர்
கண்டராதித்தன் சிறந்த சிவபக்தன். இவனே சிதம்பரத்தைப் புகழ்ந்து திருவிசைப்பா பாடியவனாதல் வேண்டும். அப்பாவில் பராந்தகன் பாண்டி நாட்டையும் ஈழத்தையும் வென்று, பேரம்பலத்தைப் பொன் வேய்ந்தான் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது. இவன் அந்தப்பாவில் தன்னைக் கோழிவேந்தன் (உறையூர் வேந்தன்), தஞ்சைக் கோன் என்று கூறியுள்ளான். இவனை மேற்கு எழுந்தருளிய தேவர் என்று ஒரு கல்வெட்டு கூறுகிறது. கொள்ளிடத்தின் வடகரையில் உள்ள திருமழபாடி என்னும் தலத்திற்கு மேற்கே ஒரு கல்தொலைவில் உள்ள ‘கண்டராதித்த சதுர்வேதிமங்கலம்’ என்ற நகரம் இவன் அமைத்ததே ஆகும்.
இவன் மனைவியாரான செம்பியன் மாதேவியார் சிறந்த சைவப் பெண்மணியார். இவர் இராசராசன் ஆட்சியிலும் உயிரோடு இருந்தவர்; தம் கணவன், மகன், மருமகளார் பலர், சுந்தர சோழன் முதலிய எல்லாராலும் பாராட்டப்பட்டவர். இவர் தேவாரப்பாடல் பெற்றுள்ள பல கோவில்களைக் கற்கோவில்கள் ஆக்கினர்; பல கோவில்கட்கு ஆடை அணிகள் வெள்ளிப் பாத்திரங்கள் முதலியன அளித்தனர்; பல கோவில்கட்கு நிலங்களைத் தானமாக விட்டனர். இங்ஙனம் இவர் செய்துள்ள திருப்பணிகள் மிகப் பலவாகும். அவற்றை இறுதிப் பகுதியில் ‘சோழர் கோவிற் பணிகள்’ என்னும் தலைப்பில் விளக்கமாகக் காணலாம்.
அரிஞ்சயன் : (கி.பி. 956 - 957) இவன் கண்டராதித்தன் தம்பி. கண்டராதித்தன் மகன் மதுராந்தகன் குழந்தையாக இருந்ததால், இவன் தன் தமையனுக்குப் பின் பட்டம் பெற்றான்; ஆயின், சுருங்கிய ஆட்சி பெற்று மறைந்தவன். இவன் ‘பரகேசரி’ என்னும் பட்டம் பெற்றவன். இவனுக்கு மனைவியர் பலர் உண்டு. அவருள் வீமன் குந்தவ்வையார், கோதைப் பிராட்டியார் என்னும் இருவரும் நீண்டகாலம் இருந்து பல திருப்பணிகள் செய்தனர். வீமன் குந்தவ்வையார் கீழைச் சாளுக்கிய வீமன் மகள் என்பர் சிலர், அவ்வம்மையார் ‘அரையன் ஆதித்தன் வீமன்’ என்னும் சிற்றரசன் மகள் என்பர் சிலர். அரிஞ்சயன் மேல் பாடிக்கு அருகில் உள்ள ஆற்றூர் என்னும் இடத்தில் இறந்தான்.[2] அந்த இடத்தில் முதல் இராசராசன், இறந்த தன் முன்னோர்க்குப் பள்ளிப்படை (கோவில்) கட்டியதாகக் கல்வெட்டொன்று கூறுகிறது.[3] அரிஞ்சயன் தொண்டை நாட்டைக் கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டுப் போர் நிகழ்த்தி, உயிர் இழந்தனன் போலும்! ‘இவன் பகைவராகிய காட்டுக்குத் தீயை ஒத்தவன்’ என்று திருவாலங்காட்டுப் பட்டயம் பகர்தலால், இவன் போர்த்திறம் பெற்றவன் என்பது தெளிவாகிறது. இவன் ஒரே ஆண்டு அரசனாக இருந்து இறந்தான்.
இரண்டாம் பராந்தகன் (கி.பி.956-973) இவன் அரிஞ்சயன் மகன்; வைதும்பராயன் மகளான கல்யாணிக்குப் பிறந்தவன்; இராசகேசரி என்னும் பட்டம் உடையவன்; இவன் ‘மதுரை கொண்ட இராசகேசரி’ எனப்பட்டான். இவ்வரசன் பட்டம் பெற்றதும், பாண்டிய நாட்டைத் தனித்து ஆட்சி செய்துவந்த வீரபாண்டியனை எதிர்த்தான். சேவூர் என்னும் இடத்திற் கடும்போர் நடந்தது. செந்நீர் ஆறாக ஓடியது; பல யானைகள் மடிந்தன. பராந்தகன் மகனான இரண்டாம் ஆதித்தன் சிறுவனாக இருந்தும், போரில் கலந்து கொண்டான், வீர பாண்டியனுடன் விளையாடினான்’ என்று லீடன் பட்டயம் பகர்கின்றது.[4] இச்செயலை மிகைப்படுத்தியே திருவாலங்காட்டுச் செப்பேடு ‘வீரபாண்டியன் தலை கொண்ட ஆதித்தன்’ என்று கூறியுள்ளது.
சேவூரில் நடந்த போருக்குப் பின், சோழர் பக்கல் நின்று போரிட்ட கொடும்பாளுர்ச்சிற்றரசனான ‘பராந்தக சிறிய வேளார்’ என்பவன் பாண்டிய நாட்டிற்குள் படையொடு சென்று பாண்டியனைக் காட்டிற்குள் புகுமாறு விரட்டினான்; வீர பாண்டியற்குத் துணையாக வந்த இலங்கைப் படைகளைத் தாங்கிக் கொண்டே இலங்கைக்கும் சென்றான்; அங்குக் கடும்போர் செய்து, போர்க்களத்தில் கி.பி.959 -இல் மடிந்தான்.[5]
- ↑ 2. 537, of 1920.
- ↑ 3. S.I.I. Vol.3. No. 17.
- ↑ 4. E.I. Vol. 22. Ieyden Grant, 25, 28.
- ↑ 5. 302 of 1908.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பராந்தகன் மரபினர் - History of Chola - சோழர் வரலாறு - இவன், என்னும், அரிஞ்சயன், பட்டம், வீமன், மகன், இவர், உள்ள, கண்டராதித்தன், பராந்தகன்