சோழர் வரலாறு - கிள்ளி வளவன்
இரவலர்க்கு எளியன்: ‘பானனே, நீ கிள்ளிவளவனது கொடிய வாயிலில் காலம் பார்த்து நிற்க வேண்டுவதில்லை; உடனே உள்ளே போகலாம்’[27] என்று ஆலத்துார் கிழார் பாணனை ஆற்றுப்படுத்தலைக் காண, சோழனது இரவலர்க்கு எளியனாந்தன்மை இற்றென இனிது விளங்குகிறதன்றோ? ‘கலிங்கமும் (ஆடையும்) செல்வமும் கேடின்றி (குறைவின்றி)க் கொடுப்பாயாக; பெரும, நின் நல்லிசை நினைந்து இங்கு வந்தேன்; நின் பீடுகெழு நோன்றாள் பலவாறு பாடுவேன்”[28] என்ற நல் இறையனார் பாடலில், இவனது நல்லிசை அவரை வருமாறு செய்தது என்பதை நோக்குக. இதனால், இவனது வள்ளற்றன்மையும் இரவலர்க்கு எளியனாத் தன்மையும் நன்கு விளங்குகின்றன. இவன் வந்த புலவர்க்கு,
“நெய்யுறப் பொரித்த குய்யுடை நெடுஞ்சூடு மணிக்கலம் நிறைந்த மணனாறு தேறல் பாம்புரித் தன்ன வான்பூங் கலிங்கமொடு மாரியன்ன வண்மையிற் சொரிந்து வேனில் அன்னஎன் வெப்பு நீங்க அருங்கலம் நல்கி யோனே”[29] |
என்பது எருக்காட்டுர்த் தாயங் கண்ணனார் பாடலால் இனிதுணர க் கிடத்தல் காண்க.
புலவர் கையறு நிலை: இப்பெருமகன் அரசனாக இருந்து, பல போர்கள் புரிந்து, புலவர் பலரைப் போற்றி, எளியர் பலரை ஆதரித்து, முத்தமிழை ஒம்பி வளர்த்தமை உன்னி உன்னி, இவன் இறந்தபொழுது புலவர் பாடிய பாக்கள்[30] உள்ளத்தை உருக்குவனவாகும்.
“நமன் வெகுண்டு சோழன் உயிரைக் கொண்டிருத்தல் இயலாது; அவன் பாடுவாரைப் போல நின்று கையால் தொழுது வாழ்த்தி இரந்து உயிர்கொண்டானாதல் வேண்டும்”[31] என்றார் நப்பசலையார். “அறிவற்ற நமனே, நாளும் பலரைப் போரிற்கொன்று நினக்கு நல் விருந்தளித்த புரவலனையே அழைத்துக் கொண்ட உன் செயல் விதையையே குற்றி உண்டார் மூடச் செயலை ஒத்ததாகும். இனி, தினக்கு நாளும் உணவு தருவார் யாவர்?”[32] என்றனர் ஆடுதுறை மாசாத்தனார். “பேரரசனாகிய கிள்ளிவளவனைப் புதைக்கும் தாழியை, வேட்கோவே, என்ன அளவுகொண்டு செய்யப் போகிறாய்? அவன் மிகப் பெரியவனாயிற்றே”[33] என வருந்தினர் ஐயூர் முடவனார்.
“குணதிசை நின்று குடமுதற் செலினும் குடதிசை நின்று குணமுதற் செலினும் வடதிசை நின்று தென்வயிற் செலினும் தென்திசை நின்று குறுகாது நீடினும் யாண்டு நிற்க எள்ளியாம்! வேண்டிய துணர்ந்தோன் தாள்வா ழியவே!”[34] |
என்று கையற்றுப் புலம்பினார் கோவூர்க்கிழார்.
பாக்களால் அறியத்தகுவன: சோழவளநாடு வேள்விகள் மலிந்த நாடு.[35] அக்காலத்தே அறநூல் ஒன்று தமிழகத்தே இருந்தது. அதனைப் புலவர் நன்கறிந்திருந்தனர்.[36] உறையூர் சோழர் கோநகரம் ஆதலின், அங்கு அறங்கூறவையம் இருந்தது.[37] கோட்டை மதிலைச் சூழ ஆழமான அகழி இருந்தது. அதன்கண் முதலைகள் விடப்பட்டிருந்தன. ஊர் காப்பார் இடையாமத்தில் விளக்கு எடுத்துக் கொண்டு ஊர் சுற்றிவருவது வழக்கம்[38] வரகரிசியைப் பாலிற் பெய்து அட்டசோற்றுடன் முயற் கறியை உண்டலும் அக்கால வழக்கம்.[39] இலக்கண முறைமை நிரம்பிய யாழைப் பாணர் வைத்திருந்தனர். அது தேன்போன்ற இனிய நரம்புத் தொடைகளை உடையது.[40] அரசர் முதலானோர் உடலைத் தாழியிற் கவித்தல் மரபு.[41] நாள்தோறும் அரசனைக் காலையில் துயில் எழுப்பல் பாடகர் தொழிலாகும்.[42] பாம்பின் சட்டை போன்ற மெல்லிய ஆடைகள் அக்காலத்தில் தமிழ் நாட்டிற் செய்யப்பட்டன.[43] கிள்ளிவளவன் காலத்திற்கு முற்பட்டதொரு காலத்திருந்த சேரன் இமயமலை மீது வில்பொறி பொறித்திருந்தான்?[44] இச்செய்தி நன்கு கவனித்தற்கு உரியது. இச்சேரன் யாவன்? இவன் காலம் யாது? என்பன ஆராய்தற்குரிய செய்திகள். இவை பொய்யான செய்திகளாக இருத்தல் இயலாது. என்னை? சோழனைப் பாராட்டிப் பாடும் புலவர், சேரனைப் பற்றிய பொய்ச் செய்தியைச் சோழன் முன்கூறத் துணியார் ஆதலின் என்க. புறவிற்காகத் துலைபுக்க சோழன், தூங்கெயில் எறிந்த தொடித் தோட் செம்பியன் என்பவர் கிள்ளிவளவன் முன்னோர்; முன்னவன் அருளுடைமைக்கும் பின்னவன் பெரு வீரத்திற்கும் சுட்டப் பெற்றனர்.
- ↑ 27. புறம் 69
- ↑ 28. புறம், 393
- ↑ 29. புறம் 397
- ↑ 30. புறம் 226, 227, 228, 386.
- ↑ 31. புறம் 226.
- ↑ 32. புறம் 227.
- ↑ 33. புறம் 228.
- ↑ 34. புறம் 386.
- ↑ 35. புறம் 397.
- ↑ 36. புறம் 34.
- ↑ 37. புறம் 39.
- ↑ 38. புறம் 37.
- ↑ 39. புறம் 34.
- ↑ 40. புறம் 69,70.
- ↑ 41. புறம் 228.
- ↑ 42. புறம் 397.
- ↑ 43. புறம் 39.
- ↑ 44. புறம் 37,38,46.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கிள்ளி வளவன் - History of Chola - சோழர் வரலாறு - நின்று, புலவர், செலினும், இவன், சோழன், இரவலர்க்கு